அரசியல்
சமூகம்
Published:Updated:

‘‘இடஒதுக்கீடு மட்டுமே சர்வரோக நிவாரணி!”

தமிழன் பிரசன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழன் பிரசன்னா

தடதடக்கும் தமிழன் பிரசன்னா

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய பி.ஜே.பி அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “சர்வரோக நிவாரணி அல்ல இடஒதுக்கீடு” என்று கூறியிருந்தார். அந்தக் கட்டுரை 21.7.19 தேதியிட்ட ஜூ.வி இதழில் வெளியாகியிருந்தது. அதைப் படித்த தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா நம்மைத் தொடர்புகொண்டார். ‘‘கே.பி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இடஒதுக்கீடு மட்டுமே சர்வரோக நிவாரணியாக இருக்க முடியும்” என்று தன் எதிர்க்கருத்தை திட்ட வட்டமாக முன்வைக்கிறார்.

“பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒரு காலத்தில் கலைஞர் ஆதரித்தார் என்று இடதுசாரிகள் சொல்கிறார்கள். பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டை கலைஞர் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. 1979-ம் ஆண்டு, பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் கலைஞர். அதற்காகத் தொடர்ந்து பல கட்டுரைகளை அவர் எழுதினார். ‘இடஒதுக்கீடு என்பது வர்ணாசிரமத்தால் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பலனே தவிர, இதற்குப் பொருளாதாரத்தை அளவுகோளாக வைக்க முடியாது’ என்றார் அம்பேத்கர். ‘இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் காலம் காலமாக ஒரு பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரம்’ என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதை எல்லாம் வசதியாக மறந்துவிட்ட கே.பி, இடஒதுக்கீடு சர்வரோக நிவாரணி அல்ல என்கிறார்.

இன்றைக்குப் பணக்காரராக இருப்பவர், நாளை ஏழையாக மாறலாம். ஏழையாக இருப்பவர், நாளை பணக்காரராக மாறலாம். ஆனால், சாதி என்றுமே மாறாது. எனவே, இடஒதுக்கீட்டுக்கான அளவுகோளாகப் பொருளாதாரம் ஒருபோதும் இருக்க முடியாது.

‘‘இடஒதுக்கீடு மட்டுமே சர்வரோக நிவாரணி!”

ஆனால், தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டைச் சட்டபூர்வமாக்குகிற வேலையை மத்திய பி.ஜே.பி அரசு செய்துகொண்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் தன் சாதியைத் துறக்க முன்வராத முன்னேறிய சாதியினர், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை ஆக்கிரமிப்பு செய்யப் பார்க்கிறார்கள்.

ஆண்டுக்கு ஆறு லட்சம் ரூபாய் என்கிற வருமான வரம்பைக் குறைக்க வேண்டும்; ஆயிரம் சதுர அடியில் வீடு என்கிற வரம்பைத் தளர்த்த வேண்டும் என்பவை எல்லாம் ஏற்புடையவை அல்ல. அதேபோல, முன்னேறிய சாதியினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு சதவிகிதத்தை நிர்ணயிப்பது என்பதும் ஏற்புடையதல்ல. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறபோது, வரம்புகளைத் தளர்த்துவது என்பதையெல்லாம் ஏற்க முடியாது” என்கிறார் தமிழன் பிரசன்னா.