
நிகழ்வு
ஆர்.மோகனப் பிரபு, CFA
கடந்த திங்கள்கிழமையன்று சென்செக்ஸ் 291 புள்ளிகளும், நிஃப்டி 76 புள்ளிகளும் திடீரென உயர்ந்து, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது. சந்தையின் இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்று பலரும் தேடியபோதுதான், ஜி-20 ஒசாகா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சீனத் தலைவர் ஜின்பிங்கும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது தெரிந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருள்களின் மீதான வரி உயர்வினைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்ற முடிவு ஏற்பட்டது. மிக முக்கியமாக, சீன மொபைல் நிறுவனமான ஹுவாவே மீதான தடைகளை நீக்குவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
பதிலுக்கு, அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உலக அளவில் பங்குச் சந்தைகள் குதூகலம் அடைவதற்கு இந்தக் காரணங்கள் போதாதா?
அமெரிக்கா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக நடந்து வரும் வர்த்தகப் போர் பதற்றம் இந்த இருபெரும் தலைவர்களின் சந்திப்பினால் கொஞ்சம் தணியவே செய்திருக்கிறது.
உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணவிருக்கும் இந்த வர்த்தகப் போரின் பின்னணி என்ன, இதனால் அமெரிக்காவுக்கோ சீனாவுக்கோ என்ன நன்மை என்பதைப் பார்ப்போம்.
வர்த்தகப் போர்...
நவீன யுகத்தில், வல்லரசுகள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்வதில்லை. அப்படி மோதிக்கொண்டால், இரண்டு பக்கத்திலும் மக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படவே செய்யும். எனவே, வணிகச் சந்தைகளில் போர் புரிய ஆரம்பித்திருக்கின்றன.
சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை கட்டுப் படுத்தவும், அமெரிக்காவில் தனது சொந்த அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீனாவின்மீது ஏராளமான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இந்தியா உள்ளிட்ட பல நட்பு நாடுகளும்கூட ட்ரம்ப்பின் கணைகளிலிருந்து தப்ப முடியவில்லை என்றாலும்கூட, அமெரிக்காவிற்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்து வரும் சீனாவின் மீதே அவரின் அதிகப்படியான கவனம் இருந்தது.

குறிப்பாக, சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே மீது விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின. பதிலுக்கு சீனாவும் அமெரிக்காமீது இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்ததுடன் தனது நாணயத்தின் (யுவான்) மதிப்பையும் அதிரடியாகக் குறைத்தது.
அமெரிக்க - சீன வர்த்தகப் போர் பதற்றத் தால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த வர்த்தகம் பாதிப்பு அடைந்ததுடன் உலகப் பொருளாதாரமும் 0.3% வரை வீழ்ச்சியடையக் கூடிய அபாயமும் உருவாகி யுள்ளதாக உலக வங்கி எச்சரித்தது.
ஒசாகா உச்சி மாநாடு
இந்தப் போர் பதற்றத்தைக் கொஞ்சமாவது தணிக்க ஏதாவது ஒரு வாய்ப்பு உருவாகாதா என உலகமே ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான், ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வந்தது. உலகின் மிகப் பெரிய 20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தினார்கள்.

என்றாலும், ட்ரம்ப் மற்றும் ஜின்பிங்கின் தனிப்பட்ட முறையிலான சந்திப்பின் மீதே உலகத்தின் கவனம் இருந்தது. ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிக சுமுகமாக நடைபெற்றது ஆச்சர்யம் தருவதாக இருந்தது. இந்தச் சந்திப்பின் முடிவில், 300 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருள்களின்மீது விதிக்கவிருந்த அதிகப்படியான இறக்குமதி வரியை நிறுத்திவைப்பதாகவும் ஹுவாவே மீதான தடைகளை நீக்குவதாகவும் ட்ரம்ப் அறிவித்தது பலரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.
வடகொரிய விஜயம்...
அதிரடி நடவடிக்கைகளுக்குப் பஞ்சமில்லாத ட்ரம்ப், எந்தவொரு முன்னறிவிப்புமின்றி, திடீரென ஜூன் 30-ம் தேதி, வடகொரியாவிற்கு வருகை புரிந்து, அந்த நாட்டு அதிபரான கிம் ஜாங் உன்-னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமெரிக்க ஆதிக்கம் மிகுந்த ஐக்கிய நாடுகள் சபையினால் மிகக் கடுமையான கெடு பிடிகளைச் சந்தித்துவரும் வடகொரியாவிற்கு விஜயம் புரிந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ட்ரம்ப்.

