அரசியல்
அலசல்
Published:Updated:

ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா?

மோடி, புதின்
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, புதின்

உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது

`உக்ரைன், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் சேரத் துடிக்கிறது. இது எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்று கூறி பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரைன்மீது போர் தொடுத்தது ரஷ்யா. ஓராண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தப் போர், சுமார் 18,000 பேரை பலிகொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஐ.நா. ரஷ்யா - உக்ரைன் மோதலில் தற்போது நடப்பது என்ன?

பைடனின் திடீர் உக்ரைன் பயணம்!

பிப்ரவரி 20 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீரென உக்ரைனுக்கு நேரடியாகச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பரபரப்பைக் கிளப்பினார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``போலந்து நாட்டுக்குச் செல்லவிருந்த அதிபர் பைடன், திடீரென திட்டத்தை மாற்றிக்கொண்டு உக்ரைனுக்குச் சென்றிருக்கிறார்’’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் ரஷ்யாவின் கவனத்தை திசைதிருப்பவே லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு, ரைட்டில் திரும்பியிருக்கிறார் பைடன் என்கின்றன அந்த நாட்டு ஊடகங்கள். ``உக்ரைன் பலவீனமாக இருக்கிறது; மேற்குலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன என்று முதலில் புதின் நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது பொய்த்துவிட்டது’’ என்று அங்கு கூறியிருக்கிறார் பைடன்.

ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா?

ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கும் சீனா?!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ``உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் உட்பட பல்வேறு உதவிகளை சீனா வழங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி சீனா உதவினால், அது மோசமான விளைவுகளை உருவாக்கும்’’ என எச்சரித்திருக்கிறார். இதற்கிடையில், ``தங்களது நாட்டின் ஒரு பகுதியில், தாங்களே அணு ஆயுதத் தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு, எங்கள் நாட்டின் மீது பழி போடத் திட்டமிட்டிருக்கிறது உக்ரைன்’’ என்று ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. இதைத் திட்டவட்டமாக மறுக்கும் உக்ரைன், ``எங்கள் நாட்டின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தப்போகிறார்கள். அந்தப் பழி அவர்கள்மீது விழுந்துவிடாமல் இருக்கவே இந்த நாடகம்’’ என்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ, ``உக்ரைன்மீது தாக்குதல் நடத்துவதோடு புதின் நிறுத்தப்போவதில்லை, சோவியத் ஒன்றியத்திலிருக்கும் அனைத்து நாடுகள்மீதும் அவர் போர் தொடுப்பார்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அர்ஜென்டினா சென்ற 5,000 கர்ப்பிணிகள்!

கடந்த மூன்று மாத காலத்துக்குள் ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் 5,000 பெண்கள், தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறது அர்ஜென்டினா நாட்டின் தேசிய குடிப்பெயர்வு முகமை. `இங்கு வந்த பெண்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பவர்கள். இந்த 5,000 பேரில், 33 பேர் ஒரே விமானத்தில் அர்ஜென்டினாவுக்குள் வந்திருக்கின்றனர்’ என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முதலில் அர்ஜென்டினாவுக்குள் நுழைந்த பெண்கள், தங்களைச் சுற்றுலாப்பயணிகள் என்றே தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் வந்ததை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ``உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், எங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமை பெறுவதற்காகவே இங்கு வந்தோம். ரஷ்ய பாஸ்போர்ட்டைக் காட்டிலும், அர்ஜென்டினா பாஸ்போர்ட் சுதந்திரமானது என்பதாலேயே இங்கு வந்தோம்’’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருந்தால் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்லலாம். ஆனால், அர்ஜென்டினா பாஸ்போர்ட் மூலம் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

போரை நிறுத்த முயல்கிறாரா மோடி?

கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்த பிரதமர் மோடி, ``இது போருக்கான காலமில்லை, பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணுங்கள்’’ என வலியுறுத்தினார். இந்த நிலையில், ரஷ்யாவுக்குச் சென்ற இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிப்ரவரி 8 அன்று, புதினை தனியாகச் சந்தித்துப் பேசினார். பொதுவாக மற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத புதின், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைச் சந்தித்தது பேசுபொருளானது. இதற்கிடையில், `இந்தப் போரை நிறுத்த இந்தியப் பிரதமர் எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்’ என்றது அமெரிக்கா. மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில், ஜி20 மாநாட்டுக்கான முன்னோட்டமாக வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொள்கிறார். அந்தச் சமயத்தில், இந்தியாவின் சார்பில் போரை நிறுத்தச் சொல்லி ரஷ்யாவிடம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதற்கு முன்பாக, இரு நாடுகளுக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி, இத்தாலி, போலந்து நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஓராண்டை நெருங்கும் போர்... உக்ரைனில் பைடன்... மோதலை நிறுத்த மோடியால் முடியுமா?

அடங்காத தலைவர்கள்!

இந்தப் போரில் எந்த நாட்டின் கையும் ஓங்கவில்லை என்பதால், இப்போதைக்கு போர் முடிவடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ``உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல் திணறுகிறது ரஷ்யா. ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்துகிறது உக்ரைன். எனவே, இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. ரஷ்ய அதிபர் புதின், தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால் அது தோல்விக்குச் சமம் எனக் கருதுகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ, பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் தெரிவித்தால், மேற்குலக நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என அஞ்சுகிறார். இருவரும் இப்படியே நினைத்துக்கொண்டிருந்தால், 2023 முழுவதும் இந்தப் போர் தொடரலாம். இந்தப் போர் காரணமாக மற்ற நாடுகளும் தங்களிடம் ஆயுதங்கள் வாங்கத் தொடங்கியிருப்பதால், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை விரும்புவதாகத் தெரியவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வருகிறதோ... அது உலக நாடுகளுக்கு அவ்வளவு நல்லது’’ என்கின்றனர்.

சீக்கிரம் முடியட்டும்..!