அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - கரு.நாகராஜன்

“தேசத்துக்கு எதிராகப் பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு, அரை மணி நேரம் போதும்!” என்ற அண்ணமலையின் பேச்சு?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

“அறிவிருக்கும் யாராவது இப்படி ஒரு கருத்தை முன்வைப்பார்களா... அரைவேக்காட்டுத்தனமாக, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது அண்ணாமலைக்குப் பழகிப்போய்விட்டது. இவர்களுக்கென்று சொல்புத்தியும் கிடையாது, சுயபுத்தியும் கிடையாது. ‘இந்தத் தேசத்துக்கு எதிராகப் பேசக்கூடியவர்கள், தேசத்துக்கு எதிரான சக்திகள்’ என்று யாரைச் சொல்கிறார் அண்ணாமலை... நாட்டின் சொத்தையெல்லாம் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தார்களே அவர்களைச் சொல்கிறாரா... `பா.ஜ.க-வைப் பற்றி யாரும், எதுவும் பேசக் கூடாது’ என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியிருக்கிறார். 20,000 புத்தகங்கள் படித்தேன், இரண்டு லட்சம் வழக்குகள் போட்டேன் என்று சொல்லிக்கொண்டு கற்பனை உலகத்தில் வாழும் அண்ணாமலையின் கருத்துக்கு என்ன பதில் சொல்வது... எத்தனை முறை, எப்படி அடித்தாலும் திருந்தாதவர்களின் கருத்துக்கு என்ன பதில் சொல்வது... இந்த 21-ம் நூற்றாண்டில், ஒருவர் புல்புல் பறவையில் பயணித்தார் என்று சொல்லும் அளவுக்குத்தான் பா.ஜ.க-வினரின் அறிவு இருக்கிறது. பா.ஜ.க ஏதாவது ஒரு மாநிலத்திலாவது அராஜகம் செய்யாமல், நியாயமான முறையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறதா... கலவரத்தைத் தூண்டியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். கடைசிவரை பா.ஜ.க-வினர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எதுவுமே செய்யப்போவது கிடையாது என்பதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.”

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - கரு.நாகராஜன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

``உண்மையைச் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க-வுக்குத் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்தத் தேசத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை, சட்டத்துக்கு முன்பாக எங்களால் கொண்டுவந்து நிறுத்த முடியும். தவறு செய்பவர்களை அடையாளப்படுத்த முடியும் என்பதை அவர் சொல்லியிருக்கிறார். வன்முறை, கலவரம் குறித்து தி.மு.க பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. மக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, கலவரம் செய்வது அனைத்துமே தி.மு.க-வுக்குக் கைவந்த கலை என்பது வரலாறு. மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமையில் இப்படிப் பேசுகிறார்கள். பொய் சொல்வதில் உலக மகா திறமைசாலிகள் தி.மு.க-வினர் என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். அதற்குச் சிறந்த உதாரணம், தேர்தல் சமயத்தில் சொன்ன எந்த வாக்குறுதியையும் அவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக, மின்கட்டணத்தை உயர்த்தி மக்களைக் கஷ்டப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள், இளைஞர்கள் பலரும் அண்ணாமலையின் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அண்ணாமலையின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரை விமர்சிப்பதில் தி.மு.க-வினர் முழு கவனத்தைச் செலுத்துகிறார்கள்!”