
இந்தியாவின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்று, பொது விநியோகத் திட்டம். அதன் ஆன்மா ரேஷன் கடைகள்தான். மத்திய பட்ஜெட்டில் 5.2% தொகை இதற்கே செலவாகிறது.
தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் வருகிறது. அங்கே ஆட்சியைப் பிடிக்க இப்போதே பா.ஜ.க தலைவர்கள் வரிசையாகச் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அந்த வரிசையில் அங்கே போன மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு ரேஷன் கடையில் வைத்து மாவட்ட கலெக்டர் ஒருவரைக் கேள்விகள் கேட்டது கடந்த வார ஹாட் டாபிக். ‘‘35 ரூபாய் விலையுள்ள ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்களுக்குக் கொடுக்கிறோம். இதற்கு 30 ரூபாய் வரை செலவழிப்பது மத்திய அரசுதான். அந்த மாபெரும் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ரேஷன் கடையில் ஏன் வைக்கவில்லை?'' என்பதுதான் நிதியமைச்சரின் கேள்வி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராம ராவ், ‘‘தெலங்கானா மாநிலம் வரியாக மத்திய அரசுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எங்களுக்குத் திரும்பி வருவது 46 பைசா மட்டுமே. எனவே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ‘தெலங்கானாவுக்கு நன்றி' என்று பேனர் வைக்க வேண்டும்'' என்றார் அவர். இன்னொரு பக்கம் தி.மு.க-வினர் சோஷியல் மீடியாவில், ‘தமிழகம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசிடமிருந்து திரும்பி வருவது 30 பைசா மட்டுமே. எனவே, உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் மு.க.ஸ்டாலின் போட்டோவை வைக்க வேண்டும்' என்று வாதம் செய்கின்றனர்.

இந்த நேரத்தில், முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி பேசிய வீடியோ ஒன்றைத் தேடிப் பிடித்து மறு ஒளிபரப்பு செய்தனர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர். ‘ஏழைகளின் பசியில் அரசியல் செய்கிறது மத்திய அரசு. ரேஷனில் உணவுப்பொருள் கொடுப்பதில் பெயர் சம்பாதிக்கப் பார்க்கிறது. எல்லா மாநிலங்களும்தான் இதற்காகச் செலவு செய்கின்றன. நீங்கள் மட்டும் என்ன உங்கள் மாமா வீட்டிலிருந்தா பணம் எடுத்துவந்து கொடுக்கிறீர்கள்' என்று அந்த வீடியோவில் கேட்கிறார் மோடி. முதல்வர் மோடியின் குரலை மற்ற கட்சிகள் இப்போது எதிரொலிக்க, பிரதமர் மோடியின் குரலாக ஒலிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
பொது விநியோக முறையில் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்புகள், சர்க்கரை என்று தரப்படும் பல்வேறு பொருள்களும் வெவ்வேறு திட்டங்களைச் சார்ந்தவை. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்த ஒரு நெட்வொர்க் மூலம் இவை வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உணவுப்பொருள்கள் மத்தியத் தொகுப்பிலிருந்தே வருகின்றன.
வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ உணவுப்பொருள்கள் கொடுக்கும் அந்த்யோதயா அன்ன யோஜனா, ஏழைக் குடும்பங்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அரிசியும் கோதுமையும் மற்ற பொருள்களும் வழங்குவது ஆகியவை இரண்டுமே பிரதான திட்டங்கள். அரிசியும் கோதுமையும் மூன்று ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர கொரோனா காலத்தில் வறிய குடும்பங்கள் பட்டினியில் தவிப்பதைத் தடுப்பதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை கொரோனா முதல் ஊரடங்கின்போதே அறிவித்தார் மோடி. உலகின் மிகப்பெரிய இலவச உணவு வழங்கல் திட்டம் என்று மோடியே பெருமிதத்துடன் சொல்லும் இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ஐந்து கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. 2020 மார்ச் மாதம் தொடங்கி ஒன்பது மாதங்கள் வழங்கினார்கள். பிறகு 2021 மார்ச் முதல் இந்த செப்டம்பர் வரை இது தொடர்கிறது.
அடுத்தும் ஆறு மாதங்களுக்கு இதைத் தொடரலாமா என்று விவாதம் நடக்கிறது. ஆனால், இதற்குக் கூடுதலாக ரூ.80,000 கோடி செலவாகும் என்பதால் நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் கொரோனா காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல்மீதான வரிகள் உயர்ந்ததற்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அதில் கிடைத்த வரி வருமானத்தை வைத்தே இலவச உணவுப் பொருள்களை மத்திய அரசால் கொடுக்க முடிந்தது. இப்போது பெட்ரோலியப் பொருள்கள்மீதான வரிகளைக் குறைத்திருக்கும் நிலையில், கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைத் தொடர்வது சிரமம் என்பதே செலவுகள் துறையின் வாதம்.
இந்தியாவின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்று, பொது விநியோகத் திட்டம். அதன் ஆன்மா ரேஷன் கடைகள்தான். மத்திய பட்ஜெட்டில் 5.2% தொகை இதற்கே செலவாகிறது. பாதுகாப்பு, போக்குவரத்து, மாநிலங்களுக்கான நிதி, பென்ஷன் ஆகியவற்றுக்கு அடுத்து மத்திய அரசின் ஐந்தாவது பெரிய செலவு இதுதான். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 2,06,831 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் சுமார் 90 கோடி மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கி, பட்டினியை இல்லாமல் செய்வதே இதன் இலக்கு.
