
- ஏ.எஸ்.
கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து ஒரு வருடமாகிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற வருடம் கொரோனா வைரஸ் நமக்கெல்லாம் உயிர் பயம் காட்ட ஆரம்பித்தது இந்த மார்ச் மாதத்திலிருந்துதான். இந்த நேரத்தில், கொரோனா வைரஸிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற, தங்கள் உயிரையும் இழந்த முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதையாக இருக்கும். அப்படி உயிரிழந்தவர்களில் இருவரின் குடும்பத்தினருடன் பேசினோம்.

வாணி ஷ்யாம் சுந்தர், மகப்பேறு மருத்துவர்
‘`என் கணவர் ஷ்யாம் சுந்தர் காது மூக்கு தொண்டை மருத்துவர். கொரோனா வந்த பிறகு, வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தோம். வீட்டில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தவர்களுக்குக்கூட விடுமுறையோடு சம்பளத்தையும் கொடுத்து அனுப்பிவிட்டோம். மே மாதம் வரைக்கும் எச்சரிக்கையுடன்தான் இருந்தோம்.
கணவருக்கு ஏற்கெனவே நீரிழிவு ஆரம்ப கட்டத்தில் இருந்தது. கூடவே உடல் எடையும் அதிகமாக இருந்ததால்தான் இந்தளவுக்கு கவனமாக இருந்தோம். ஆனால், ஒரு டாக்டராக இருந்துகொண்டு எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே இருப்பது..? ஜூன் மாதத்தி லிருந்து மருத்துவமனைக்குச் சென்று நோயாளி களுக்குச் சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். அப்போது கொரோனா வந்த ஒரு நபருக்கும் சிகிச்சையளிக்க வேண்டிய சூழ்நிலை. பிபிஈ கிட் எல்லாம் போட்டுக்கொண்டு பாதுகாப் பாகத்தான் சிகிச்சையளித்திருக்கிறார். அதை யும் மீறி எப்படியோ வைரஸ் தொற்றிவிட்டது. அவரிடமிருந்து எனக்கும் தொற்றிவிட்டது.
ஜூலை 6-ம் தேதி இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. உடனே சிகிச்சையெடுக்க ஆரம்பித்தோம்.
சில தினங்களில் நான் மீண்டு வந்துவிட்டேன். ஆனால், அவர் ஜூலை 29-ம் தேதி கார்டியாக் அரெஸ்ட்டில் என்னைவிட்டுப் போய்விட்டார். நல்ல கணவர், நல்ல டாக்டர் என்பதைத்தாண்டி ஷ்யாம் நல்ல மனிதர். எங்கள் கிளினிக்கில் வேலைபார்த்து வந்த ஓர் இளைஞனை கேட்டரிங் படிக்க வைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வேலை வாங்கிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற வரதராஜபுரம் ஏரியாவில் இருக்கிற பெண் குழந்தைகளுக்கு என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம் என்று கைடு செய்வார். இன்றைக்கு அந்தப் பிள்ளைகள் எல்லாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். இந்தப் புண்ணியங்கள்கூட அவரை கொரோனாவிடமிருந்து காப்பாற்றவில்லை என்பதை நினைத்தால்தான் தாங்க முடிய வில்லை.’’

அருணாசலம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி உயிரிழந்த தங்கலட்சுமியின் கணவர்
“உயிரிழந்தபோது என் மனைவி தங்க லட்சுமிக்கு 53 வயது. எப்போதும் சுறுசுறுப் பாகத் தன் வேலை களைப் பார்ப்பார். மருத்துவமனைக்கு வருபவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் யாராவது இருந்தால், தன் சொந்தச் செலவில் அவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஷுகர், பிபி என எந்தப் பிரச்னையும் அவருக்குக் கிடையாது. தமிழகத்தில் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அவர் கொரோனா வார்டில் வேலை பார்த்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
வேறு எந்தப் பிரச்னையும் இல்லாததால் குணமாகி மறுபடியும் வேலைக்குப் போனார். அந்த நேரத்தில்தான் எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. நானும் சீக்கிரமே குணமாகிவிட்டேன். ஒருமுறை பாதிப்பு வந்தவருக்கு உடலில் அந்த நோயை எதிர்ப்ப தற்கான ஆன்டிபாடி உருவாகியிருக்கும். அதனால் உடனடியாக மறுபடி பாதிப்பு ஏற்படாது என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர் பார்க்காதபடி அவருக்கு மறுபடியும் கோவிட் பாதிப்புக்கான இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. ஆனால், பரிசோதனையில் கோவிட்-19 நெகட்டிவ் என்றே வந்தது. மருத்துவ மனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருந்த நேரம் அது. இதனால் மறுபடியும் அவர் வேலைக்குப் போக ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி மருத்துவமனை யில் அட்மிட் செய்தபோது, ஷுகர் இருப்பதாகச் சொன் னார்கள். அதன் பிறகு அவர் மீண்டு வரவேயில்லை. மகள்கள் இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டோம். மனைவி போன பிறகு தனியாகத்தான் நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்.
கொரோனாவால் உயிரி ழந்த மருத்துவத்துறையைச் சேர்ந்த 28 பேருக்கு அரசு சார்பில ரூ.25 லட்சம் நிவாரணம் கொடுத்தார்கள். அந்தப் பட்டியலில் என் மனைவி பெயர் இல்லை. நோயாளிகள் சேவையில் உயிரிழந்த என் மனைவியின் தியாகத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிவாரணத்துக்காகவும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலைக்காக வும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக் கிறேன்.”
இதுபோல வலி சுமந்துநிற்கும் குடும்பங்கள் இங்கே ஏராளம். அவர் களின் தியாகங்களையெல்லாம் போற்றுவோம்... அந்த வலி சற்றேனும் குறைய!