Published:Updated:

“உடல்நலம் தேறியாச்சு மக்களே!” - உற்சாகத்தில் விஜயகாந்த்

குடும்பத்துடன் விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் விஜயகாந்த்

ட்ரீட்மென்ட் ரகசியம்

- ஜி.கௌதம்

‘2021-ல் அதிசயம் நிகழும்’ என்றார் ரஜினிகாந்த். அதிசயத்தை ரஜினிகாந்த் நிகழ்த்தப்போகிறாரோ இல்லையோ, விஜயகாந்த் நிகழ்த்தப்போகிறார் என்பதுதான் தமிழக மக்களுக்குக் காத்திருக்கும் ஆச்சர்யம்.

ஆமாம், விரைவில் நடக்கவிருக்கிறது ‘கேப்டன் 2.O’ அவதாரம்!

ஆக்‌ஷன் ஹீரோ, ஆக்ரோஷமான அரசியல்வாதி என்பதையும் தாண்டி, அன்பான மனிதர் என்ற அடையாளத்துக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த். என்னாச்சு கேப்டனுக்கு என்ற கவலையும், அவர் பூரண நலம் பெற வேண்டும் என்ற அக்கறையும் அவருக்கு வாக்களிக்காதவர்கள் நெஞ்சிலும் நிலைத்திருக்கிறது. அதுதான் விஜயகாந்த் என்ற வெள்ளந்தி மனிதர் சம்பாதித்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து.

“உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அப்படி ஒரு கொடுப்பினை கேப்டனுக்குக் கிடைத்திருக்கிறது. அத்தனை பேரின் பிரார்த்தனைகளும் பலிக்கப்போகின்றன. புத்தம் புது கேப்டனாக ஒரு சில மாதங்களில் உங்கள் முன் வந்து நிற்கப்போகிறார் அவர்” என்கிறார் எம்.என்.சங்கர். யார் இந்த எம்.என்.சங்கர்?!

சென்னை, தி.நகரைச் சேர்ந்த அக்குபங்சர் நிபுணர். கடந்த சில வாரங்களாக விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளித்துவருபவர்.

“தொடர்ந்து இருபது நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் கேப்டன். அவரது ஆர்வத்தினாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பலன் கிடைத்துவருகிறது. தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்குகிறார். இப்படி அவர் நிம்மதியாகத் தூங்கி ஏழு வருடங்களாச்சு என்றார் பிரேமலதா மேடம். சுவாசக்குழாயையும் உணவுக்குழாயையும் பிரித்து மூடும் தொண்டைப்பகுதியில் இருக்கும் வால்வு சரியாகச் செயல்படாததால் மூச்சு விடச் சிரமம் இருந்தது அவருக்கு. அதனால் தூக்கமின்றிச் சிரமப்பட்டார். விக்கல் வந்தால் பல நிமிடங்கள் நீடிக்கும். இப்போது அந்தப் பிரச்னைகளெல்லாம் தொலைந்துவிட்டன” என்றார் சங்கர். அதுமட்டுமல்ல... பிறரது உதவியுடன் கைத்தாங்கலாக மட்டுமே நடக்கும் நிலையில் இருந்த விஜயகாந்த் இப்போது யாருடைய உதவியும் இல்லாமல் நன்றாக நடக்கிறாராம்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

“தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார் இப்போது. தூக்கம் சரியாக இல்லாததால் நரம்பு மண்டலத்தில் சிறிய பாதிப்பு இருந்தது. அதனால்தான் பேச்சிலும் தடுமாற்றம் இருந்தது. இதுவரை அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளெல்லாம் அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சைகளாகவே இருந்தன. ஆனால், இப்போது பிரச்னைகளின் மூல காரணம் தூக்கமின்மைதான் என்பதைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்தியதால் மிகவும் வேகமாக குணமாகிவருகிறார் விஜயராஜ் அண்ணன்” என்றார் சங்கர்.

