
தற்போது குளத்துக்குள்ளேயே தி.மு.க அலுவலகத்தைக் கட்டிவருகின்றனர். எனவே, பா.ஜ.க சார்பில் போலீஸில் புகாரளித்தோம்
‘கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தி.மு.க-வினர் கட்சி அலுவலகம் கட்டிவருவதாக’ புகார் எழுப்பி பா.ஜ.க-வினர் போராடிவருவது பட்டுக்கோட்டையைப் படபடக்கவைத்திருக்கிறது!
இது குறித்து பா.ஜ.க-வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன் நம்மிடம், ‘‘பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆயிரமாண்டு பழைமையான துர்கா செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தக் குளத்தின் ஒரு பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2,400 சதுர அடி இடத்தை அதிரை தி.மு.க நகரச் செயலாளரான இராம.குணசேகரன் ஆக்கிரமித்து, தி.மு.க கட்சி அலுவலகத்தைக் கட்டிவருகிறார்.

தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் இடத்தில், 30 வருடங்களுக்கு முன்பே கீற்றுக் கொட்டகை அமைத்து ‘அண்ணா படிப்பகம்’ என்ற பெயரில் நூலகம் நடத்தினர். பின்னர் அண்ணா படிப்பகத்தை, கட்சி அலுவலகமாக மாற்றினர். அப்போதே இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது ‘கட்சி அலுவலகமாகப் பயன்படுத்த மாட்டோம்’ என உறுதி கூறி அண்ணா நூலகம் நடத்துவதைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில், தற்போது குளத்துக்குள்ளேயே தி.மு.க அலுவலகத்தைக் கட்டிவருகின்றனர். எனவே, பா.ஜ.க சார்பில் போலீஸில் புகாரளித்தோம். பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு முன்பு போராட்டமும் நடத்தினோம். பின்னர், தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நில அளவைப் பிரிவினர் முறையாக நிலத்தை அளந்து, ‘அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது’ என உறுதிசெய்தனர். ஆனால், அதன் பிறகும் கட்டுமானத்துக்கான பொருள்களை இறக்கி, மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகிவருகின்றனர். ஆளுங்கட்சியினர் என்பதால் அதிகாரிகளும் இதைத் தடுப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். உடனடியாக அறநிலையத்துறை இதில் தலையிட்டு, தடுக்கவில்லையென்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றார் கொதிப்போடு.


தி.மு.க நகரச் செயலாளரும், அதிராம்பட்டினம் நகராட்சி துணைத் தலைவருமான இராம.குணசேகரனிடம் இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘1988-ம் ஆண்டிலிருந்து எங்கள் பயன்பாட்டிலுள்ள அந்த இடத்தில், அண்ணா நூலகத்தை நடத்திவருகிறோம். கஜா புயலில் சேதமடைந்த அதன் மேற்கூரையை, தற்போது புதுப்பித்து விரிவாக்கம் செய்துவருகிறோம். அது கோயில் இடம் என பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, கோயில் நிர்வாகத்துக்கு வரி செலுத்துவதாகவும் கூறியிருக்கிறோம். ஆனாலும்கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜ.க-வினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
‘பா.ஜ.க-வைக் காலூன்ற விட மாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அரசியல் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதில் தி.மு.க-வை மிஞ்ச ஆளில்லை!