அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ: தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆள முடியும்!

செல்வப்பெருந்தகை, கே.பி.ராமலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வப்பெருந்தகை, கே.பி.ராமலிங்கம்

திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி செய்யும்’ என்ற செங்கோட்டையனின் பேச்சில் அர்த்தமே இல்லை

“தமிழ்நாட்டை, திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது” என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் பேசியிருக்கும் கருத்து சரியா?

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர்

“செங்கோட்டையன் சொல்வது இறுமாப்புத்தனமாக இருக்கிறது. அவர் ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க-வை வாழ்த்திப் பேசுவார். அதே தொடரில் தி.மு.க-வை இகழ்ந்து பேசுவார். `திராவிட இயக்கங்கள் மட்டும்தான் ஆளும்’ என்ற அவரின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சைப் பெரிதுபடுத்த முடியாது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் ‘இது காமராஜரின் ஆட்சி!’ என்று கலைஞரே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இப்போது ஆட்சிப் பொறுப்பை மக்கள் திராவிடக் கட்சிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நாளை வேறு கட்சிகளுக்குக் கொடுக்கலாம். எந்த ஆட்சி வேண்டும் என்று மக்கள்தான் முடிவுசெய்வார்கள். செங்கோட்டையன் சொல்வதற்கும், பிரதமர் மோடி சொன்னதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. `இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில், காங்கிரஸ் மட்டும்தான் ஆட்சி செய்யும்’ என்று நாங்கள் சொல்ல முடியுமா? யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்கள் கையில் உள்ளது. பல மாநிலங்களில் புதிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதை நம்மால் காண முடிகிறது. மக்கள் நினைத்தால் மாற்றம் வரும்!”

ஒன் பை டூ: தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆள முடியும்!
ஒன் பை டூ: தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆள முடியும்!

கே.பி.ராமலிங்கம், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர்

“ `திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி செய்யும்’ என்ற செங்கோட்டையனின் பேச்சில் அர்த்தமே இல்லை. ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த திமிரில் அவர்களைப் பார்த்து இவர்களும், இவர்களைப் பார்த்து அவர்களும் மாறி மாறி இப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். செங்கோட்டையன் பேசியதிலிருந்து, தமிழக பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் கண்டு தி.மு.க மட்டுமின்றி அ.தி.மு.க-வும் அச்சப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. காமராஜர் முதல்வராக இருந்த சமயத்தில், தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்கள்கூட நினைத்தார்கள். ஆனால், 1967-ம் ஆண்டு, தமிழகத்தில் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தது. அடுத்ததாக, 182 இடங்களில் தி.மு.க சாதனை வெற்றிபெற்று கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவ்வளவு செல்வாக்குடன் இருந்த தி.மு.க., எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்த பிறகு அவர் உயிருடன் இருந்தவரை ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முடியவில்லை. முன்பு பெரும் செல்வாக்குடன் இருந்த அ.தி.மு.க., இப்போது மாபெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. வரலாற்று நாயகரான காமராஜரைத் தூக்கியெறிந்த தமிழகம்... 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைத் தோற்கடித்த தமிழகம்... ஜெயலலிதாவை பர்கூர் தேர்தலில் தோல்வியடையச் செய்த தமிழகம்... இப்போது இருப்பவர்களைத் தூக்கி எறியாது என்பது என்ன நிச்சயம்? தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி கண்டிப்பாக அமையும், அமைத்துக் காட்டுவோம்!”