விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் பாரதி என்ற வாசகர், "இந்திய அஞ்சல் துறையின் ‘ஸ்பீடு போஸ்ட்’ வழியாக வெளிநாடுகளுக்கு அஞ்சல் அனுப்ப முடியுமா? மேலும் அது குறித்த தகவல்களை அளிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே...

இந்திய அஞ்சல்துறை வழங்கி வரும் பல்வேறு சேவைகளில், விரைவு அஞ்சல் சேவையும் (Speed Post) ஒன்றாக இருந்து வருகிறது. இந்திய அஞ்சல் அலுவலகங்கள் வழியிலான இந்தச் சேவையினைப் பயன்படுத்தி, உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கடிதம் (Letter), கட்டு (Parcel), ஆவணம் (Document) மற்றும் வணிகச் சரக்கு (Merchandise) உள்ளிட்டவைகளை விரைவாக அனுப்பி வைத்திட முடியும். இந்திய அஞ்சல் துறையின் விரைவு அஞ்சல் சேவை குறித்த சில தகவல்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய அஞ்சல் துறை
உலகின் மிகப்பெரும் அஞ்சல் சேவையமைப்பைக் கொண்ட இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் 150 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. விடுதலைக்கு முன்பாக, இந்தியாவின் முதன்மையான நகர்ப்பகுதிகளில் மட்டும் 23,344 அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. விடுதலைக்குப் பின்பு, இந்திய அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை 1,54,965 என்று ஏழு மடங்காக அதிகரித்து விட்டது. கிராமப்பகுதிகளில் மட்டும் 1,39,067 அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சராசரியாக, 21.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்றும், இந்திய மக்கள் தொகையில் 7753 நபர்களுக்கு ஓர் அஞ்சலகம் எனும் அளவிலும் இருந்து வருகிறது.

விரைவு அஞ்சல் சேவை
இந்திய அஞ்சல் துறை வழங்கி வரும் விரைவு அஞ்சல் சேவையானது, உள்நாட்டு விரைவு அஞ்சல் (Domestic Speed Post), பன்னாட்டு விரைவு அஞ்சல் (International Speed Post) என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
உள்நாட்டு விரைவு அஞ்சல்
இந்தியாவிலிருக்கும் அஞ்சல் அலுவலகங்கள் வழியாக, கடிதம் மற்றும் 35 கிலோ எடை வரையிலான கட்டு கொண்ட உள்நாட்டு விரைவு அஞ்சல்கள் பெறப்பட்டு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இந்த விரைவு அஞ்சல் சேவையில் குறைந்த அளவாக, 50 கிராம் எடை வரையிலான கடிதங்களுக்கு ரூ.15/- சேவைக் கட்டணமாகப் பெறப்படுகிறது. இச்சேவைக் கட்டணமானது கடிதம் அல்லது கட்டுவின் எடை மற்றும் தொலைவுகளுக்கேற்ப வேறுபடுகிறது.
50 கிராம் அளவிலான எடை கொண்ட கடிதம் அல்லது கட்டுக்கு உள்ளூரில் ரூ.15/-, உள்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொலைவு எதுவும் கணக்கிடப்படாமல் ரூ.35/- என்றும் சேவைக்கட்டணம் பெறப்படுகிறது. 51 கிராமிலிருந்து 200 கிராம் வரையிலான எடை கொண்ட கடிதம் அல்லது கட்டுக்கு உள்ளூரில் ரூ.25/-, அதற்கு மேல் 200 கிலோ மீட்டர் தொலைவு வரை ரூ.35/-, 201 முதல் 1000 கிலோ மீட்டர் வரை ரூ.40/-, 1001 முதல் 2000 கிலோ மீட்டர் வரை ரூ.60/-, 2001 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் ரூ.70/- என்று கட்டணம் பெறப்படுகிறது.

201 கிராமிலிருந்து 500 கிராம் வரையிலான எடை கொண்ட கடிதம் அல்லது கட்டுக்கு உள்ளூரில் ரூ.30/-, அதற்கு மேல் 200 கிலோ மீட்டர் தொலைவு வரை ரூ.50/- 201 முதல் 1000 கிலோ மீட்டர் வரை ரூ.60/-, 1001 முதல் 2000 கிலோ மீட்டர் வரை ரூ80/-, 2001 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் ரூ.90/- என்று கட்டணம் பெறப்படுகிறது.
