அரசியல்
Published:Updated:

தபால் வாக்கு போன்றதே இது... பா.ஜ.க வெற்றிக்கான உத்தி இது... ரிமோட் வாக்குப்பதிவு திட்ட சர்ச்சை!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

தேர்தல் என்கிற ஜனநாயக நடைமுறையில் நூறு சதவிகிதம் பங்கேற்பு இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் ஒரு முயற்சியை எடுக்கிறது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் புலம்பெயர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. “இது தேர்தல் ஆணையத்தின் செயல் திட்டமல்ல... பா.ஜ.க-வின் தேர்தல் திட்டம்” என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன!

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப்பதிவு 70 சதவிகிதத்தைத் தாண்டுவதில்லை. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 67.4 சதவிகிதம்தான்; 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. வேலை, படிப்பு, திருமணம் போன்ற காரணங்களால் கோடிக்கணக்கான மக்கள், தங்களின் சொந்த ஊர்களைவிட்டு வெளியூர்களிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கிறார்கள். அவர்களால், சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை. இதுதான் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது.

தபால் வாக்கு போன்றதே இது... பா.ஜ.க வெற்றிக்கான உத்தி இது... ரிமோட் வாக்குப்பதிவு திட்ட சர்ச்சை!

அத்தகைய வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வசதியாகத்தான் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் இறங்கியிருக்கிறது. இதற்காக, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (Multi-Constituency Remote Electronic Voting Machine-RVM) தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப் பட்டிருக்கிறது. அது தொடர்பான செயல்முறை விளக்கத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட எட்டு தேசியக் கட்சிகளையும், 57 மாநிலக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் அழைத்திருந்தது. `ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டைப் பார்த்துவிட்டு, தங்கள் கருத்துகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்’ என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி டெல்லியில், ஜனவரி 16-ம் தேதி செயல்முறை விளக்கக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் கூடிய 16 கட்சிகள், ரிமேட் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவெடுத்தன. மேலும், தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கேள்விகளையும் அந்தக் கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ‘இந்திய தேர்தல் ஆணையமும், தலைமைத் தேர்தல் ஆணையரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஏற்கெனவே பல கேள்விகள் இருக்கின்றன. ஹேக்கிங் மூலமாக வங்கிகளின் கணக்குகளிலிருந்தே பணத்தைத் திருட முடியும் என்கிறபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமெல்லாம் எம்மாத்திரம்?’ என்று சந்தேகம் கிளப்புகிறார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

“தேர்தல் என்கிற ஜனநாயக நடைமுறையில் நூறு சதவிகிதம் பங்கேற்பு இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் ஒரு முயற்சியை எடுக்கிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதுதான் நல்லது” என்கிறார் அரசியல் விமர்சகர் ஸ்ரீராம். அவரிடம் நாம் பேசினோம். “புலம்பெயர் தொழிலாளர்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை சில கோடிகளா, சில லட்சங்களா என்பது பிரச்னை அல்ல. ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கும் வழங்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. முதலில் அதை நடைமுறைப்படுத்திப் பார்த்தால்தான் அதில் இருக்கக்கூடிய குறை நிறைகள் தெரியவரும். ஆனால், எடுத்த மாத்திரத்திலேயே அதை எதிர்ப்பது சரியல்ல. அப்படிப் பார்த்தால், தபால் வாக்குகூட ரிமோட் வாக்குதானே... தபால் வாக்குகளை நம்பும் எதிர்க்கட்சிகள், அதன் மேம்பட்ட வடிவமான ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏன் நம்பவில்லை என்று தெரியவில்லை. வாக்கு சதவிகிதம் உயர்ந்தால், அது பா.ஜ.க-வுக்குத்தான் பலனளிக்கும் என்று நினைப்பது குறுகிய மனப்பான்மை என்றுதான் பார்க்கிறேன்” என்றார் அவர்.

“புலம்பெயர் வாக்காளர் என்பவர் யார் என்பதற்கு வரையறை என்ன... புலம்பெயர் வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்... அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற அடிப்படைத் தரவுகள் இல்லை. அப்படியிருக்கும்போது, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் என்று மெஷினைத் தூக்கிக்கொண்டு வந்தால் என்ன அர்த்தம்....” என்று கேள்விகளை அடுக்குகிறார், தேர்தலுக்கான குடிமக்கள் அமைப்பின் (Citizenship Commission of Election) தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம். அவரிடம் நாம் பேசினோம்.

ஸ்ரீராம், தேவசகாயம்
ஸ்ரீராம், தேவசகாயம்

“கொரோனாவால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் சென்றார்கள். அவர்கள் பற்றிய எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்களைப் பற்றிய எந்தப் புள்ளிவிவரமும் இல்லை என்று ஆட்சியாளர்கள் கையை விரித்தார்கள். இப்போது, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுவர முயல்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் புலம்பெயர் வாக்காளர்கள் பற்றிய அடிப்படை விவரங்களை அல்லவா ஆய்வுசெய்து திரட்ட வேண்டும்... அப்புறம்தான் மெஷினெல்லாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றில் எதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டுமென்று நாங்கள் பட்டியலிட்டு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம். அதை முதலில் தேர்தல் ஆணையம் சரிசெய்ய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான ஓர் உத்தியாகத்தான் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுவருகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்கிறார் எம்.ஜி.தேவசகாயம்.

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை ஜனவரி 31-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் முன்பு கூறியிருந்தது. தற்போது எதிர்ப்பு கிளம்பியதால், வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து நேர்மையுடன் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!