சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தீர்மானிக்க வைத்த தீபாவளி சந்திப்பு!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தேர்தலுக்குத் தேர்தல் ‘வாய்ஸ் தருகிறாரா’ என எதிர்பார்த்த எல்லாக் கட்சிகளுமே கிட்டத்தட்ட டயர்ட் ஆகிக் கிடக்கிற சூழலில், இதோ மீண்டும் ரஜினி அரசியல் பரபரப்பு!

‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என பன்ச் பேசிப் பல வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்தது ரஜினி அரசியல். இவ்வளவு காலமாக ‘வரவில்லை’ எனத் தவிர்த்து வந்தவர், இப்போது வராமல் இருப்பதற்கான காரணங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் என்பது மட்டுமே இதில் லேட்டஸ்ட்!

‘‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது’’ என 1996 தேர்தல் சமயத்தில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு கேட்டு ஆக்ரோஷமாகப் பேசிய ரஜினி, அதே சூட்டோடு தன் ரசிகர் படையைத் திரட்டிக் கட்சியைத் தொடங்கியிருந்தால், இந்நேரம் தன் விருப்பத்துக்குரிய ‘ஆன்மிக அரசியலில் பாதிக்கிணறு தாண்டியிருக்கலாமோ என்னவோ? ஆனால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத 2020-லும் ‘அவர் வருவாரா வர மாட்டாரா’ என்கிற பாட்டையே பாட வைத்துக்கொண்டிருக்கிறது காலம்.

தேர்தலுக்குத் தேர்தல் ‘வாய்ஸ் தருகிறாரா’ என எதிர்பார்த்த எல்லாக் கட்சிகளுமே கிட்டத்தட்ட டயர்ட் ஆகிக் கிடக்கிற சூழலில், இதோ மீண்டும் ரஜினி அரசியல் பரபரப்பு!

தீர்மானிக்க வைத்த தீபாவளி சந்திப்பு!

தனது ஆன்மிக குருவான பாபாஜி அவதரித்த கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திர நாளான நவம்பர் 30, காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார் ரஜினி. கிட்டத்தட்ட தமிழகமே தேர்தல் மூடுக்கு வந்திருக்கும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு விசிட் அடித்த சில தினங்களில் நடந்த சந்திப்பு என்பதால், ரசிகர் மன்ற வட்டாரத்தில் கூடுதலான எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இரண்டு மணிநேரத்தில் மொத்த நிகழ்ச்சியையும் முடித்து ரஜினி போயஸ் கார்டன் திரும்பியபோதே, அங்கு குழுமியிருந்த ரசிகர்களின் முகத்தில் கவலை ரேகைகளைக் காண முடிந்தது.

இந்த திடீர் சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்தோம். ‘‘கட்சி தொடங்கறது பத்தி 2017-ல் தலைவர் அறிவிச்சது முதலே தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிட்டோம். எல்லாத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிக்கு ஆள் போட்டோம். ‘அதைத் தவிர வேற எந்த அரசியல் நடவடிக்கையும் வேணாம். சட்டசபைத் தேர்தலுக்குச் சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி வேலைகளைத் தீவிரப்படுத்தினா போதும்’னு அப்போ சொல்லியிருந்தாங்க. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாசம் நிர்வாகிகள் முழு உற்சாகத்துடன் வேலைகளில் இறங்கினாங்க. இந்தச் சூழல்லதான் கொரோனா, அதைத் தொடர்ந்து ஊரடங்கு வந்துச்சு. அதனால தேர்தல் ஆயத்தப் பணிகள் பாதிக்கப்பட்டுச்சு. ஆனாலும் ‘கொரோனா நிவாரணப் பணிகளை விடாமச் செய்யுங்க’ன்னு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதுக்குக் கட்டுப்பட்டு இந்த தேதி வரைக்கும் அந்த வேலைகளை நாங்க செய்துட்டுதான் இருக்கோம்’’ என்கிற அந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி, கூடுதலாக இன்னொரு தகவலையும் தந்தார்.

அது, ‘‘கொரோனா பிரச்னை இல்லையென்றால் இந்த நவம்பரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நேரம் பரபரப்பாக அந்த மாநாட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்திருப்போம்’’ என்பதுதான்.

பொதுவாக ரஜினியின் நடை எப்போதுமே சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். ஆனால், அரசியல் பயணத்திற்கான அடி மட்டும் அப்படி இல்லை. அதை இன்னும் சலனப்படுத்திய முதல் நிகழ்வாக மன்ற நிர்வாகிகள் குறிப்பிடுவது, கூட்டணி நிர்பந்தத்தைத்தான்.

