Published:Updated:

திருக்கோயில் அறங்காவலர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? | Doubt of Common Man

திருக்கோயில்
News
திருக்கோயில்

பரம்பரை அல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகங்கத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

Published:Updated:

திருக்கோயில் அறங்காவலர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? | Doubt of Common Man

பரம்பரை அல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகங்கத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

திருக்கோயில்
News
திருக்கோயில்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ஜெயசீலன் என்ற வாசகர், "திருக்கோயில் அறங்காவலர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? அறங்காவலருக்கான தகுதிகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான அமைப்பாக அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தனித்தனியாக அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் இடம் பெறும் உறுப்பினருக்கான தகுதிகள் என்ன? இக்குழுவில் எத்தனை பேர் இடம் பெறுவர்? இக்குழு எப்படி அமைக்கப்படுகிறது? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

திருக்கோயில்கள்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழாக இந்து மற்றும் சமண சமயத் திருக்கோயில்களில், இந்து சமயத் திருக்கோயில்கள் – 41,794, சமணத் திருக்கோயில்கள் – 19, திருமடங்கள் – 298, திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள் – 456, அறக்கட்டளைகள் – 995, குறிப்பிட்ட அறக்கட்டளைகள் – 726 என்று ஆறு பிரிவுகளின் கீழாக மொத்தம் 44,288 திருக்கோயில்கள் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. இத்திருக்கோயில்களில் 8,059 திருக்கோயில்கள் பட்டியலிடப்பட்டவை என்றும், 36,229 திருக்கோயில்கள் பட்டியலிடப்படாதவை என்றும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கோயில்
கோயில்

மொத்தமிருக்கும் 44,288 திருக்கோயில்களில், ரூபாய் ஐந்தாயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவை – 22, ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவை – 36207, பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவை – 5,022, இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவை – 782, பத்து லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவை – 2,255 என்று திருக்கோயில்களின் ஆண்டு வருமான அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அறங்காவலர்கள் குழு

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ், இந்து சமயத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்திட, பரம்பரை அறங்காவலர்கள் குழு, பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குழு என்று இரு வழிகளிலான அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தின் கீழான திருக்கோயில்களில், அத்திருக்கோயிலைத் தொடக்கக் காலத்திலிருந்து நிர்வாகம் செய்து வந்த பரம்பரையினர் குடும்பத்தினரிலிருந்து அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்குழுவின் வழியாகத் திருக்கோயில் நிர்வாகம் மேலாண்மை செய்யப்படுகிறது. இத்திருக்கோயில்களில் குறிப்பிட்ட திருக்கோயிலின் நிர்வாகத்திலிருந்த பரம்பரையினர் தவிர்த்து, பிறர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதில்லை.

பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படி அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும், மூன்று அறங்காவலர்களுக்குக் குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு அதிகமில்லாமலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த அறங்காவலர் குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை இணையதளம்
அறநிலையத்துறை இணையதளம்

குழுக்கள் அமைப்பு

பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத திருக்கோயில்களில், பத்து லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களில் பெண் உறுப்பினர் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 5 அறங்காவலர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் திருகோயில்களுக்கு மாவட்ட அளவிலான அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 5 அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவை தவிர்த்து, பத்து லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருக்கும் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்களில் பெண் உறுப்பினர் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உட்பட, கோயிலின் நிர்வாக வசதிக்கேற்ப மூன்று முதல் ஐந்து உறுப்பினர்கள் வரை கொண்ட அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பம்

பரம்பரை அல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் அல்லது கோயில் ஆய்வாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று, அதனை முழுமையாக நிரப்பித் தேவையான ஆவணங்களை இணைத்து, உரிய அலுவலகத்தில் விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அறங்காவலருக்கான தகுதிகள்

அறங்காவலர் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் கீழ்க்காணும் தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

1. இந்து சமயத்தவராக இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறையாக இருக்கின்றபோதிலும், இந்து சமயத்தின் உட்பிரிவுகளான சைவம், வைணவம் என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இந்த உட்பிரிவு, அவர்களை சைவத் திருக்கோயில்கள், வைணவத் திருக்கோயில்களில் அறங்காவலராக நியமித்திட உதவுகிறது.

