தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஸ்டார்ட்அப்... சக்சஸ் - பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு!

ஸ்டார்ட்அப்... சக்சஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!

`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

  • பணத்தின் மீது உங்களுக்கு ஆர்வமில்லையென்றால் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்!

  • ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க முதல் நாளிலேயே அனைத்தும் தெரிய வேண்டிய அவசியமில்லை!

ம்... நாம் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல வேண்டியுள்ளது. காரின் முகப்பு விளக்கின் வெளிச்சம் மதுரைவரை தெரிய வேண்டும் என்று நாம் விரும்பினால், நம் பயணத்தை இப்போது தொடங்க முடியாது.

ஸ்டார்ட்அப்... சக்சஸ் - பெண்களுக்கு இயற்கையிலேயே 
ஸ்டார்ட்அப் திறன் உண்டு!

இதுவரை 500 கி.மீ தொலைவு வரை தெரியும் அளவுக்கு முகப்பு விளக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், 50 மீட்டர் தொலைவு தெளிவாகத் தெரிந்தவுடன் முதல் கியரை மாற்றி முயற்சி செய்தோமானால், அடுத்தடுத்து 50 மீட்டர் தொலைவுக்குப் பாதை தெரியும். ஸ்டார்ட்அப் தொழிலிலும் இதே நிலைதான். ஒவ்வொரு சிறிய தீர்வும் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அதுபோல, மிகப்பெரிய அல்லது வளர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பார்த்து அச்சம்கொள்ள வேண்டாம். அவர்களும் நம்மைப்போல வளர்ந்தவர்களே!

பணப்பிரச்னையா? இல்லவே இல்லை!

`இந்த உலகில் யாருக்குமே பணப்பிரச்னை இல்லை. சிறந்த யோசனைகள் கிடைப்பதே பிரச்னையாக உள்ளது' என்று அன்றே கூறியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான ராபர்ட் ஹெச்.ஸ்குல்லர். இந்தக் கூற்று ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு ஸ்டார்ட்அப் என்பது பல பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவாக அமையும். `இது நம் வாழ்வையே மாற்றும்' என்று உணர்ந்தபிறகும் அந்தத் தொழிலைத் தொடங்க முனையாமல் இருக்கலாமா? `எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒரு வேலையில் இருந்தால் மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடுமே' எனப் பலர் நினைப்பதுண்டு.

பொதுவாக ஓரிடத்தில் பணிபுரிகிறவர் தன் வேலைநேரம் மற்றும் அதன் பலன் சார்ந்த பொருளாதாரத்தை (Effort Economy) நம்பியே பயணிக்கவேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் முடிவு சார்ந்த பொருளாதாரத்தை (Result Economy) நோக்கியே முன்னேறுகிறார். ஸ்டார்ட்அப் தொழில் முனைவோராக நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் ஒரு பிரச்னையைத் தீர்த்ததற்கான மதிப்புகளாகவோ, வெகுமதியாகவோ கருதலாம். நம் தீர்வே வாடிக்கையாளர்கள் தங்கள் நீண்டகால பிரச்னையில் இருந்து விடுபட வழிவகை செய்கிறது. அதன்மூலம் அந்த சேவையோ, பொருளோ மதிப்புமிக்க (Value) விஷயமாக உணரப்படுகிறது.

பெண்களுக்கு இயற்கையிலேயே 
ஸ்டார்ட்அப் திறன் உண்டு!
பெண்களுக்கு இயற்கையிலேயே ஸ்டார்ட்அப் திறன் உண்டு!

மதிப்புமிக்க ஒன்றை அளிப்பதே ஸ்டார்ட்அப் தொழில்முனைவோரின் இலக்காக இருக்க வேண்டும். அதுவே நீண்டகால வெற்றிக்கு வழிவகுக்கும். அதை விடுத்து குறுகியகால விளைவான பணம் ஈட்டுவதைச் (Making Money) சார்ந்து இருப்பது ஒரு கட்டத்தில் தோல்வியையே கொடுக்கும்.

தனித்துவமிக்க விற்பனை யுக்தியே ஸ்டார்ட்அப் உலகின் வலிமை!