ஆம், விஜயராஜ் அண்ணன் என்றே விஜயகாந்தைக் குறிப்பிடுகிறார் சங்கர். காரணம், விஜயகாந்த் படித்த தேவகோட்டை டிபிரிட்டோ பள்ளிக்கூடத்தில், அதே காலகட்டத்தில் படித்த ஜூனியர் இவர். இருவருமே ஹாஸ்டல் வாசிகள். இப்போது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்திவரும் வாட்ஸப் குழுவில் பழைய மாணவர் விஜயராஜ் ஆகவே சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் விஜயகாந்த்.

“பள்ளிக்கூடத்தில் பிரியத்துடன் எல்லோருடனும் பழகுவார் அண்ணன். விடுமுறை நாள்களில் நண்பர்களை மதுரையில் இருந்த அவரது ரைஸ் மில்லுக்கு அழைத்துப் போவார். தடபுடலாக விருந்து கொடுத்து மகிழ்விப்பார். பள்ளியிலும் சரி, ஹாஸ்டலிலும் சரி... அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அப்போதே அவர் தலைவர் போலத்தான் எல்லோருக்கும் பிடித்தமானவராக இருப்பார். கால்பந்தும் கபடியும் பள்ளியில் அவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஜெயிக்கும் விளையாட்டுகள். பசிக்கிறது என யாராவது சொன்னால் பொறுக்க மாட்டார். உடனடியாக சாப்பிடவைத்து அழகு பார்ப்பார். மதுரை காலேஜ் ஹவுஸ் ஹோட்டலுக்கு அடிக்கடி நண்பர்களையெல்லாம் அழைத்துப்போய் உணவு வாங்கிக் கொடுத்து, பாசத்துடன் புன்னகைப்பார். இப்போதும் அதே விஜயராஜ் அண்ணனாகவே எங்கள் வாட்ஸப் குழுவில் இருக்கும் நண்பர்களுடன் பழகுகிறார். பகட்டோ பந்தாவோ துளியும் கிடையாது. அதே பாசத்துடன்தான் அனைவருடனும் உரையாடுகிறார். பிரேமலதா அண்ணியிடமும் அதே பாசத்தையும் நேசத்தையும் நான் பார்க்கிறேன்” என்றார் சங்கர்.

விஜயகாந்த் எடுத்துக்கொள்ளும் சிசிச்சைகள் குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் என்றதும், “அக்குபங்சர் முறையில் சிகிச்சைகளும், ஆயுர்வேதத்தின் அடிப்படையில் சில மருந்துகளும் எடுத்துக் கொள்கிறார். மிகவும் விரைவாக அவரது உடல் சிகிச்சைகளை ஏற்றுக்கொள்கிறது. அக்குபங்சர் ஊசிகளை அவர் உடலில் போடும்போது, ‘இந்தப் புள்ளியில் இந்தச் செயலுக்காக ஊசிகள் போடுகிறேன்’ என விளக்கிச் சொல்வேன். ஒரு மருத்துவ மாணவனின் ஆர்வத்துடன் அதை கவனமாகக் கேட்டு உள்வாங்கிக்கொள்வார் அண்ணன். டோங்லி போடுங்க டாக்டர், க்யுச்சி போடலியே டாக்டர் என்றெல்லாம் அந்தந்தப் புள்ளிகளின் பெயரைச் சொல்லித்தான் இப்போதெல்லாம் அவர் பேசுகிறார். அவருக்கு சிகிச்சை கொடுக்கும் நேரங்களில் அவரை ஒரு சமர்த்துக் குழந்தையாகவே பார்க்கிறேன்” என்று கூறிப் புன்னகைத்தார் சங்கர்.

சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளின் அளவு ஜெயலலிதாவின் உடலில் அதிகமாக இருந்தது, அதுதான் அவர் மரணத்துக்குக் காரணம் என ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தெரிவித்தவர்தான் இந்த சங்கர்.

“ஓரிரு மாதங்களில் புத்தம் புதிய கேப்டனாக மீண்டு வருவார், மீண்டும் வருவார் விஜயராஜ் அண்ணன்” என்றார். பிரேமலதா விஜயகாந்த்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். சங்கர் கூறிய தகவல்களை நெகிச்சியுடன் உறுதி செய்தார் அவர்.