2. விண்ணப்பதாரர் 25 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

3. கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவராகவும், இந்தியக் குடிமகனாகவும் இருக்க வேண்டும்.

5. திருக்கோயில் இருக்கும் ஊரில் நற்பெயருடையவராகவும், நன்னடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

திருக்கோயில்
திருக்கோயில்


6. திருக்கோயில் தொடர்புடைய செயல்பாடுகளில் ஆர்வமுடையவராகவும், அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள போதிய நேரமுடையவராகவும் இருக்க வேண்டும்.

7. அவர் பாகப்பிரிவினை செய்யப்படாத குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட தான தருமங்கள் அல்லது கட்டளைகள் அல்லது இதர கைங்கரியங்கள் (ஆன்மிகப் பணி) குறித்த விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

8. அறங்காவலர் பதவிப்பணிகளைப் புரிவதற்கும், கடமைகளை ஆற்றுவதற்கும் தகுதியுடையவராக இருக்க வேண்டும். மனச்சீர்கேடு உடையவராகவோ, வேறு மனநலக் குறைவினால், மனத்தளர்ச்சியினால் துன்புறுபவராகவோ, அருவருக்கத்தக்க நோயுடையவராகவோ இருக்கக் கூடாது.

9. சமய நிறுவனத்தின் குத்தகையிலுள்ள சொத்து எதிலும் அல்லது அதனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது அதற்காகச் செய்யப்படும் பணி எதிலும் உரித்தமுடையவராக இருப்பின், அத்தகைய சமய நிறுவனம் அல்லது நிலைக்கொடைக்கு எந்த வகையான நிலுவைத் தொகையும் பாக்கி இருக்கக்கூடாது.

10. சமய நிறுவனத்தின் சார்பாக அல்லது அதற்கு எதிராக ஊதியம் பெறும் சட்டத் தொழிலாற்றுநராகப் பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது.

11. மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது வட்டார அதிகார அமைப்புகளின் கீழுள்ள பணியிலிருந்து நீக்கப்பட்டவராகவோ அல்லது பணியறவு செய்யப்பட்டவராகவோ இருக்கக் கூடாது.

12. ஒழுக்கத் தவற்றினை உள்ளடக்கிய குற்றத்திற்காகக் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அத்தகைய தண்டனைத் தீர்ப்பு எதிர் மாறாக்கப்படாதிருத்தல் அல்லது அந்தக் குற்றம் மன்னிக்கப்படாமல் இருத்தல் கூடாது.

13. நிர்வாகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களாக இருக்கக் கூடாது.

என்பன உள்ளிட்ட மேலும் சில நன்னடத்தைத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

நியமனம்

பத்து லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கும், மாவட்ட அறங்காவலர் குழுக்களுக்கும் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தகுதியுடையவர்களைத் தேர்வு செய்து அறங்காவலர்கள் குழுக்களை அமைக்கிறது.

பத்து லட்சத்துக்குக் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கான அறங்காவலர்கள் குழுக்களுக்குப் பெற்றப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, மாவட்ட அறங்காவலர் குழு தகுதியுடையவர்களைத் தேர்வு செய்து அறங்காவலர் குழுக்களை அமைக்கிறது.

திருக்கோயில்
திருக்கோயில்

தக்கார்

அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாகக் காலியிடம் ஏற்படும் போது அடுத்த அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாகத் தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.

இந்து சமய ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடுடைய, திருக்கோயில் அறங்காவலர்களாகச் செயல்பட விருப்பம் கொண்டவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையாளர் / இணை ஆணையாளர் / உதவி ஆணையாளர் அலுவலகங்களிலோ அல்லது அருகிலுள்ள இந்து சமயத் திருக்கோயில் ஆய்வாளர் அலுவலகங்களிலோ உரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man