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை லாபகரமாக நடத்துவது என்பது பெரும் பாலானவர்களுக்குச் சவாலாகவே உள்ளது. அந்தத் துறையில் உள்ள அனைத்துத் தொழில்களுமே ஒரே மாதிரியாக (Me too type) இருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். பெரும்பாலும் பல நிறுவனங்களின் பெயர் மட்டுமே வித்தியாசமாக உள்ளது. அவர்களின் விளம்பரங்களும் (Advertisement) சந்தைப்படுத்தப் பயன்படுத்தும் பொருள்களும் (Marketing Material) ஒன்றுபோலவே உள்ளன. சேவையோ (Service), விற்பனைப் பொருளோ (Product) மற்ற போட்டியாளர்களிலிருந்து எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படுகிறது.

இந்தியாவுக்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான யுக்திகள் தேவைப்படுகின்றன. அவை தனித்துவமிக்கவையாக இருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

இப்படியிருந்தால் என்ன ஆகும்? அந்தத் தொழில்முனைவோர் மிகவும் கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார். பல நேரங்களில் ஊழியரின் ஊதியம், வாடகை, இன்னபிற செலவினங்களுக்குச் சிரமப்படும் நிலை ஏற்படக்கூடும். லாபம் (Profit) என்பது மிகவும் அரிதாகிவிடும். பல நிறுவனங்களில் லாபம் இல்லாமலே வரவுக்கும் (Income) செலவுக்கும் (Expense) சரியாக இருக்கும். இந்த மோசமான நிலைக்குக் காரணம், அந்தத் தொழில்முனைவோர் தவிர வேறு யாருமில்லை.

நமக்கான சந்தையில் (Market) மற்றவர் செய்வதையே நாமும் செய்துவிட்டு, `வாடிக்கையாளர் என் பொருளை/சேவையை ஏன் வாங்கவில்லை' என்று கேட்பது எப்படி முறையாகும்? நம்மால் நம் பொருளை / சேவையை வாடிக்கையாளர் பயன்படுத்தியே தீரவேண்டிய தவிர்க்க முடியாத காரணத்தை/சூழ்நிலையை (Compelling Reason) உருவாக்க முடியுமா? முடியும் என்றால் நாம் நிச்சயம் வெற்றியாளர்தான்!

ஸ்டார்ட்அப்... சக்சஸ் - பெண்களுக்கு இயற்கையிலேயே 
ஸ்டார்ட்அப் திறன் உண்டு!

ஆம்... இன்று வெற்றிபெற்ற அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பொருளிலோ, சேவையிலோ வாடிக்கையாளர் அதைப் பயன்படுத்துவதில் தவிர்க்கமுடியாத சூழலை (Unique Selling Proposition) உருவாக்கியுள்ளன. `என் பொருளை ஏன் வாடிக்கையாளர் வாங்க வேண்டும்' என்ற கேள்விக்கு தெளிவான பதிலோடு செயல்படுகின்றன. ஸ்டார்ட்அப் தொழிலின் அடிப்படையே இதுதான். சற்று சிந்தித்துச் செயல்படுத்தினோம் என்றால் அந்த வலிமையான யுக்தியை நம்மாலும் உருவாக்க முடியும். இந்தியாவுக்கு இன்னும் பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான யுக்திகள் தேவைப்படுகின்றன. அவை தனித்துவமிக்க யுக்திகளாக (Unique ideas) இருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். ஒரு ஐடியா பிடித்துவிட்டால் போதும்... அது நம் வாழ்க்கையில் வசந்தத்தையும் பொருளாதார உயர்வையும் நிச்சயம் கொடுக்கும்.

வாடிக்கையாளர்களின் வலியே ஸ்டார்ட்அப்களின் வலிமை!

நம் பொருள்/சேவை வாடிக்கையாளர்களின் பிரச்னையை (Pain) நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை முதலில் மனத்தில் வைப்போம்.

பெண்களிடம் இந்தத் தீர்வுத் திறன் இயற்கையாகவே உள்ளது. பெண்களால் அவர்கள் சார்ந்த துறையில் உள்ள வலி மிகுந்த பகுதிகளை அவர்களது பொருள் / சேவை மூலமாகத் தீர்ப்பதன்மூலம் வெற்றிகரமான ஸ்டார்ட்அப்பை உருவாக்க முடியும்.

