பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது

2017 பிப்ரவரி 15 -

ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் போட்ட தினம் மட்டுமல்ல... பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போன நாளும்கூட. இப்போது மூன்றாம் ஆண்டு நினைவு தினம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதிதான் சசிகலா விடுதலை ஆவார் எனப் பலரும் நினைக்க... இந்த ஆண்டே சிறையிலிருந்து சிறகை விரிக்கத் தயாராகிறார்.

வழக்கு விசாரணையில் சென்னையில் 13 நாள்களும் குன்ஹா தீர்ப்புக்குப் பிறகு பெங்களூரில் 22 நாள்களும் என சசிகலா 35 நாள்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவை தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும். ‘தண்டனையில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தைச் சிறையில் கழித்து, நன்னடத்தை விதிகளையும் பின்பற்றியிருந்தால் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்கிறது கர்நாடகச் சிறைத்துறை விதிகள். ‘`கர்நாடகச் சிறைத்துறை வழங்கும் நிவாரண நாள்கள் 361 தினங்கள். ஏற்கெனவே அனுபவித்த 35 நாள்களைக் கூட்டினால் 2019 நவம்பரிலேயே சசிகலா விடுதலை ஆகியிருக்க வேண்டும். கூடுதலாகவே இப்போது சிறையில் இருந்துவருகிறார். இதனால், அவர் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’’ என்கிறது சசிகலா தரப்பு.

2021 மே மாதம் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறும் சூழலில், சசிகலாவின் விடுதலை முக்கியத்துவம் பெறுகிறது. அவரை விடுதலை செய்ய அ.தி.மு.க., பி.ஜே.பி கட்சிகள் விரும்பாது. மற்றவர்களைவிட எடப்பாடிதான் முதலில் எதிர்ப்பார். ‘`தேர்தல் முடிந்த பிறகோ அல்லது நடைமுறைகள் எல்லாம் தொடங்கிய பிறகோ சசிகலாவை விடுதலை செய்யுங்கள்’’ என பி.ஜே.பி-யிடம் எடப்பாடி வேண்டிக்கொள்வார்.

சசிகலா
சசிகலா

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்துகொடுப்பதற்காகச் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சத்யநாராயணாவுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகார் விசாரணையில் இருக்கிறது. பண மதிப்பிழப்பின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சசிகலா வாங்கிக் குவித்த 1,674 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்குவதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனையெல்லாம் தூசு தட்டி, சசிகலாவைச் சிறையிலிருந்து வெளியே வரவிடாமல் தடுக்க முயல்வார்கள். சசிகலா சமாதானமாகப் போனால் நிலைமை மாறலாம். எது எப்படியோ தேர்தல் நேரத்தில் அவர் வெளியே வரக்கூடாது என்பதில் அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும் இருவேறு கருத்துகள் கிடையாது.

`கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே மக்கள் பிரதிநிதி பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்தபிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது’ என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். சசிகலா வெளியே வந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா? அதற்கான விடை சிக்கிம் மாநிலத்தில் இருக்கிறது.

தமிழகத்தைப் போலவே ‘தாமரை’ மலராத பூமி சிக்கிம்! 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகக் கோலோச்சிக்கொண்டிருந்த `சிக்கிம் ஜனநாயக முன்னணி’ தலைவர் பவன் குமார் சாம்லிங்கை வீழ்த்தி, `சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா’வின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வரானார். முதல்வரானாரே தவிர, தமாங் எம்.எல்.ஏ ஆகவில்லை. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அவரால் போட்டியிட முடியவில்லை. அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனால்தான், அவரால் முதல்வராக நீடிக்க முடியும் என்ற நிலை.

தமாங் 1996-97-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது கறவை மாடுகள் வழங்கும் திட்ட ஊழலில் சிக்கி, ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

2019 சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி’ 15 இடங்களில் வென்று எதிர்க்கட்சி ஆனது. `ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் கட்சியைக் கைப்பற்று’ என்கிற சூத்திரத்தை சிக்கிமிலும் செய்தது பி.ஜே.பி. தேர்தல் முடிந்த இரண்டே மாதத்தில் `சிக்கிம் ஜனநாயக முன்னணி’யின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் ஐக்கியமானார்கள். இதனால், பவன்குமார் சாம்லிங்கின் `சிக்கிம் ஜனநாயக முன்னணி’ எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. அடுத்து ஆளுங்கட்சிப் பக்கம் வலையை வீசியது.

மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, முதல்வர் தமாங்குக்குத் தாராளமாகக் கிடைத்தது. விளைவு, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார் தமாங். `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றிய சட்டத்தில் தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என்கிறார். தேர்தல் ஆணையமும் ‘சரிதான்’ என ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கிறது.

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001 தேர்தலில் போட்டியிட முடியவில்லை. தேர்தலில் அ.தி.மு.க வென்று, ஆட்சியைப் பிடித்தது. கவர்னராக இருந்த பாத்திமா பீவி ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தபோது எதிர்ப்பு கிளம்பியது. `தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது தவறு. எம்.எல்.ஏ ஆக முடியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை 2001 செப்டம்பர் 21-ம் தேதி பறித்தது உச்ச நீதிமன்றம். `ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப் பட்டது செல்லாது’ என 18 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உரக்கச் சொன்ன விஷயம், சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியவில்லை எனச் சொன்னால் அரசியல் அரிச்சுவடி தெரியாத வர்கள்கூட நம்பமாட்டார்கள்.

வழக்கு தொடர்பாக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விதிக்கப்படும் கால அளவைக் குறைக்கவோ, ரத்துசெய்யவோ 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. அதைத்தான் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி யிருக்கிறது என்ற வாதம் வைக்கப்பட்டாலும் நியாயமான அணுகுமுறையா இது? பி.ஜே.பி கூட்டணிக் கட்சிக்காக தமாங்குக்குத் தரப்பட்ட சலுகையை சசிகலாவும் கேட்பார்.

சசிகலா வெளியே வந்த நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்திய முன்னுதாரணம்;

பி.ஜே.பி ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாமீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது 1996-ம் ஆண்டு. `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. 1996-ம் ஆண்டு போடப் பட்ட வழக்குக்குப் பிறகு நிறைவேற்றிய சட்டத்தைக்கொண்டு தண்டனை விதிக்க முடியாது’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளைத் தட்டுவார் சசிகலா.

கிரிமினல் அரசியலை எதிர்ப்பதாக பாவ்லா காட்டும் பா.ஜ.க தங்கள் நலனுக்காக கிரிமினல் அரசியலை ஊக்குவிப்பது சசிகலாவுக்கு சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விடுதலை எப்போது?

சசிகலா விடுதலை ஆவது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் என்ன சொல்கிறார்?

சசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா?

‘`சிறை விதிகள் படியும் சட்டப்படியும் சசிகலா முன்கூட்டியே விடுதலை அடைவதற்கான வாய்ப்புகள் இருக் கின்றன. அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளும் சாதகமாக இருக்கின்றன. விடுதலை ஆவதற்கான நாளைக் கடந்து, மூன்று மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். விரைவில் அவர் வெளியே வருவார் என வழக்கறிஞர் முறையில் எதிர்பார்க்கிறேன்.’’