குடும்பத்துடன் விஜயகாந்த்
குடும்பத்துடன் விஜயகாந்த்

“சீனாவில் இருந்து வந்ததுதான் அக்குபங்சர் மருத்துவம் என்றாலும், அது உண்மையில் நம் தமிழர்களின் பாரம்பர்ய வர்ம சிகிச்சையே. இப்படி ஒரு அற்புதமான சிகிச்சை, அதுவும் கேப்டனின் பள்ளிக்காலத்து நண்பரே அதில் நிபுணராக இருக்கிறார் என்பது இத்தனை காலமாக எனக்குத் தெரியாமல்போய்விட்டது. கடவுள் இப்போதுதான் அடையாளம் காட்டியிருக்கிறார். நன்றாக குணமாகிவருகிறார் கேப்டன். அவருக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் உலகத் தமிழர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் விகடன் வாயிலாக என் அன்பினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் பிரேமலதா.

“உடல்நலம் தேறியாச்சு மக்களே!” - உற்சாகத்தில் விஜயகாந்த்

அக்குபங்சர் சிகிச்சையினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் எனத் தமிழக முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார் பிரேமலதா. நாடு முழுவதும் அதிகாரபூர்வமான சிகிச்சையாக இதை அறிவிக்கும்படி பிரதமரை வலியுறுத்துமாறும் முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் விஜயகாந்த். புகைப்படம் எடுக்கவும் ஒருசில நிமிடங்கள் நேரில் பேசவும் விஜயகாந்த்தை சந்திக்க நேரம் கேட்டோம்.

“தீவிர சிகிச்சையில் இருப்பதால் இப்போது வேண்டாம். பூரண குணம் பெற்றதும் முதலில் உங்களை அழைக்கிறேன், வாருங்கள்” என்றவர் “ஒரு நிமிடம்” என்று கூறி நிறுத்த, சில விநாடிகள் இடைவெளியில் “நல்லா இருக்கீங்களா?” என்றது கம்பீரம் குலையாத மதுரைக் குரல்!

“பார்த்து சூதானமா இருங்க. கொரோனாக் கிருமிகிட்ட சிக்கிக்காம சூதானமா இருக்கணும்னு, என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் மனித தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் கேப்டன் சொல்றேன்னு சொல்லிடுங்க. கூடிய சீக்கிரம் நேர்ல சந்திக்கலாம். நெறைய பேசலாம்” என்றார் விஜயகாந்த்.

அதுக்குத்தானே காத்துக்கிட்டிருக்கோம். சீக்கிரம் கம்பீரமான கேப்டனா வாங்க!

கொரோனாவுக்கு ‘நோ!’

“அக்குபங்சர் சிகிச்சைகள் மூலம் உடலின் சக்திப் புள்ளிகளில் சிலவற்றைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். அப்படிச் செய்வதால் கொரோனாத் தொற்று நம்மைத் தாக்காமல் இருக்கச் செய்ய முடியும். கொரோனா வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்” என்கிறார் சங்கர்.

 மருத்துவர் சங்கர்
மருத்துவர் சங்கர்

கொரோனாவைத் தடுக்க மக்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளிக்க அதிகாரபூர்வமான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் சங்கர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதைப் பரிசீலிக்க வலியுறுத்தித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

சீனாவில் அக்குபங்சர் சிகிச்சை மூலம் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாக சங்கர் குறிப்பிட்டதைத் தமிழக அரசின் மாநிலத் திட்டக் குழுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அக்குபங்சர் சிகிச்சைகளை கோவிட்-19 நோயாளிகளுக்குக் கொடுக்கப் பரிசீலிக்கும்படி தலைமைச் செயலாளருக்கும் மாநில அரசின் சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

நார்மல் ஊசிகளைவிடப் பத்து மடங்கு சன்னமாக நூலிழை அளவில் இருக்கும் அக்குபங்சர் குத்தூசிகளை உடலின் சக்திப் புள்ளிகளில் செலுத்துகிறார் சங்கர். எறும்பு கடித்ததுபோல லேசாக சுருக் என்றிருக்கிறது. தொடையில் ஒரு இடத்தில் குத்தூசி செருகியபோது ஷாக் அடித்தது! “நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் ஆல்ஃபா இம்யுனோ க்ளோபின் என்ற சுரப்பியை இந்த ஊசி தூண்டிவிடும்” என்றார்.

