கட்டுரைகள்
Published:Updated:

அதிகரிக்கும் சாலை விபத்துகள்... கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

சாலை விபத்து
பிரீமியம் ஸ்டோரி
News
சாலை விபத்து

‘தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 40 - 45 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஆண் - பெண் பேதமில்லை.

சாலை விபத்துகள் திட்டமிட்டு நடப்பதல்ல என்றாலும், சாலை விதிகள் மீறப்படுதல், அலட்சியம் போன்ற பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றன. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பணியாளர் ஷோபனா சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் நிலை தடுமாறி விழுந்த அவர்மீது லாரி ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்கு மோசமான சாலையே காரணம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பொதுவாகவே சாலை விபத்துக்கான காரணிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி சாலைப் பாதுகாப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னையைச் சேர்ந்த R safe அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

‘‘தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 40 - 45 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஆண் - பெண் பேதமில்லை. ஆண்களைக் காட்டிலும் வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவே, பெண்கள் விபத்துக்குள்ளாகையில் அது பெரிதாகத் தெரிகிறது. நாம் வாகன ஓட்டிகள் என பொதுவாகத்தான் இதனை அணுக வேண்டும்.

Iகிருஷ்ணமூர்த்தி
Iகிருஷ்ணமூர்த்தி

மனிதத் தவறுகள், சாலைக் குறைபாடு, வாகனக் குறைபாடு, சுற்றுச்சூழல் ஒழுங்கின்மை ஆகிய 4 காரணிகளை விபத்துக்கு முக்கியமானவையாகக் கருதலாம். இந்தக் காரணிகளில் மனிதத் தவறுகள்தான் 85% விபத்துகளுக்குக் காரணமாகின்றன. ஹெல்மெட் மற்றம் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, நோ என்ட்ரி மற்றும் சாலையின் வலப்புறத்தில் வாகனம் ஓட்டுவது, அதிவேகப் பயணம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எனப் போக்குவரத்து விதிகளை மீறுவது மனிதத் தவறுகள். கவனக்குறைவு மற்றும் கவனச்சிதறல் ஆகியவையும் இதில் அடக்கம். செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலையைப் பார்க்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி வண்டி ஓட்டுவது எல்லாம் கவனத்தைச் சிதறடிப்பவை. இதுபோன்ற மனிதத் தவறுகளுக்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும். தங்கள் வாகனக் குறைபாட்டை, வாகன ஓட்டிகள் சரிசெய்து கொள்ள வேண்டும். பிரேக் பிடிக்காததால் ஏற்படும் விபத்துகளும் உண்டு.

அதிகரிக்கும் சாலை விபத்துகள்... கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

அடுத்ததாக, சூழல் ஒழுங்கின்மை. சாலை ஓரத்தில் உள்ள குப்பைத்தொட்டியைச் சுற்றிலும் பன்றி, நாய்கள் உலாவுவது, மாடுகள் சாலையிலேயே திரிவது, சாலையில் பள்ளம் தோண்டி அதற்கான எச்சரிக்கையை முறையாக ஏற்படுத்தாதது உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஒழுங்கின்மை விபத்துக்குக் காரணமாகிறது. குண்டும் குழியுமாகப் பழுதான சாலை, குறிப்பிட்ட உயரத்துக்கும் அதிகமாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை போன்ற சாலைக் குறைபாடுகளும் விபத்துக்கு முக்கிய காரணங்கள்” என்றவர் தீர்வுகள் குறித்துப் பேசினார்.

‘‘மேற்சொன்ன காரணிகளில் வாகனக் குறைபாட்டைத் தவிர, மற்ற மூன்று காரணிகளுக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும். சாலைக் குறைபாடு மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்கின்மை ஆகியவற்றை அரசு கண்காணித்துச் சரிப்படுத்த வேண்டும். மனிதத் தவறுகளைக் களைய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர்மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனவரி 14 முதல் பிப்ரவரி 14 வரை சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கிறார்கள். அப்படியல்லாமல் 365 நாள்களும் சாலைப் பாதுகாப்புக்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துக் காவல்துறையினர் திடீரென கடும் நடவடிக்கை எடுத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பார்கள்; பிறகு பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதாகத்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது. இது மாற வேண்டும்.

அதிகரிக்கும் சாலை விபத்துகள்... கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருடையது?

பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, பாதசாரிகளும் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். நடைமேடையில்தான் நடக்க வேண்டும். நடைமேடை இல்லாத இடங்களில் வலப்புறத்தில் நடக்க வேண்டும். இடப்புறமாக நடக்கையில் பின்னால் வரும் வாகனங்களை கவனிக்க முடியாது. இதுபோன்று பொதுமக்கள் தெரிந்துகொள்ள நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் பயிற்றுவித்தல் வழியாகத்தான் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.