‘யாரையும் பகைக்காமல் நாகரிகமான ஓர் அரசியலை உருவாக்க தனிக்கட்சிதான் சிறந்தது’ என முடிவு செய்து தெளிவாக இருந்தவரைக் குழப்பிவிட்டுக் கூட்டணிக்கு முயற்சி நடந்தபோதுதான், ‘‘எனக்கே சாயம் பூச முயற்சி செய்யறாங்க. நான் சிக்க மாட்டேன்’’ என வெளிப்படையாகச் சொன்னதெல்லாம் நடந்ததாம். ஒரு கட்டத்தில் அப்போதைக்கு நெருக்கடியிலிருந்து தப்பிக்க ‘‘பீகார் தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம்’’ என்றாராம்.

‘இதற்கிடையே ரஜினியின் உடல்நிலை குறித்து சில தினங்களுக்கு முன் பரவிய தகவல்களிலும் அரசியல் இருக்கிறது’ எனச் சொல்லி அதிர வைக்கிறார்கள் சில நிர்வாகிகள். ‘‘ஒருவேளை கொரோனா அச்சம் தீர்ந்துவிட்டாலும், ரஜினி மறுபடியும் வேகமெடுக்கக் கூடாது எனத் திட்டமிட்ட சிலரின் வேலை அது’’ என்கிறார்கள் அவர்கள்.

தீர்மானிக்க வைத்த தீபாவளி சந்திப்பு!

ஒருபுறம் கொரோனாச் சூழலும் உடல்நிலை குறித்துத் தாறுமாறாகப் பரவிய தகவலும் நோகடித்தது என்றால், இன்னொரு புறம் ‘‘அதான் பீகார் எலெக்‌ஷன் முடிஞ்சிடுச்சுல்ல” என மறுபடியும் வந்த மத்திய அழுத்தமும் ரஜினியை ரொம்பவே சோர்வடையச் செய்துள்ளது.

இந்தச் சூழலில், ஆரம்பக்காலத்திலிருந்து தன்னுடன் தொடர்பில் இருந்துவரும் நட்பு வட்டத்தில் சிலரைத் தன் வீட்டுக்கே வரவழைத்து, அவர்களது கருத்தைக் கேட்டாராம் ரஜினி. தீபாவளிக்கு அடுத்த சில தினங்களில் நடந்த இந்தச் சந்திப்பில் ரஜினி ஒரு தீர்மானத்துக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.

ரஜினிமீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட அந்த நண்பர்கள், ‘‘அரசியல் உங்களுக்குச் சரிப்பட்டு வராது. இப்ப இருக்கற சூழல்ல, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் ரொம்பவே உக்கிரமா இருக்கும். இறங்குனா ஜெயிக்கணும். அதுக்கு நிறைய பயணம் செய்யணும். அதுக்கு உடல் ஒத்துழைக்கணும். இப்ப பாருங்க, ‘உடல்நிலை சரியில்லை’ங்கிற தகவலைப் பரப்பி விடுறது கூட இருக்கிறவனா அல்லது எதிரியான்னே நம்மால கண்டுபிடிக்க முடியலை. அரசியல் இந்த மாதிரிதான் இருக்கும்.

பேர், புகழ், வசதி, வாய்ப்புகள் எல்லாத்தையுமே பார்த்தாச்சு. பேசாம ‘சினிமா போதும்’னு இருந்துடலாம். அங்க இருக்கிற புகழ் அப்படியே இருக்கு. வருஷத்துக்கொரு படம் போதும். குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட்டபடி நிம்மதியா இருக்கலாம்’’ என்கிற ரீதியில் பேசினார்களாம்.பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ரஜினி தன் கருத்து எதையுமே அங்கு பதிவு செய்யவில்லையாம்.

ரஜினியின் தற்போதைய மன ஓட்டம் குறித்து, அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாகச் சொல்லப்பட்ட தமிழருவி மணியனிடம் கேட்டபோது, ‘‘இப்போதைக்கு நான் எதையும் பேச விரும்பவில்லை’’ எனச் சொல்லிவிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனிப்பட்ட முறையில் ரஜினியுடன் நட்பு பாராட்டி வருபவரும், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தவருமான கே.பி.ராமலிங்கத்திடம் பேசினேன். ‘‘தன் அரசியல் நிலைப்பாடு குறித்து தான் விரும்பிய முடிவைத்தான் ரஜினி எடுப்பார்னு நான் நினைக்கிறேன். யாரும் நிர்பந்தப்படுத்தி எந்தவொரு முடிவையும் எடுக்கறவர் இல்லை அவர்’’ என்றார் ராமலிங்கம்.

‘என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்’ என ரஜினி தெரிவித்திருக்கிறார். தன் மன்ற நிர்வாகிகளுக்கு வழிகாட்டும்விதமாக ஓர் அறிக்கையை ரஜினி வெளியிடுவார் என்று தெரிகிறது. அநேகமாக இதை நீங்கள் படிக்கும் நேரத்திலோ, அல்லது, தன் பிறந்த நாளுக்குப் பிறகோ அதை ரஜினி வெளியிடலாம். ஆனால், ‘அதுகுறித்து மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை’ என்பது மட்டும் உண்மை.