சமூகம்
Published:Updated:

ஒன் பை டூ

இடும்பாவனம் கார்த்திக் - எம்.எம்.அப்துல்லா
News
இடும்பாவனம் கார்த்திக் - எம்.எம்.அப்துல்லா

“பா.ஜ.க-வைவிட தி.மு.க-தான் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு விசுவாசமாக இருக்கிறது” என்ற சீமானின் கருத்து?

இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், நா.த.க

``உண்மையைச் சொல்லியிருக்கிறார். வெறும் பேச்சளவில் பா.ஜ.க எதிர்ப்பு என்கிறது தி.மு.க. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே முழுநேர வேலையாகச் செய்துகொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி பேசிய வாய்கள், இப்போது மாநிலத்துக்குள் என்.ஐ.ஏ அலுவலகம் திறக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. கோவை வெடி விபத்து வழக்கை முதல் நிலையிலேயே என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கிறார்கள். சிறைக் கொட்டடியில் அடைபட்டுக்கிடக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க ஒப்புக்கு ஒரு குழு அமைத்தார்கள். பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தந்த மாநில வரம்பில் விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் ரத்து செய்திருக்கின்றன. தி.மு.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் கூறுகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்துவதும் இதே திமுக-தான். தெலங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்கள். அப்படி தமிழக ஆளுநரை இவர்களால் புறக்கணிக்க முடியுமா?’’

இடும்பாவனம் கார்த்திக் - எம்.எம்.அப்துல்லா
இடும்பாவனம் கார்த்திக் - எம்.எம்.அப்துல்லா

எம்.எம்.அப்துல்லா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க

``சீமான் உளறுவதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நாம் தமிழர் கட்சி என்பது பா.ஜ.க-வின் ‘பி’ டீம். இது ஊரறிந்த விஷயம். எதையெல்லாம் தங்களால் நேரடியாகச் செய்ய முடியாதோ, அதையெல்லாம் தங்கள் ‘பி’ டீமை வைத்து சாதித்துக்கொள்வது காவிகளின் வாடிக்கை. என்.ஐ.ஏ என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பு. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ இருக்கிறது. கொள்கைகள் வெவ்வேறாக இருந்தபோதும், இந்தியாவின் பாதுகாப்பில் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்காமலிருக்க முடியாது. நாம் தமிழர் கட்சியினர் நம்புவதுபோல தமிழகம் ஒன்றும் தனி நாடு அல்ல. தமிழக அரசு என்ன செய்தாலும், பா.ஜ.க அரசு அதில் குற்றம் காணக் காத்துக்கிடப்பதாலேயே கோவை வெடி விபத்து வழக்கை முதலிலேயே என்.ஐ.ஏ-விடம் வழங்கினோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல கூறுகளையே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதைக் கூறு இல்லாத நாம் தமிழர் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆளுநரைச் சட்டரீதியாகப் புறக்கணிக்க முடியாததால்தான் மாநில சுயாட்சி கேட்கிறோம்!’’