அலசல்
Published:Updated:

செய்தி சேகரித்தால் பொய்ப் புகார்... தே.மு.தி.க அடாவடி... நடந்த உண்மை என்ன?

தே.மு.தி.க
பிரீமியம் ஸ்டோரி
News
தே.மு.தி.க

“எங்கள் கட்சியைப் பற்றி எழுத நீ யார்... யாரைக் கேட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாய்?” என பார்த்தசாரதி கேட்டிருக்கிறார்.

செய்தி சேகரிக்கச் சென்ற ஜூ.வி நிருபர் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள் தே.மு.தி.க தலைமை அலுவலக நிர்வாகிகள். நாம் செய்தி சேகரிக்கச் சென்றதையும், அதன் தொடர்ச்சியாக நமது நிருபருக்கு வந்த மிரட்டலையும் வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதனால் நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி வாசகர்கள் முன் வைக்கிறோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் திட்டம், கட்சியின் நிலை குறித்து தொடர்ச்சியாக ஜூ.வி-யில் அலசல் கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. அந்த வரிசையில், தே.மு.தி.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து எழுதுவதற்காக, கடந்த டிசம்பர் 15-ம் தேதி தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியை, தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நமது நிருபர் ரா.அரவிந்த்ராஜ். அவருக்கு விளக்கமளித்த பார்த்தசாரதி, “மேற்கொண்டு தகவல் வேண்டுமெனில் எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு வாருங்கள்; சந்தித்துப் பேசலாம்” எனத் தெரிவித்தார்.

செய்தி சேகரித்தால் பொய்ப் புகார்... தே.மு.தி.க அடாவடி... நடந்த உண்மை என்ன?

அதனடிப்படையில், டிசம்பர் 17-ம் தேதி மாலை 3 மணியளவில் நமது நிருபர் சென்னை கோயம்பேடு பகுதியிலிருக்கும் தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். ஆளரவமின்றி, மின்விளக்குகள்கூட எரியாத இருண்ட நிலையில் அலுவலகம் காட்சியளித்திருக்கிறது. ``யாராவது இருக்கிறீர்களா?” என நமது நிருபர் உரக்கக் குரலெழுப்பியும், கைகளால் தட்டி ஓசை எழுப்பியும் நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார். பதிலேதும் வராததைத் தொடர்ந்து, மாடியிலுள்ள ஓர் அறையில் வெளிச்சமும், பேச்சுச் சத்தமும் கேட்டதால் அந்த அறையை நோக்கிச் சென்றிருக்கிறார்.

அந்த அறையிலிருந்த இளைஞர், “நான் கட்சிக்காரரல்ல, பகுதி நேரமாக டேட்டா என்ட்ரி வேலை செய்துவருகிறேன்” எனக் கூறி அலுவலகப் பராமரிப்பாளர் சஞ்சீவ் என்பவரின் எண்ணைக் (8838321899) கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார். சஞ்சீவின் எண்ணில் தொடர்புகொண்டு நமது நிருபர் பேசவும், ``காத்திருங்கள் வந்துவிடுகிறேன்” எனக் கூறி அழைப்பைத் துண்டித்திருக்கிறார் சஞ்சீவ். சிறிது நேரத்திலேயே, தூய்மைப் பணி செய்யும் மூதாட்டி வள்ளியும், சஞ்சீவும் வந்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் நிருபரிடம் தே.மு.தி.க அலுவலகத்தின் நிலை குறித்துச் சில தகவல்களைத் தெரிவித்ததோடு, ``கட்சி விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அலுவலகப் பொறுப்பாளர் செந்திலிடம் பேசுங்கள்” எனத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடம் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்த நிருபர், ``செந்தில் வந்தால், இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

செய்தி சேகரித்தால் பொய்ப் புகார்... தே.மு.தி.க அடாவடி... நடந்த உண்மை என்ன?

இதையடுத்து, தே.மு.தி.க அலுவலகத்தில் நடந்த சம்பவம், கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள், துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியின் விளக்கங்களுடன் 1.1.2023 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ``காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு...” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. கட்டுரை வெளியான பிறகு, கடந்த ஜனவரி 5-ம் தேதி காலை, தே.மு.தி.க துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியின் (9003086600) எண்ணிலிருந்து, நமது நிருபரின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பின்போது, “எங்கள் கட்சியைப் பற்றி எழுத நீ யார்... யாரைக் கேட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாய்?” என பார்த்தசாரதி கேட்டிருக்கிறார். “அலுவலகம் வரச்சொல்லி நீங்கள்தானே சொன்னீர்கள்...” என நமது நிருபர் பேசிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவர் இடைமறித்து, “எங்களையா அசிங்கப்படுத்தி எழுதியிருக்கிறாய்... ஆம்பளையாக இருந்தால் உன் அட்ரஸைக் கொடு; உன்னை இப்போதே இல்லாமலாக்குகிறேன். ஜனவரி 1-ம் தேதி தே.மு.தி.க அலுவலகத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்வைப் பற்றி நீ எழுதி, அது புத்தகத்தில் வரவில்லையென்றால் உன் கையை வெட்டாமல் விட மாட்டேன்” எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதோடு, அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்.

செய்தி சேகரித்தால் பொய்ப் புகார்... தே.மு.தி.க அடாவடி... நடந்த உண்மை என்ன?

மீண்டும் இணைப்புக்கு வந்த பார்த்தசாரதி, “உன்னைச் சும்மா விட மாட்டேன். உன் வீடு எங்கே இருக்கிறது என்று சொல். நீ அலுவலகத்துக்கு வந்து சென்ற காட்சிகள் கேமராவில் பதிவாகியிருக்கின்றன. அதைவைத்து எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும், கமிஷனர் ஆபீஸிலும் உன்மீது கம்ப்ளெயின்ட் கொடுப்பேன்” எனக் கூறி அவரும் தன் பங்குக்குத் தகாத வார்த்தைகளில் மிரட்டியிருக்கிறார். அதற்கு நமது நிருபர், “நான் நடந்த உண்மையைத்தான் எழுதியிருக்கிறேன். நடந்தவையெல்லாம் உங்கள் கேமராவிலேயே ரெக்கார்ட் ஆகியிருக்கும். நீங்கள் தாராளமாகப் பொய்ப் புகார் கொடுங்கள். அதை சட்டரீதியாகச் சந்தித்துக்கொள்கிறோம்” என பதிலளித்திருக்கிறார். இந்த உரையாடல் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், தே.மு.தி.க தலைமை அலுவலகத்திலிருந்து பணம் காணாமல்போனதாகவும், தங்களுக்கு ஜூனியர் விகடன் நிருபர் மீதும் சந்தேகம் எழுந்திருப்பதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

இது போன்ற எத்தனையோ பொய்ப் புகார்களை ஜூ.வி கடந்து வந்திருக்கிறது. தே.மு.தி.க-வினரின் இந்தப் பொய்ப் புகாரை சட்டரீதியாக நாம் எதிர்கொள்வோம்.