அரசியல்
அலசல்
Published:Updated:

தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தை கொன்னுட்டாங்க! - குமுறும் தோழரைக் கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்?

கலாராணி
பிரீமியம் ஸ்டோரி
News
கலாராணி

புலியூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக இருக்கும் தி.மு.க உறுப்பினரான அம்மையப்பன்தான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்

நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க-வினரே அத்துமீறிப் போட்டியிட்டனர். அது குறித்து அப்போது, ‘குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்’ என வேதனைப்பட்டிருந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது வேதனையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி!

இங்குள்ள 15 வார்டுகளில், தி.மு.க 12 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பா.ஜ.க., சுயேச்சை ஆகியவை தலா ஓர் இடத்திலும் வெற்றிபெற்றன. தி.மு.க கூட்டணியில், புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படவே, கவுன்சிலர் கலாராணி தலைவர் பதவிக்கான வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க கூட்டணியின் முடிவுக்கு மாறாக, தி.மு.க கவுன்சிலரான புவனேஸ்வரியே மறைமுகத் தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் வெளியிட்ட வேதனை அறிக்கைக்குப் பிறகு, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் புவனேஸ்வரி. அதன் பிறகும் இரண்டு முறை தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க உறுப்பினர்கள் யாரும் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தை கொன்னுட்டாங்க! - குமுறும் தோழரைக் கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்?

தி.மு.க தலைவர் ஸ்டாலினா... அம்மையப்பனா?

இந்த நிலையில், கடந்த 6-9-2022 அன்று 4-வது முறையாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க கவுன்சிலரான புவனேஸ்வரியே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாராணி, “புலியூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக இருக்கும் தி.மு.க உறுப்பினரான அம்மையப்பன்தான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம். நான் தலைவரானால் அம்மையப்பனால், நினைத்தபடி சம்பாதிக்க முடியாது. எனவேதான் புவனேஸ்வரியைத் தலைவராக்கியிருக்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினா இல்லை அம்மையப்பனா... இந்தப் பிரச்னை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் நான்கு முறை நேரில் கோரிக்கைவைத்தேன். ‘கண்டிப்பாக உங்களுக்குத்தான் பதவி’ என்று அனுப்பிவைத்தார். ஆனால், தேர்தல் நடக்கும் சமயங்களில் அவருக்கு 50 முறை போன் செய்தும், அவர் போனை எடுக்கவே இல்லை. எங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அமைதியாக இருக்கிறேன். நிர்வாகக்குழுவைக் கூட்டி தி.மு.க தலைமையிடம் நியாயம் கேட்கவும் எங்கள் கட்சிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார் குமுறலாக.

செந்தில் பாலாஜியிடம் விலைபோய்விட்டார்கள்!

இதற்கிடையில், புலியூர் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புவனேஸ்வரியும், தி.மு.க கவுன்சிலர்களும் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரான நாட்ராயனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்திருப்பது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலாராணிக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியிருப்பது யாரும் எதிர்பாராத மற்றொரு திருப்பம். இது குறித்து பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதனிடம் கேட்டபோது, “கலாராணிக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஊருக்கெல்லாம் போராடுகிற கட்சியாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்திய கம்னியூஸ்ட் கட்சி, தங்கள் கட்சி கவுன்சிலருக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகப் போராடவில்லை. காரணம், செந்தில் பாலாஜியிடம் அவர்கள் விலைபோய் விட்டார்கள். ‘திராவிட மாடல்’ என்று முழங்கும் தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்துக்கே குண்டுவைத்திருக்கிறார்கள். கலாராணியைத் தலைவர் பதவியில் அமரவைக்காமல் தடுத்தது, அமைச்சர் செந்தில் பாலாஜிதான். கலாராணிக்கு ஆதரவாகத் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

தி.மு.க-வினர் கூட்டணி தர்மத்தை கொன்னுட்டாங்க! - குமுறும் தோழரைக் கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்?

“அப்புறமா பேசுறோம்!”

புலியூர் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புவனேஸ்வரியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்காகத் தொடர்புகொண்டோம். “நான் வெளியில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்றார். தொடர்ந்து நாம் அவரிடம் பேச முயன்றபோதெல்லாம், “நான் வாகனத்தில் போய்க்கிட்டிருக்கிறேன். அப்புறமா பேசுகிறேன்” என்று நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார்.

துணைத் தலைவரான அம்மையப்பனிடம் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டபோது, “நான் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறேன். நான் பேசுவது உங்களுக்குப் புரியாது. நான் பிறகு அழைக்கிறேன்” என்றார். அதன் பின்னர் அவரிடம் நாம் பேச முயன்றபோது, நமது அழைப்பை ‘கட்’ செய்தார்.

அம்மையப்பன்
அம்மையப்பன்

இந்த விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசுவதற்காக அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, வாட்ஸ்அப் வழியே குறுஞ்செய்தி அனுப்பினோம். அதற்கு பதிலாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாட்ராயனை தி.மு.க பேரூராட்சித் தலைவர் புவனேஸ்வரி சந்தித்த புகைப்படத்தையும், தகவலையும் நமக்கு பதிலாக அனுப்பிவைத்தார்.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

இதையடுத்து இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாட்ராயனிடம் பேசினோம். “எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை, எங்கள் கவுன்சிலருக்கே ஒதுக்கித் தரும்படி தி.மு.க- வினரிடம் கேட்டோம். ஆனால், தி.மு.க-வுக்குப் பெரும்பான்மையாக 12 கவுன்சிலர்கள் பலம் இருக்கிறது. அதனால், அவர்களது கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரையே தலைவராக்கிவிட்டார்கள். வெற்றிபெற்ற தி.மு.க பேரூராட்சித் தலைவர் மற்றும் தி.மு.க கவுன்சிலர்கள் மரியாதை நிமித்தமாக என்னைப் பார்க்க வந்தார்கள், சந்தித்தேன். அவ்வளவுதான்” என்றார் மிகச் சாதாரணமாக.

தி.மு.க தலைவரின் குரலுக்கு, கட்சியில் இவ்வளவுதான் மரியாதையா?