
- கலெக்ஷன் புகார்கள்... கடுப்பாகும் மக்கள்!
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும், நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலையையும் முடிக்காமல் அ.தி.மு.க அரசு பரிதவிக்கவிட்டது என்றால், தி.மு.க-வினரோ கமிஷன் கரப்ஷனில், மாநகரையே பாழாக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கொந்தளிக்கின்றனர் நெல்லை மக்கள். “நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வஹாப்புக்கும், மேயர் சரவணனுக்கும் இடையே நடக்கும் முட்டல் மோதலுக்கும் இந்த கமிஷன், கரப்ஷன் பிரச்னைதான் காரணம்” என்று எதிர்க்கட்சிகளும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கின்றன!

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் நெல்லை மாவட்டச் செயலாளரான தச்சை கணேசராஜா, “தென்தமிழ்நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு என்று போற்றப்படும் நெல்லைக்குக் கல்வி, வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி, மருத்துவத்துக்காகவும் தினமும் லட்சக்கணக்கானோர் வந்துபோகிறார்கள். ஆனால், சந்திப்புப் பேருந்து நிலையம் நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. சாலைகளெல்லாம் பழுதடைந்து கிடக்கின்றன. இவை எதையும் பொருட்படுத்தாமல் கல்லாகட்டுவதிலேயே தி.மு.க-வினர் குறியாக இருக்கிறார்கள். எந்தத் திட்டம் என்றாலும், கான்ட்ராக்டர்களிடம் 40 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார்கள் தி.மு.க-வினர். அதனால் ஒப்பந்தங்களை எடுக்கவே கான்ட்ராக்டர்கள் தயங்குகிறார்கள். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடருவதற்குக்கூட கமிஷன் கேட்கிறார்கள்.


மேலப்பாளையம் பகுதியில் ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட தார்ச்சாலை இரண்டே நாளில் உரிந்து வந்துவிட்டது. அந்த அளவுக்குத் தரம் இல்லாத வேலைகள் நடக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையத்தை ரூ.75 கோடியில் நவீனப்படுத்துவதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அது இடிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்ட நிலையில், சந்திப்புப் பேருந்து நிலையம் மட்டும் திறக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும், வணிகத்துக்காகவும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்தபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக, நெல்லை வண்ணார்பேட்டை பகுதியிலிருந்த பேருந்து நிறுத்தத்தை இடித்தார்கள். இப்போது அதே இடத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்பின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. பின்னர்தான், ‘நன்கொடை’ கொடுக்க மறுத்த ஜவுளிக்கடைக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே அந்தப் பேருந்து நிலையத்தைக் கட்டியது தெரியவந்தது. இடையில் என்ன நடந்ததோ, திறப்புவிழா நடத்துவதற்கு முன்பாகவே மீண்டும் அது இடிக்கப்படுகிறது. இப்படி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

எல்லாவற்றுக்கும் மேலாக, மாநகராட்சியில் பணி நியமனங்களில் ஊழல் நடந்திருப்பதால், அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க-வின் பணி நியமனக்குழுத் தலைவரே மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கிறார். மாநகராட்சிக் கூட்டத்திலும் ஓப்பனாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது” என்று படபடத்தார்.
இந்த நிலையில், சந்திப்பு பேருந்து நிலையம் குறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி, “சந்திப்புப் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அங்கு பணிகளை முடித்து அடுத்த 45 நாள்களில் திறக்கப்படும்” என்றார்.
இதற்கிடையே நெல்லை மாவட்ட தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசல், மாநகராட்சியிலும் எதிரொலிப்பதாகக் குமுறுகிறார்கள், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலர்கள், “மாநகராட்சி ஒப்பந்தங்களில் மாவட்டச் செயலாளர் தலையிட்டதால் மேயருக்கும் அவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் மாவட்டச் செயலாளர் ஆதரவு கவுன்சிலர்கள் தனி அணியாகவும், மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் தனி கோஷ்டியாகவும் செயல்படுவதால், மாநகராட்சியில் நடக்கவேண்டிய மக்கள் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இது தொடர்பாக கட்சித் தலைமையே அழைத்துப் பேசியும் இருவரிடையே இதுவரை ஒற்றுமை ஏற்படவில்லை” என்று வருத்தப்பட்டார்கள்.

இதையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்பதாகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். மாநகராட்சியில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எங்கள் கட்சியின் கவுன்சிலர்கள் சிலரை யாரோ திட்டமிட்டுத் தூண்டிவிட்டு, தவறாகப் பேசவைத்து, புகார் மனுவைக் கொடுக்க வைத்திருக்கிறார்கள். மாநகராட்சிக் கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்த அந்த மூன்று கவுன்சிலர்களும் மறுநாள் என்னிடம் வந்து வருத்தம் தெரிவித்தார்கள்” என்றார்.
நெல்லை மாவட்ட தி.மு.க செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபிடம் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டபோது, “எனக்கு கட்சியில் யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தைப் பொறுத்தவரை, அந்தப் பகுதியின் கவுன்சிலர் கந்தன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், அதை அப்படியே வேறு இடத்துக்கு மாற்ற இருக்கிறோம்” என்றார்.
ஆளுங்கட்சி மேலிடம் நேரடியாக கவனம் செலுத்தாவிட்டால், வரும் தேர்தலில் நெல்லை அவர்களுக்குத் தொல்லையாக மாறிவிடும்!