ரேஷன் பொருள்கள்மீதான உணவு மானியம் என்பது நேரடியாக ஏழைகளுக்கும் மறைமுகமாக விவசாயிகளுக்கும் நன்மை செய்கிறது. நெல்லுக்கும் கோதுமைக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அந்த விலையில் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை இந்திய உணவுக்கழகம் வாங்குகிறது. அப்படி வாங்கப்பட்ட உணவுப்பொருள்களே ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்கிறது.
இந்திய உணவுக்கழகம் வாங்கும் நெல்லும் கோதுமையும் ரேஷன் கடைகளுக்கு மட்டுமன்றி, மதிய உணவுத் திட்டத்துக்கும் அனுப்பப் படுகின்றன. ராணுவத்தின் உணவுத் தேவைக்கும் இங்கிருந்தே உணவுப்பொருள்கள் போகின்றன.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதற்குமுன்பு வரை ரேஷனில் மானிய விலையில் பொருள்கள் வாங்குவது மக்களின் சட்ட உரிமையாக இருந்ததில்லை. உணவுப் பாதுகாப்பு சட்டம் அந்த உரிமையை மக்களுக்குக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 67 சதவிகிதமாக இருக்கும் ஏழை மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைக்க அந்த சட்டமே வகை செய்தது. அரிசி மற்றும் கோதுமையை ஒவ்வொரு பிரிவினருக்கும் என்னென்ன விலையில் விற்க வேண்டும் என்றும் அந்தச் சட்டமே வரையறுக்கிறது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விலையெல்லாம் அந்தச் சட்டத்தின் அங்கம்தான்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி சுமார் 21.41 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமையை எப்போதும் இந்திய உணவுக்கழகம் தன் இருப்பில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அதைவிட அதிகமாகவே அங்கு இருப்பு இருக்கும். இவற்றைப் பாதுகாப்பாக இருப்பு வைத்துப் பராமரிக்க மட்டுமே ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய உணவுக்கழகம் செலவழிக்கிறது.
பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பதற்காக 2015-ம் ஆண்டு சாந்தகுமார் கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்தக் கமிட்டி அதிரடியான சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்தது.
‘ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 67% பேர் ஏழைகள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு இப்போது சுமார் 80 கோடி பேருக்கு ரேஷனில் மானிய விலையில் உணவுப்பொருள்கள் தரப்படுகின்றன. இத்தனை பேர் ஏழைகள் என்று மதிப்பிடுவதே தவறு. 67% என்பதற்கு பதிலாக 40% பேருக்கு மட்டும் மானிய விலையில் உணவுப்பொருள்கள் தரலாம். மற்றவர்களுக்குக் கொள்முதல் விலையில் பாதியை விலையாக நிர்ணயிக்கலாம்.
உண்மையான பயனாளிகளுக்குப் பதிலாக வேறு யார் யாருக்கோ ரேஷன் பொருள்கள் செல்வதைக் கண்காணிப்பதோ, தடுப்பதோ சவாலாக இருக்கிறது. அதனால், உணவு மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்யலாம். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும்' என்று சாந்தகுமார் கமிட்டி அறிக்கை தந்தது.
ஒருவேளை அதை அமல்படுத்தினால், சுமார் 38 கோடி பேருக்கு ரேஷனில் மானிய விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்காமல் போகலாம். அது மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதால்தான் மத்திய அரசு தயங்குகிறது.

மானிய விலையில் ஏழைகளுக்கு உணவுப்பொருள்கள் ரேஷனில் கிடைக்க, நாம் எல்லோரும் செலுத்தும் வரிகளே காரணம். எனவே, மத்திய அரசோ, மாநில அரசோ அங்கு ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொள்வதில் நியாயமே இல்லை. வேண்டுமானால், ‘இந்தியப் பொதுஜனம்' என்று ஓர் உருவத்தை உருவாக்கி, அவர் படத்தை இந்தியா முழுக்க எல்லா ரேஷன் கடைகளிலும் வைக்கலாம்.
இப்போது தெலங்கானாவில் நிகழ்ந்த இதேபோன்ற விவாதம் முன்பு தமிழகத்திலும் நடந்தது. அது நீதிமன்றத்துக்கும் போனது. திருப்பூர் மாவட்டம் ஆனைக்கடவு கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தங்கள் பகுதி ரேஷன் கடை இருக்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தார். அதை தி.மு.க-வினர் அகற்றிவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர், ‘அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், ரேஷன் கடைகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் படங்களை வைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘மத்திய அரசின் எல்லா நலத் திட்டங்களும் மாநில அரசின் இந்த அலுவலகங்கள் வழியாகவே மக்களைச் சென்றடைகின்றன. எனவே, இங்கெல்லாம் பிரதமர் புகைப்படம் இருக்க வேண்டும்' என்பது அவர் வாதம்.
இதேபோல கடலூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற பா.ஜ.க தொண்டரும் பொதுநல வழக்கு ஒன்றைப் போட்டார். ‘எல்லா மாநில அரசு அலுவலகங்களிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்' என்பது அவர் வழக்கு.
2021 ஏப்ரல் 7-ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இதை விசாரித்தது. ‘வழக்கில் குறிப்பிட்டுள்ள எல்லோரது புகைப்படங்களையும் அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று அரசு அறிவிக்கை எதுவும் இல்லை. ஒவ்வொரு அரசு அலுவலகமும் சட்டப்படி இதில் முடிவுகள் எடுத்துக்கொள்ளலாம்' என்று நீதிபதிகள் கூறினர்.
எனவே, மத்திய அரசே இப்படி ஒரு சட்டம் போட்டுவிட்டால், மத்திய அமைச்சரே வீதியில் இறங்கி வாதிட வேண்டிய அவசியம் இருக்காது.