தைரியமான உத்தரவாதம் தேவை!

தொழில்முனைவோர் பலர் தங்கள் பொருள் தரமானது (Quality) என்றும் `சிறந்த வாடிக்கையாளர் சேவை அளிப்போம்' (Good customer service) என்றும் பொதுவான உத்தரவாதம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படையில் எந்த நிறுவனமானாலும் தரமான பொருளையும் நல்ல வாடிக்கையாளர் சேவையையும் கொடுக்க வேண்டியது அவசியமே. இதில் பெரிய சிறப்பு ஒன்றும் இல்லை. இதையே தங்களது தாரக மந்திரமாகக் கொள்பவர்களை நினைத்தால் ஆச்சர்யமாகவே உள்ளது. உண்மையில் இது 50 வருடப் பழைய யுக்தி பாணி!

ஸ்டார்ட்அப்... சக்சஸ்!
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உத்தரவாதத்தை மிகத் தைரியமாக அளிக்க வேண்டும். வாடிக்கையாளர் அந்தப் பொருளை ஆர்டர் செய்வதற்கு எந்த ஒரு தயக்கமும் காட்டமுடியாதபடி அது அமைய வேண்டும். உதாரணங்களாக...

  • டெலிவரி இலவசம்.

  • முதல் ஆர்டரில் 30 சதவிகிதம் சலுகை.

  • பொருளைப் பெறும்போது பணம் செலுத்தினால் போதுமானது (Cash On Delivery).

  • நீங்கள் அறிமுகப்படுத்திய நண்பர் வாங்கினால் உங்களுக்கும் அவருக்கும் 20 சதவிகிதம் சலுகை/கேஷ்பேக்.

  • 30 நாள்களுக்குள் பொருள் திருப்தி இல்லை எனில் பணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படும்.

இப்படி வாடிக்கையாளர்களைக் கவரும் யுக்திகளை ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் தொடர்ந்து பயன்படுத்துவது மிக அவசியம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் மிக அருகே நம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எடுத்துச் செல்ல முடியும்.

நேரம் என்பது பணம் அல்ல!

ஒரு ஸ்டார்ட்அப் தொழில்முனைவோராக நமது வருமானம், நாம் எடுத்துக்கொண்ட துறையில் கொண்டுவரும் மாற்றங்களின் மதிப்பை வைத்தே அமையும். மாறாக நாம் அதற்காகச் செலவழித்த நேரத்தை வைத்து உருவாவதில்லை.

வாடிக்கையாளருக்கு நாம் மிகப்பெரிய மதிப்பைக் கொடுத்தோமானால், அவர்கள் வாயிலாக மிக அதிக வருமானம் நமக்குக் கிடைக்கும். வாடிக்கையாளர் விரும்பக்கூடிய மாற்றத்தைத் தரக்கூடிய மதிப்பு அதில் இல்லையெனில் நம் முயற்சி பலனளிக்காது.

எல்லா தொழில்முனைவோருக்கும் அதிக வெகுமதியை அடைவதற்கு ஆசைதான். ஆனால், முனைப்போடு முன் செல்வதற்கு அவர்களில் பலர் தயாராக இல்லை என்பதுதான் பிரச்னை. அவர்கள் விரும்புவது நேரத்துக்கான கூலியைத்தான். ஒரு மணி நேரம் வேலை செய்வது, அந்த நேரத்துக்கான பணத்தைப் பெறுவது என்பது இலக்கை எட்டுவதற்கான வழியல்ல.

பொதுவான தொழில்முறைகளில் உள்ள வெற்றிக் கோட்பாடுகளை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து ஒன்று சேர்த்தாலே போதும். அதுவே ஸ்டார்ட்அப் தொழில்முறையாக உருவாகிவிடும்.

வாருங்கள்... வெற்றிகரமான ஸ்டார்ட்அப் தொழில்முனைவோராகி வீட்டையும் நாட்டையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்!

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அடுத்தடுத்த இதழ்களில்...