அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி! - முதல்வர் உத்தரவு... முட்டுக்கட்டை உடன்பிறப்பு...

ஞானாம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானாம்மாள்

நீ ஆவின் கடை நடத்துனா என்னோட வியாபாரம் பாதிக்கும்’ என்று அடியாட்களோடு வந்து மிரட்டினார்.

நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், ‘முறைகேடுகளுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன்’ என்று கோப முகம் காட்டுகிறார் முதல்வர். ஆனால், அதே முதல்வரின் உத்தரவை நிறைவேற்றவிடாமல், அதிகார வர்க்கத்தின் துணையோடு முட்டுக்கட்டை போட்டுவருகிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர் என்று குமுறுகிறார் மாற்றுத்திறனாளிப் பெண்!

சேலம் மருளையம்பாளையம், ஆட்டையாம் பட்டியில் வசித்துவருபவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஞானாம்மாள். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, வயதான தன் கணவருடன் முதல்வரைக் கோட்டையில் சந்தித்த இவர், நலத்திட்ட உதவி கோரி மனு கொடுத்தார். இதையடுத்து, ‘மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்கும் சிறப்புத் திட்டத்தின்’கீழ், ஞானாம்மாளுக்கும் ஒரு பூத் வழங்க உத்தரவிட்டார் முதல்வர். அதன்படி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அருகே இவருக்கு ஆவின் பூத் ஒதுக்கப்பட்டது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் முதல்வர் உத்தரவின்படி ஆவின் பாலகம் அமைக்க முடியாமல் திண்டாடிவருகிறார் ஞானாம்மாள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஞானாம்மாள், ‘‘எனக்கு பிறவியிலேயே கண்பார்வை கிடையாது. என் வாழ்வாதாரத்துக்கான உதவியாக முதல்வரும் ஆவின் பாலகம் அமைக்கும் உத்தரவை வழங்கி னார். சேலம் அரசு மருத்துவமனைக்கு அருகில் கடைவைக்கத் தேர்வுசெய்யப்பட்ட இடத்தை ஆவின் அலுவலர்களும் நேரில் வந்து பார்வையிட்டு அனுமதி கொடுத்துவிட்டார்கள். எனவே, கையில், காதில் போட்டிருந்த நகைகளையெல்லாம் அடகுவைத்து கடையைத் திறக்கத் தயாரானேன்.

ஞானாம்மாள்
ஞானாம்மாள்

ஆனால், மருத்துவமனைக்கு வெளியில் ஹோட்டல் வைத்திருக்கும் தி.மு.க-வின் சேலம் 79-வது வார்டு அவைத்தலைவர் சிதம்பரம், ‘நீ ஆவின் கடை நடத்துனா என்னோட வியாபாரம் பாதிக்கும்’ என்று அடியாட்களோடு வந்து மிரட்டினார். உடனே நான் போலீஸுக்குப் போனேன். போலீஸாரும், ‘நீங்க போய் கடையைத் திறங்க’ என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், சிறிது நேரத்தில் என்னைத் தொடர்புகொண்ட போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேஷ், ‘என்கிட்ட அனுமதி வாங்காம எப்படிக் கடையை வைக்கலாம்’ எனச் சத்தம் போட்டார்.

அவரிடம், முதல்வரின் உத்தரவு பற்றிச் சொன்னதோடு ஆவின் கொடுத்த அனுமதிக் கடிதத்தையும் காட்டினேன். எதையும் கண்டுகொள்ளாத அவர், ‘மாநகராட்சியில அனுமதி வாங்கிட்டு வா’ என்று விரட்டிவிட்டார். மாநகராட்சிக் குப் போனால், ‘போலீஸிடம் அனுமதி வாங்கிட்டு வாங்க’ என்று விரட்டுகிறார்கள். கண்ணு தெரியாத நானும் தட்டுத் தடுமாறி, பார்த்திபன் எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு என்று எல்லோரையும் சந்தித்து மனு கொடுத்துவிட்டேன். ஆனா லும்கூட என்னால் இன்னும் கடையைத் திறக்க முடியவில்லை” என்று கலங்கினார்.

பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி! - முதல்வர் உத்தரவு... முட்டுக்கட்டை உடன்பிறப்பு...

இது குறித்து தி.மு.க வார்டு அவைத்தலைவர் சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டபோது, “கடை வைக்கக் கூடாது என்று நான் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. அவர்களின் கடை வந்ததென்றால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கும் என்றுதான் சொன்னேன். அவர்கள் கடை நடத்துவதை தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனும் எதிர்த்திருக்கிறார். மருத்துவமனை டீனும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு தெரியப்படுத்தி யிருக்கிறார்” என்றார்.

தி.மு.க எம்.எல்.ஏ ராஜேந்திரனோ, ‘‘மாற்றுத் திறனாளிப் பெண், பாலகம் திறக்கக் கூடாது என்று நான் யாரிடமும் சொல்லவில்லை’’ என்றார் நம்மிடம்.

இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தியிடம் பேசினோம். “மருத்துவமனைக்கு உள்ளே கடை அமைக்க வேண்டுமானால் மட்டுமே என்னிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளியில் இருக்கும் கடை களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது” என்றார்.

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றபோது, “மாற்றுத்திறனாளி ஞானாம்மாள் என்னையும் வந்து பார்த்தாங்க. நாங்களும், அனுமதி கொடுக்கலாம்னுதான் இருந்தோம். ஆனா, அதுக்குள்ள ‘சட்டம்-ஒழுங்கு பிரச்னை வரும். அனுமதி கொடுக்கக் கூடாது’னு காவல்துறை யினர் சொன்னதால அனுமதி கொடுக்காம வெச்சிருக்கோம்” என்றார்.

பரிதவிக்கும் மாற்றுத்திறனாளி! - முதல்வர் உத்தரவு... முட்டுக்கட்டை உடன்பிறப்பு...

இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேஷைத் தொடர்புகொண்டோம். ‘‘நான் வெளியூரில் இருக்கிறேன்... சேலம் வந்த பிறகு பேசுகிறேன்’’ எனத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யாவின் கவனத்துக்குப் பிரச்னையை கொண்டு சென்றோம். ‘‘இந்த விவகாரத்தில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பது போன்று தெரியவில்லை. எனவே உரிய விசாரணைக் குப் பிறகு ஞானாம்மாள் கடை திறக்க வழிவகை செய்து தரப்படும்’’ என்றார்.

இந்த விவகாரத்தை மாற்றுத்திறனாளி கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். “தமிழ்நாடு முதல்வரின் 110-விதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் அறிவிக்கப்பட்டால் அதை உடனே செய்து கொடுக்கவேண்டும். அதிகபட்சமாக ஆர்டர் வந்து பத்து நாள்களுக்குள் அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும். அதில் அலட்சியம் காட்டக் கூடாது” என்றார் அழுத்தமாக.

ராஜேந்திரன்,  வெங்கடேஷ்
ராஜேந்திரன், வெங்கடேஷ்

சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, ‘‘இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

முதல்வர் உத்தரவா... வட்டக் கழக நிர்வாகியின் சண்டியர்த்தனமா... பார்க்கலாம்!