அரசியல்
அலசல்
Published:Updated:

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி... கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறதா ஆளுங்கட்சி?

தி.மு.க கூட்டணி கட்சியினர்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க கூட்டணி கட்சியினர்

தமிழ்நாட்டில் நிலவும் மத ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க நினைக்கின்றன.

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டது ஆர்.எஸ்.எஸ். அதேநாளில், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவித்தன. சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, இரண்டுக்கும் அனுமதி மறுத்தது காவல்துறை.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, நவம்பர் 6-ம் தேதி பேரணிக்கு அனுமதி வாங்கியது ஆர்.எஸ்.எஸ். அதைத் தொடர்ந்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டவர்கள் டி.ஜி.பி-யைச் சந்தித்து, அக்டோபர் 11-ம் தேதி மனிதச் சங்கிலி நடத்த அனுமதி பெற்றிருக்கிறார்கள். நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தப் பேரணியில் இணைவதாக அறிவித்திருப்பது, அரசியல் களத்தின் முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது.

`மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்’ எனப் பேரணியை ஒருங்கிணைக்கும் கட்சிகள் கூறுகின்றன. ஆனால், `தி.மு.க-தான் தங்களின் கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு இது போன்ற போராட்டங்களை முன்னெடுக்கிறது’ என பா.ஜ.க விமர்சிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வும், `எங்கள் ஆட்சியில் இது போன்ற சூழல் எழவில்லை. தி.மு.க அரசின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம்’ என்று ஒரு குத்து குத்தியிருக்கிறது.

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி... கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறதா ஆளுங்கட்சி?

தமிழ்நாட்டில் தற்போது இத்தகைய மனிதச் சங்கிலிப் பேரணிக்கான தேவை என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் நிலவும் மத ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க நினைக்கின்றன. அதற்காக ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தியே தீர வேண்டுமென விடாப்பிடியாக இருக்கின்றன. அவர்களின் இந்த முயற்சிக்கு மக்கள் இரையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நாங்கள் மனிதச் சங்கிலிப் பேரணியை நடத்துகிறோம். அவர்கள் மத ஒற்றுமையைக் கெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்; நாங்கள் அதைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறோம். அவ்வளவுதான்’’ என்றார்.

ஆனால், ``சட்டம்-ஒழுங்கைக் கையாள்வதில் தி.மு.க அரசின் கையாலாகாத்தனமே, அதன் கூட்டணிக் கட்சிகளை இப்படியொரு பேரணியை நடத்தும் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது’’ என்கிற குற்றசாட்டை முன்வைக்கிறார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அவர் பேசும்போது, ``ஜனநாயக நாட்டில் தடை செய்யப்படாத அமைப்புகள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி நடத்த அனுமதி உண்டு. அதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை. எங்கள் ஆட்சியில் சாதிச் சண்டை, மதச் சண்டை இல்லை. ஆனால், இந்த ஆட்சியில் சமூக நல்லிணக்கத்தைக் காக்க வலியுறுத்தி தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளே போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஆட்சி சரியில்லை என்றுதானே அர்த்தம்?’’ என்று கேட்கிறார் அவர்.

“ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு, இப்படித் தனியாக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது அரசியல்ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வனிடம் கேட்டோம். ``ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக அரசியல்ரீதியாக எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க-வால் முன்னெடுக்க முடியவில்லை. அதனால்தான், ஓர் அசாதாரண சூழலை, பதற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. பா.ஜ.க-வை, தற்போது தி.மு.க கையாள்வது என்பது ஒரு கட்சிக்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடு. ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும்போது, சட்டபூர்வமான நகர்வுகளைத்தான் அவர்களால் செய்ய முடியும். அதே சமயம் வெகுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவேண்டியது எங்களின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம்’’ என்கிறார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம். ``ஆர்.எஸ்.எஸ் இந்திய அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும் ஓர் அமைப்பு. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸின் மீது அவதூறு பரப்புவர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க தங்களால் செய்ய முடியாததை, கூட்டணிக் கட்சிகளை வைத்துக்கொண்டு செய்கிறது. வி.சி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க-வின் அணிகளாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. அதனால் அதைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை’’ என்றார் சுருக்கமாக.

ஜெயக்குமார், சிந்தனைச்செல்வன், வி.பி.துரைசாமி,  செந்தில்குமார், கோபண்ணா
ஜெயக்குமார், சிந்தனைச்செல்வன், வி.பி.துரைசாமி, செந்தில்குமார், கோபண்ணா

இந்த மனிதச் சங்கிலி குறித்து ஆளும் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன... கூட்டணிக் கட்சிகளை தி.மு.க-தான் தூண்டிவிடுகிறதா... தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் பேசினோம்.

``தமிழகத்தில் நிலவக்கூடிய ஒரு சூழலை ஜனநாயக முறைப்படி மக்களிடம் தெரியப்படுத்த மனிதச் சங்கிலியை நடத்துகிறார்கள். அது அவர்களின் சுதந்திரம். மத அரசியல் செய்ய பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் இடம் கொடுத்ததே அ.தி.மு.க-வும் காங்கிரஸும்தான். அ.தி.மு.க வலுவாக இருந்திருந்தால், இந்தச் சூழலே உருவாகியிருக்காது. கடந்த ஆட்சியில் பா.ஜ.க-வுக்கு முழுச் சுதந்திரத்தை அ.தி.மு.க வழங்கியது. தற்போது அந்தச் சூழல் இல்லாததாலேயே ஏதாவதொன்றைச் செய்து அரசியல் செய்ய பா.ஜ.க நினைக்கிறது. எங்களுக்கு யாரையும் தூண்டவேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

காங்கிரஸ் மீதான விமர்சனம் குறித்து, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் கேட்டோம். ``தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற, அரசியல் செய்ய காங்கிரஸ் காரணம் என்று சொல்வது தவறான கருத்து. தி.மு.க தலைமையில் ஓர் ஆட்சி அமைந்ததற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் பங்களிப்பு மகத்தானது. தமிழகத்தில் பா.ஜ.க-வை நுழைய விடாத ஒரு கூட்டணி தி.மு.க தலைமையில் இருக்கிறது. அதில் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்’’ என்றார் அவர்.

பொது அமைதிக்கு மட்டும் பங்கம் வரக் கூடாது!