“இந்த ஆல்ஃபா இம்யுனோ க்ளோபினை மூன்று மில்லி கிராம் வரை நம் உடலே உற்பத்தி செய்துகொள்ளும். நவீன மருத்துவத்தில் இதைச் செயற்கையாக உடலுக்குள் செலுத்த, லட்சக்கணக்கில் செலவாகும். அசிடல் கொலைன், எண்டார்ஃபின், எபிநார்பின், காமா அமினோப்யூட்ரிக் அமிலம் போன்ற விலைமதிப்பில்லாத வினையூக்கிகளும் அக்குபங்சர் சிகிச்சைகளால் உடலுக்குள் சுரக்கும். உடலை எல்லா நோய்களுக்கும் எதிராகப் பாதுகாக்கும். 461 நோய்களை அக்குபங்சர் சிகிச்சை முறையினால் குணமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் சீன மருத்துவர்கள். அதில் பலவற்றை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்திருக்கிறது” என்ற சங்கர், சீனாவில் எப்படி கொரோனா உயிரிழப்புகளைப் பெருமளவில் தவிர்த்தார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்துகொண்டார்.

“சீனாவின் வூஹான் மாநிலத்தில் உருவான இந்தக் கொரோனா வைரஸ், ஊபே விமானநிலையத்திலிருந்து உலகெங்கும் பயணம் செய்தவர்கள் மூலம் உலகம் முழுக்கப் பரவியது என்கிறார்கள். ஆனால், சீனாவில் இரண்டேகால் கோடிப்பேர் வசிக்கும் பெய்ஜிங், இரண்டே முக்கால் கோடிப்பேர் வசிக்கும் ஷாங்காய் நகரங்களில் இதன் தொற்று அதிகம் ஏற்படவில்லை. காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்ட சங்கர், அவரே பதிலையும் விவரித்தார்.

“சீனாவில் கிராமம்தோறும் அக்குபங்சர் சிகிச்சை மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. நோய்கள் வந்தால்தான் என்றில்லை... வருமுன் காப்பதற்காகவே கொடுக்கப்படுகிறது. கிராமங்களில் Bare Foot Doctors என அடிப்படை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அனாடமி தெரியாது. ஆனால் அக்குபங்சர் புள்ளிகளில் நல்ல பரிச்சயம் இருக்கும். நம்மூர் ரேஷன் கடைகள் போல அங்கே ஒவ்வொரு ஊரிலும் கிராம சபைகள் இருக்கும். அங்கு வரும் மக்களுக்கு அங்கேயே அக்குபங்சர் சிகிச்சைகள் கொடுப்பார்கள். சிகிச்சைக்காகவே படுக்கைகள் தயாராக இருக்கும். இதை நான் சீனாவில் தங்கிப் படிக்கும் காலத்தில் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். வெள்ளம் வரும் காலங்களிலும், முன் பனிக்காலங்களிலும், பின் பனிக்காலங்களிலும், தட்பவெப்ப நிலை மாறும் ஒவ்வொரு சமயத்திலும் கிராமசபைகளில் அக்குபங்சர் சிகிச்சைகள் கொடுத்து, நோய்த் தொற்றுக்கு எதிராக மக்களைத் தயார்ப்படுத்துவார்கள். கொரோனாத் தொற்றில் இருந்தும் சீன மக்கள் பெருமளவு உயிர்ச்சேதமில்லாமல் தப்பித்தது இப்படித்தான்” என்றார்.

அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வரும் விஜயகாந்த், இதைத் தமிழக மக்களுக்கு வழங்க வலியுறுத்தித் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி, நாடு முழுவதும் அக்குபங்சர் சிகிச்சையினை அதிகாரபூர்வ சிகிச்சையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.