உலக சமாதானத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் தரும் நாடு என அமெரிக்காவினால் தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்த வடகொரியாவுடன் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பும் உலக அளவில் பங்கு சந்தைகளைப் பெருமளவிற்கு உற்சாகப்படுத்தியது. ஆனால், உலகின் நிரந்தர நாணயம் என்றும் நிலையற்ற தருணங்களின் பாதுகாவலன் என்றும் கருதப் படுகிற தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு அவுன்ஸுக்கு 25 டாலர் வரை குறைந்து எல்லோருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
நிலைமாறும் ட்ரம்ப்...
வடகொரியாவின் அணுசக்தித் திட்டம் குறித்த இருதரப்பு சந்திப்புகள் தொடரும் என்று அறிவித்த அதே நாளிலேயே, வடகொரியாவின் மீதான பொருளாதாரக் கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியை வரவழைத்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியப் பிரதிநிதி, இதுகுறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் நிகழ்ந்த கிம் மற்றும் ட்ரம்ப் ஆகியோருக்கிடையேயான மூன்றாவது சந்திப்பு, கொரிய பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டுவரும் என்று தென் கொரிய அதிபர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஆனால், வடகொரிய அதிபருடனான சந்திப்பு, ட்ரம்ப்பின் பிரசாரத்திற்கு மட்டுமே உதவும் என்றும், ஜனநாயக விரோதமாகப் பதவியேற்றுள்ள கிம்மை வடகொரியாவின் தலைவராக அங்கீகரிக்காத அமெரிக்காவின் நீண்டகால அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் அமைந்துவிடும் என்றும் அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சவுதி இளவரசருடனும் சந்திப்பு
கசோகி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு வரும் சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மானையும் ஜி-20 மாநாட்டினூடே சந்தித்த ட்ரம்ப், அவரைச் சமூக சீர்திருத்தவாதி என வெகுவாகப் புகழ்ந்து அதிர்ச்சியடைய வைத்தார். சில மாதங்களுக்குமுன்புதான், அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பு சல்மான் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் போர் முடிவுக்கு வருகிறதா..?
சமீபத்திய ஜி-20 மாநாட்டு முடிவுகள் தற்போதைக்குச் சீனாவிற்குச் சாதகமாக அமைந்திருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால், ட்ரம்பின் நிரந்தமற்ற நிலைப்பாடுகளில் இதுவும் ஒன்றுதான் என்று சிலர் சொல்கிறார்கள்.
அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மறுதேர்வை எதிர்நோக்கியுள்ள ட்ரம்ப், அரசியல் காரணங்களுக்காகவும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் மீண்டும் சீனாமீது புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவார் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.
அதேசமயம், அதிகப்படியான கட்டுப்பாடுகள், அமெரிக்கப் பொருளாதாரத்தினையும் பாதிக்கும் என்பதைத் தற்போது அனுபவரீதியாகப் புரிந்து கொண்டுள்ள ட்ரம்ப், “முதலில் பாய்வது, பின்னர் பதுங்குவது, மீண்டும் பாய்வது” என்கிற போர் தந்திரத்தையே பின்பற்றுவார் என்றே தோன்றுகிறது.
எனவே, வர்த்தகப் போர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்னும் சிலபல மாதங்களுக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். அதுவரை உலக அளவிலான பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும்; தங்கம் விலையும் மேலேயும் கீழேயுமாகத்தான் இருக்கும். இந்தப் போர் பதற்றத்தைப் புரிந்துகொண்டு, முதலீட்டு உத்தியை அமைத்துக்கொண்டால், முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்த்து, லாபம் பார்க்க முடியும்!
குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!