விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சிவசங்கரி என்ற வாசகர், "தங்கத்தில் 24 காரட், 22 காரட் என்றால் என்ன? ஹால் மார்க் தங்கம் என்றால் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

உலகில் மதிப்பு குறையாத பொருள் ஒன்று உண்டென்றால், அது தங்கமாகத்தான் இருக்கும். 1964 ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 6.32 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,833 ரூபாய். தங்கத்தின் விலை மட்டும் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் தலைமை வங்கியாகச் செயல்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) உள்ளிட்ட, உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் தலைமை வங்கிகள் தங்களது பணத்தின் பாதுகாப்பு கருதி, தங்களது பணத்தைத் தங்கத்திலேயே அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.
பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கனிமங்களில் இரும்பு, பித்தளை உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் தனித்திருப்பதில்லை. வெட்டி எடுக்கப்படும் கனிமங்களிலிருந்து, வேதியியல் முறைகளைப் பின்பற்றியே அவை தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஆனால், தங்கம் அப்படியில்லை, தங்கமாகவே வெட்டியெடுக்கப்படுகிறது.

தங்கத்தில் வேறு எந்தக் கூட்டுப் பொருட்களும் சேர்ந்திருப்பதில்லை. தங்கத்தில் சில மாசுகள் மட்டுமே சேர்ந்திருக்கும். அந்த மாசுக்களை மட்டுமே வேதியியல் முறைப்படி நீக்குகின்றனர். தங்கம் மற்ற உலோகங்களைப் போல் துரு பிடிப்பதில்லை, தட்ப வெப்பநிலைகளுக்கேற்ப மாறுபாடு அடைவதில்லை. இதன் காரணமாகத் தங்கத்தில் செய்யப்படும் அணிகலன்கள் அணிபவர்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட எவ்விதத் தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே, தங்கத்திலான அணிகலன்களுக்கு எப்போதும் தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
தங்கத்தினால் செய்யப்படும் அணிகலன்கள் 24 காரட், 22, காரட், 18 காரட் என்கிற அளவீடுகளால் மதிப்பிடப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கமாக வாங்குவதே சிறந்தது என்று மற்றவர்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள். ஹால் மார்க் அணிகலன்களை மட்டுமே வாங்கும்படி அரசும் நுகர்வோர்களைத் தொடந்து வலியுறுத்தி வருகிறது. காரட், ஹால்மார்க் இவையெல்லாம் என்ன?
முழுமையானத் தெரிந்து கொள்ள, தேனி விஸ்வகர்ம நகைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் வே. சிதம்பரம் அவர்களை அணுகினோம். அவர் கூறிய தகவல்கள்.

காரட்:
தங்கத்திலான அணிகலன்களைத் தனித்துச் செய்ய இயலாது. தங்கத்துடன், செம்பு, வெள்ளி உள்ளிட்ட சில உலோகங்களைச் சேர்த்தால் மட்டுமே அணிகலன்களைச் செய்ய முடியும். தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவைக் கொண்டு, தங்கத்தின் தனித்தன்மையும் மாற்றமடைகிறது. தங்கத்தின் தனித்தன்மையை, அதாவது அதன் தூய்மையை அளவிடும் அளவினை காரட் என்கின்றனர்.
99.9 சதவிகிதம் எனும் அளவில் தூய்மையாக, மஞ்சள் நிறத்தில் ஒளிரக்கூடியதாக இருக்கும் தங்கத்தை 24 காரட் தங்கம் என மதிப்பிடுகின்றனர். எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், 24 காரட் அளவிலான தங்கத்தில் முழுமையாக, 24 பங்கு தங்கம் இருக்கிறது. தங்கத்தில் 24 காரட் எனும் அளவிற்கு அதிகமான அளவீடு எதுவும் இல்லை. காது நோய்த் தொற்றினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, காதின் மையத்தில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் டிம்பினாஸ்டமி (Tympanostomy) குழாய்கள்போன்ற சில மருத்துவச் சாதனங்களில் 24 காரட் தூய தங்கம் பயன்படுத்தப்படுகிறது. சில மின்னணு சாதனங்களிலும் இது பயன்படுத்தப்படும்.