500 கிராமைத் தொடர்ந்து ஒவ்வொரு 500 கிராமுக்கும் உள்ளூரில் ரூ.10/-, அதற்கு மேல் 200 கிலோ மீட்டர் தொலைவு வரை ரூ.15/- 201 முதல் 1000 கிலோ மீட்டர் வரை ரூ.30/-, 1001 முதல் 2000 கிலோ மீட்டர் வரை ரூ40/-, 2001 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் ரூ.50/- என்று கணக்கிட்டுக் கட்டணம் பெறப்படுகிறது. ஒப்புகைச்சீட்டு வேண்டுவோர், ஒரு கடிதம் அல்லது கட்டுக்கு மேற்காணும் கட்டணத்துடன் ரூ.10/- கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
விரைவு அஞ்சல் சேவையின் வழியாக அனுப்பப்படும் கடிதம் அல்லது கட்டு உள்ளூர்களில் 1 முதல் 2 நாட்களுக்குள்ளும், பெரும் நகரம் ஒன்றிலிருந்து மற்றொரு பெருநகரத்திற்கு (Metro – Metro) 1 முதல் 3 நாட்களுக்குள்ளும், மாநிலத் தலைநகர் ஒன்றிலிருந்து மற்றொரு மாநிலத் தலைநகருக்கு (State Capital to State Capital) 1 முதல் 4 நாட்களுக்குள்ளும், மாநிலத்திற்குள்ளாக (Same State) 1 முதல் 4 நாட்களுக்குள்ளும், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு 1 முதல் 5 நாட்களுக்குள்ளும் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இங்கு உள்ளூர் என்பது, பெருநகரங்களில் குறிப்பிட்ட அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டும், பெருநகரங்களைத் தவிர்த்த மற்ற நகரங்களில் நகராட்சி எல்லைப் பகுதிகளைக் கொண்டும், சிறிய நகரங்களில் ஒரே அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொண்டும் கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் சில முதன்மையான அஞ்சல் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் விரைவு அஞ்சல் சேவை மையங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
உள்நாட்டு விரைவு அஞ்சல் சேவையில் அனுப்பப்படும் சரக்குகளுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
முன்பதிவு முதல் உரியவரிடம் சேர்க்கப்படும் வரை இணைய வழியில், அனுப்பப்படும் சரக்குகள் கொண்டு செல்லும் வழித்தடங்களை அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
அனுப்பப்படும் சரக்குகள் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்றடைந்தவுடன் ஒரு குறுந்தகவலும், உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டவுடன், அதனை உறுதிப்படுத்தி ஒரு குறுந்தகவலும் என்று இரு குறுந்தகவல்கள் சரக்குகளை அனுப்பியவரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
பெரு நிறுவனங்கள் மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட மையங்கள் போன்றவைகளிடமிருந்து நேரடியாக அவர்களது அலுவலகங்களிலேயே விரைவு அஞ்சல் சேவையினைப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த வாடிக்கையாளர்கள் முன்பணம் எதுவும் செலுத்தாமல் கடன் வசதியில் இச்சேவையைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
நிறுவனங்கள் மற்றும் பெரும் வாடிக்கையாளருக்குக் கட்டணச் சலுகையும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ரூ.2000/- முதல் ரூ.1,00,000/- வரையிலான தினசரி வருவாய் பிரிவில் 5% என்றும், ரூ.1,00,000/-க்கு அதிகமான தினசரி வருவாய் பிரிவில் 10% என்றும் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகையினைப் பெற்றிட அனுப்பப்படும் கடிதம் / கட்டுகளில் அனுப்புபவரின் முகவரி ஒன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இணைய வணிகம் மற்றும் இணைய வழி விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கும் போது பணம் பெற்றுக் கொள்ளும் (Cash on Delivery) வசதி தரப்பட்டிருக்கிறது.
அனுப்பப்படும் சரக்கு இழப்பு, திருட்டு அல்லது சேதம் போன்றவைகள் நிகழும் நிலையில், விரைவு அஞ்சல் சேவைக்குச் செலுத்திய கட்டணத்தின் இரு மடங்கு அல்லது ரூ.1000/- என்று கணக்கிட்டு, இதில் எது குறைவோ அது இழப்பீடாக வழங்கப்படும்.
வெளிநாட்டு விரைவு அஞ்சல்
இந்தியாவிலிருக்கும் அஞ்சல் அலுவலகங்களிலிருந்து ஆவணங்கள் மற்றும் வணிகப்பொருட்கள் வெளிநாட்டு விரைவு அஞ்சல் வழியில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களின் அஞ்சல் அலுவலகங்களில் பிற்பகல் வேளைகளிலும் வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவை பிரிவு செயல்படுகிறது.
வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவை வழியில் 35 கிலோ எடை வரையிலான சரக்குகளை அனுப்பி வைக்க முடியும். இருப்பினும், சில நாடுகளில் குறைந்த எடைக் கட்டுப்பாடுகள் இருப்பதால், குறிப்பிட்ட நாட்டின் எடைக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு சரக்குகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதே போன்று, சரக்குப் பெட்டகம் எந்த ஒரு பரிமாணத்திலும் 1.5 மீட்டருக்கு அதிகமில்லாமலும், சுற்றளவில் 3 மீட்டருக்கு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவை வழியாக அனுப்பப்படும் ஆவணங்கள் மற்றும் சரக்குகள் அனைத்தும் சுங்கச் சாவடிப் பரிசோதனைகளுக்குட்பட்டது. இச்சேவையில் ‘முடிவு முதல் முடிவு’ (End to End) எனும் முறையில் 3 முதல் 9 நாட்களுக்குள் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சுங்கச் சாவடிப் பரிசோதனை முடிவுக்குப் பின்பு, சென்றடையும் நாட்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவையில் சில சரக்குகள் அனுப்பப்படுவது ஏற்கப்படுவதில்லை. அவை...
தற்போதைய நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டத்திற்கும் முரணாக அனுப்பப்படும் பொருட்கள்.
அநாகரீகமான அல்லது ஆபாசமான அச்சிடல், ஓவியங்கள், ஒளிப்படங்கள், கல்வெட்டுகள், புத்தகங்கள், அட்டைகள் அல்லது வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள்.
அநாகரீகமான அல்லது ஆபாசமான அல்லது தேசவிரோதமான அல்லது கொடூரமான அச்சுறுத்தல் அல்லது பிறர் மனம் புண்படும் வகையில் அமைக்கப்பட்ட வார்த்தைகள், அடையாளங்கள் அல்லது வடிவமைப்புகளுடனான அஞ்சல் அட்டைகள், கடிதங்கள், செய்தித்தாள்கள், பெட்டகங்கள் போன்றவை.
வெடிக்கக் கூடிய, எரியக்கூடிய, அழுக்கடைந்த அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள்.
உயிருடன் உள்ள உயிரினங்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள், அரசு பரிசுச்சீட்டு தவிர்த்த பிற பரிசுச்சீட்டுகள், சீட்டு முன்மொழிவு அல்லது விளம்பரம் அல்லது அவை தொடர்பான பொருட்கள்.
வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவையில் ஆவணங்களுக்குத் தனியாகவும், வணிகப்பொருட்களுக்குத் தனியாகவும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இவை குறைந்தது 250 கிராமாகவும், அதற்கு அதிகமாகும் நிலையில் ஒவ்வொரு 250 கிராம்களாகவும் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இக்கட்டணங்களும் நாடுகளுக்கேற்ப வேறுபாடுகளுடையதாகவும் இருக்கின்றன.
வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவையில் ரூ.2,00,000/- முதல் ரூ.10,00,000/- வரையிலான மாத வருவாய் பிரிவில் 5% என்றும், ரூ.10,00,001/- முதல் ரூ.50,00,000/- வரையிலான மாத வருவாய் பிரிவில் 10% என்றும், ரூ.50,00,000/-க்கும் அதிகமான வருவாய்ப் பிரிவில் 15% என்றும் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.

வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவையில் அனுப்பப்படும் ஆவணங்களின் மதிப்பு பன்னாட்டு நாணய நிதியத்தால் (International Monetary Fund - IMF) வரையறுக்கப்பட்ட சிறப்பு வரைவு உரிமைகள் (Special Drawing Rights - SDRs) மதிப்பீட்டில் SDR 300-க்குக் குறைவான மதிப்பிலான சரக்குகளுக்கு சுங்கப் பரிசோதனைத் துறையின் CN22 படிவத்தையும், SDR 300-க்குக் அதிகமான மதிப்பிலான சரக்குகளுக்கு சுங்கப் பரிசோதனைத் துறையின் CN23 படிவத்தையும் நிரப்பி இணைத்திடல் வேண்டும்.
வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவையில் ஏற்படும் காலதாமதத்திற்கு இழப்பீடு கோரும் நிலையில், வெளிநாட்டு விரைவு அஞ்சல் சேவை மற்றும் வெளிநாட்டுப் பதிவு அஞ்சல் சேவைக் கட்டணத்திற்கான வேறுபாட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படும். திருட்டு அல்லது காணாமல் போதல் அல்லது பாதிப்படைதல் போன்றவைகளுக்கு SDR 30 வரை இழப்பீடு பெற முடியும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!
