அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நடமாடும் நகைக்கடை... நடிகரிடம் கற்றுக்கொண்ட மோசடித் தொழில்... கம்பி எண்ணும் தி.மு.க பிரமுகர்

வில்லிவாக்கம் முத்துவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
வில்லிவாக்கம் முத்துவேல்

முத்துவேலின் சகோதரி, தி.மு.க வழக்கறிஞரணியில் பதவியில் இருக்கிறார். அந்த தொடர்பைவைத்து கட்சியில் பலரின் நெருக்கம் இவருக்குக் கிடைத்தது.

கழுத்தில் 100 சவரனுக்கு மேல் தங்க நகைகள், ஊர் முழுக்க `வள்ளல்’, `கர்ணன்’ என அடைமொழிகளுடன்கூடிய போஸ்டர்கள் என சொகுசு கார்களில் பந்தாவாக ஊர்வலம் வந்துகொண்டிருந்த தி.மு.க பிரமுகர் வில்லிவாக்கம் முத்துவேல், தற்போது மோசடி வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

மதுரை மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி நடத்திவருபவர் முகமது ஜலீல். இவர், தன்னுடைய கல்லூரியை மேம்படுத்த 200 கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறியிருந்தார். அப்போது சென்னை வில்லிவாக்கத்தில் ஃபைனான்ஸியராக அறியப்பட்ட ‘லயன் பி முத்துவேல்’ குறித்து முகமது ஜலீலுக்குத் தெரியவந்தது. உடனடியாக முத்துவேலை நேரில் சந்தித்துப் பேசினார் முகமது ஜலீல். அவரிடம், “200 கோடி ரூபாய்தானே... தாராளமாக ஏற்பாடு செய்யலாம். கமிஷனா ரெண்டு பர்சன்ட் கொடுங்க” என்று டீலிங் பேசியிருக்கிறார் முத்துவேல். இவரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் முகமது ஜலீல் சம்மதித்திருக்கிறார்.

நடமாடும் நகைக்கடை... நடிகரிடம் கற்றுக்கொண்ட மோசடித் தொழில்... கம்பி எண்ணும் தி.மு.க பிரமுகர்

இதையடுத்து 200 கோடி ரூபாய் லோனுக்கான கமிஷன் தொகையாக ரூபாய் 5.46 கோடியை கடந்த 2021-ம் ஆண்டு வாங்கினார் முத்துவேல். ஆனால், தருவதாகச் சொன்ன கடன் தொகையை முகமது ஜலீலுக்குக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார். இதையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் முகமது ஜலீல் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில், ஏற்கெனவே கடந்த 2019-ல் ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கில் கண்ணா என்பவரிடம் 100 கோடி ரூபாய் கடனுக்காக 2.62 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்று முத்துவேல் அவரை ஏமாற்றியதும், அந்தப் புகாரில் சிறைக்குச் சென்று வெளியில் வந்த முத்துவேல், முகமது ஜலீலை ஏமாற்றி யிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துவேல் மற்றும் அவரின் கூட்டாளிகளைக் கைதுசெய்து, 115 சவரன் தங்க நகைகள், சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இது குறித்து உதவி கமிஷனர் ஜான் விக்டரிடம் பேசினோம். ``வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் என்கிற லயன் முத்து. இவர் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து முடித்து, அம்பத்தூர் பாடியிலுள்ள இரு சக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். பின்னர், ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் மோசடி வழக்குகளில் சிக்கிய நகைச்சுவை நடிகர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் முத்துவேல். அந்த நடிகரிடம்தான் டபுள் டாக்குமென்ட் உள்ளிட்ட மோசடி டெக்னிக்குகளைக் கற்றிருக்கிறார். பின்னர், தனியாகவே கடன், கமிஷன் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். இதற்காக, சென்னை போயஸ் கார்டனில் பிரமாண்ட அலுவலகம் ஒன்றை லட்சக்கணக்கான ரூபாய் வாடகையில் நடத்திவந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மோசடிப் புகாரில் சிறைக்குச் சென்ற முத்துவேல், போயஸ் கார்டன் அலுவலகத்தை மூடிவிட்டார். நகைச்சுவை நடிகரின் பாணியைப் பின்பற்றி, சமூகத்தில் தன்னைக் கொடை வள்ளல் என்று காட்டிக்கொண்ட முத்துவேல், தற்போது முகமது ஜலீல் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “முத்துவேலின் சகோதரி, தி.மு.க வழக்கறிஞரணியில் பதவியில் இருக்கிறார். அந்த தொடர்பைவைத்து கட்சியில் பலரின் நெருக்கம் இவருக்குக் கிடைத்தது. வில்லிவாக்கம் பகுதியில் காதுகுத்து தொடங்கி கோயில் கொடைவிழா வரை எந்த நிகழ்ச்சிக்கும் நன்கொடைகளை வாரி வழங்குவார். சொந்தக் காசிலேயே `வள்ளல்’, `கர்ணன்’ என்று போஸ்டர்கள் அடித்துக் கொடுப்பார். எப்போதும் கழுத்து, கைகளில் 100 சவரனுக்கு மேல் தங்க நகைகளுடன் நடமாடும் நகைக்கடையாகவே காட்சியளிப்பார். சென்னை ஈ.சி.ஆர் அருகிலுள்ள பனையூரில் இவரின் ஃபைனான்ஸ் அலுவலகம் இருக்கிறது. அதன் பிரமாண்டத்தைப் பார்த்துத்தான் பிசினஸ்மேன்கள் இவரிடம் ஏமாந்திருக்கிறார்கள்.

அஜ்மோல்
அஜ்மோல்

முத்துவேல்மீது ஐந்துக்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. இரண்டு முறை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பிவந்திருக்கிறார். இவருக்கு வில்லிவாக்கம், ராஜமங்கலம், கொளத்தூர் காவல் நிலையங்களில்கூட செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காவல் நிலையங்களில் யாராவது முத்துவேல் மீது புகாரளித்தால் உடனடியாக அந்தத் தகவல் அவரின் வாட்ஸ்அப் நம்பருக்குச் சென்றுவிடுகிறது. இதற்காக முத்துவேல், சில காவல்துறை அதிகாரிகளையும் ‘சிறப்பாக’க் கவனித்துவந்திருக்கிறார். மேலும், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் அஜ்மோல் என்பவர், இவரின் மோசடி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதும் தற்போது ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது. அஜ்மோல் பெயரில் சில சொத்துகளையும் முத்துவேல் வாங்கியிருக்கிறார். தற்போது காவலர் அஜ்மோல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அவர்மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்” என்றனர் விரிவாக.

மோசடிப் புகாரில் கைதாகி சிறையிலிருக்கும் முத்துவேலுக்குப் பத்துக்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருக்கிறார்கள். பணத்தேவையுடன் இருக்கும் தொழிலதிபர்களை கவர் செய்து, அவர்களிடமிருந்து கமிஷன் கறப்பதே இவர்களின் வேலை. இதில் சட்டச் சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள எப்போதும் ஒரு வழக்கறிஞர் டீம் முத்துவேலுக்கு உதவிவந்திருக்கிறது.

அரசியல்வாதி, காவல்துறை, வழக்கறிஞர் டீம், மோசடி மன்னன்... பலே கூட்டணி!