சமூகம்
Published:Updated:

ஒன் பை டூ

கோவை சத்யன், பொள்ளாச்சி சித்திக்
News
கோவை சத்யன், பொள்ளாச்சி சித்திக்

“அ.தி.மு.க-வுக்கு வரலாறும் கிடையாது, கொள்கையும் கிடையாது. கேடுகெட்டவர்களாக அ.தி.மு.க-வினர் உள்ளனர்” என்ற உதயநிதியின் விமர்சனம்?

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“உதயநிதி ஓர் அரசியல் கத்துக்குட்டி. தாத்தா, அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவருக்கு அ.தி.மு.க குறித்து என்ன தெரியும்... பட்டத்து இளவரசன் இன்னும் சினிமா ஷூட்டிங் எண்ணத்திலிருந்து வெளியே வரவில்லை. யாராவது எழுதிக்கொடுப்பதை மேடைகளில் கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகப் பேசிக்கொண்டிருக்கிறார். தி.மு.க-வில் இன்றுவரை அ.தி.மு.க-விலிருந்து சென்ற நபர்களைக்கொண்டுதான் ஆட்சியே நடக்கிறது. தி.மு.க என்பது ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறி, பல ஆண்டுக்காலம் ஆகிறது. அ.தி.மு.க-வின் 50 ஆண்டுக்கால வரலாற்றில், 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். 18 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறோம். ஆனால், கேவலமாக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட ஒருபோதும் இழந்ததில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாமல் இருந்த தி.மு.க-வினருக்கு அ.தி.மு.க-வின் வரலாறு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. இப்போதும்கூட அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, பெயர் மாற்றித்தான் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க எப்போதும் தனிநபர் தாக்குதலையோ, தரம் தாழ்ந்த விமர்சனம் செய்வதையோ விரும்பாது. ஒழுக்கமில்லாமல் பேச நாங்கள் தி.மு.க-வினர் இல்லை!”

ஒன் பை டூ

பொள்ளாச்சி சித்திக், செய்தித் தொடர்புத் துணைச் செயலாளர், தி.மு.க

“அ.தி.மு.க-வின் உண்மைநிலையை அப்படியே சொல்லியிருக்கிறார். அண்ணாவின் பெயரில் தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் மாநிலச் சுயாட்சி குறித்துப் பேசியிருக்கிறார்களா... மாநிலங்களுக்கு ஆபத்து வரும்போது அதைக் கண்டித்துப் போராடியதுண்டா அல்லது பேசியதாவது உண்டா... அ.தி.மு.க-வின் வரலாறு குறித்துப் பேசும்போதெல்லாம், தி.மு.க-வைத் திட்டுவதும், தி.மு.க-வின் மீது வீண் அவதூறுகளைப் பரப்புவதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் ஒரு கட்சிதான் அ.தி.மு.க. தி.மு.க-வை வசைபாடுவதைத் தவிர, மற்றபடி அவர்களுக்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது. அதைத்தான் அண்ணன் உதயநிதி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க-வில் நடக்கும் உட்கட்சிப் பிரச்னைகளை மறைக்கச் செய்வதறியாமல் தி.மு.க-வை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வினர் தங்களின் சொந்தப் பிரச்னைகளைத் தாண்டி, மக்கள் பிரச்னைக்காகப் போராடியது உண்டா... தி.மு.க-வின் சிறப்பான ஆட்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், எங்கள்மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவதை மட்டுமே அ.தி.மு.க ஒரு வேலையாகச் செய்துகொண்டிருக்கிறது!”