தங்கத்தை மட்டும் கொண்டு உறுதியான அணிகலன்கள் செய்வது என்பது இயலாதென்பதால், தங்கத்துடன் செம்பு (தாமிரம்), வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்த்து அணிகலன்கள் செய்யப்படுகின்றன. தங்கத்துடன் பிற உலோகங்களைச் சேர்ப்பதால்தான் தங்கத்தின் கட்டமைப்பு வலுப்பெறுகிறது. இந்த வலு செய்யப்படும் அணிகலன்களை நீடித்து உழைக்கச் செய்கிறது. தங்கத்துடன் சேர்க்கப்படும் பிற உலோகங்களின் அளவைக் கொண்டு, தங்கத்தின் தூய்மை அளவும் மாறுபடுகிறது. தங்கத்தின் முழுமையான, தூய அளவான 24 பங்கு தங்கத்தில் 22 பங்கு தங்கத்தையும், 2 பங்கு பிற உலோகத்தையும் கொண்டிருந்தால் அந்த தங்கத்தினை 22 காரட் தங்கம் என்கின்றனர். அதாவது, 22 காரட் தங்கத்தில் 91.67 சதவிகிதம் தங்கம், மீதமுள்ள 8.33 சதவிகிதம் செம்பு (தாமிரம்), வெள்ளி, துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகக் கலவையிலானது. சாதாரண தங்க அணிகலன்களைச் செய்ய 22 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டாலும், வைரங்கள் மற்றும் கனமான பொருட்கள் பதித்த நகைகளுக்கு இவை உகந்ததல்ல.
இதே போன்று, தங்கத்தின் முழுமையான தூய அளவான 24 பங்கு தங்கத்தில் 18 பங்கு தங்கத்தையும், 6 பங்கு பிற உலோகத்தையும் கொண்டிருந்தால் அத்தங்கத்தினை 18 காரட் தங்கம் என்று சொல்லலாம். அதாவது, 18 காரட் தங்கத்தில், 75 சதவிகிதம் தங்கம், மீதமுள்ள 25 சதவிகிதம் செம்பு (தாமிரம்), வெள்ளி, துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகக் கலவையிலானது. வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பதிக்கப்பட்ட நகைகள் பெரும்பான்மையாக 18 காரட் தங்கத்திலேயேச் செய்யப்படுகின்றன. இந்த வகையான தங்கமானது 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்துடன் ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கும். இது சற்று மந்தமான தங்க நிறத்தில் காணப்படும்.
18 காரட் அணிகலன்கள் என்பதை 18K, 18Kt, 18k எனும் குறியீடுகளாலோ அல்லது இதே போன்ற சில மாறுபாடுகள் கொண்ட குறியீடுகளால் முத்திரையிடப்பட்டிருப்பதைக் காணமுடியும். சில இடங்களில், அணிகலன்களில் 75 சதவீதம் மட்டுமே தங்கம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் நோக்கத்தில் 18 பங்கு தங்கம் மட்டுமே இதிலிருக்கிறது என்பதை அடையாளப்படுத்திட, அதன் சதவிகித அளவை 750, 0.75 எனும் எண் குறியீடுகளால் முத்திரையிடப்பட்டிருப்பதைக் கொண்டும் கண்டறியலாம்.
தங்கத்தில் 24 காரட் – 100% தங்கம், 22 காரட் - 91.7% தங்கம், 18 காரட் - 75% தங்கம், 14 காரட் - 58.3% தங்கம், 12 காரட் - 50% தங்கம்,10 காரட் - 41.7% தங்கம் என்றும் எளிதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தங்கத்தின் தூய்மை அளவு
பொதுவாகத் தங்கத்தின் தூய்மை அளவைக் கொண்டே தங்கத்தின் காரட் அளவீடுகள் செய்யப்படுகின்றன. 24 காரட் தங்கமானது 1000 தூய்மையில் 1000 பாகங்களாக அல்லது தூய்மை 1.000 ஆகக் கணக்கிடப்படுகிறது. தங்கத்தின் தூய்மை அளவைக் கணக்கிடத் தங்கத்தின் காரட் அளவை தங்கத்தின் முழு காரட் அளவான 24 ஆல் வகுத்து, அதைத் தங்கத்தின் முழுத் தூய்மை அளவான 1000 ஆல் பெருக்கிக் கிடைக்கும் அளவையேத் தங்கத்தின் தூய்மை அளவாகக் கொள்ளலாம். 22 காரட் தங்கத்தின் தூய்மையினைக் கணக்கிட, 22 காரட் தங்கத்தினை 24 காரட் தங்கத்தால் வகுத்து, அதனைத் தங்கத்தின் முழுத் தூய்மை அளவால் பெருக்கினால் (22/24 x 1000 = 0.9166) எனும் 0.9166 அளவேத் தங்கத்தின் தூய்மை நிலையாகும். இதே போன்று, 21 காரட் என்பது 21 ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைக்கும் 0.875 என்ற தங்கத்தின் தூய்மை நிலையாகும் இதனைப் போலவே 18 காரட்டுக்குக் கணக்கிட்டால் 0.750 என்ற தங்கத்தின் தூய்மை நிலை கிடைக்கிறது.

தங்கத்தின் நிறங்கள்
தூய தங்கமான 24 காரட் தங்கம் இயற்கையான பொன் நிறத்தைப் பெற்றுள்ளது. அதன் தூய்மையை 24 காரட்டுக்குக் குறைவாக மாற்றாமல், அதன் நிறத்தை மாற்ற முடியாது. அணிகலன்களைச் செய்யும் போது, உலோகக் கலைவையை மாற்றுவதன் மூலம் தங்கத்தை பிற நிறங்களுக்கு மாற்ற முடிகிறது. உதாரணமாக, தங்கத்தின் உலோகக் கலவையில் அதிகமான செம்பு (தாமிரம்) சேர்க்கப்பட்டு இளஞ்சிவப்புத் தங்கம் தயாரிக்கப்படுகிறது. இதே போன்று, துத்தநாகம் மற்றும் வெள்ளி அதிகமாக சேர்க்கப்பட்டு பச்சை நிறத் தங்கமும், நிக்கல் அதிகமாகச் சேர்க்கப்பட்டு வெள்ளை நிறத் தங்கமும் தயாரிக்கப்படுகின்றன. மின்முலாம் பூசுவதன் மூலம் தங்கப் பொருட்களின் மேற்பரப்பிற்கு நிறம் கொடுக்கலாம். இருப்பினும், இது ஒரு மேற்பூச்சாகவே இருக்கும் என்பதுடன் இது காலப்போக்கில் தேய்ந்து போகும்.
ஹால் மார்க் தங்கம்
ஹால் மார்க் என்பது இந்தியாவில் தங்க அணிகலன்களின் தரத்தை மதிப்பிடும் முறையாகும். ஹால் மார்க் குறியிடப்பட்டிருக்கும் தங்கமானது, இந்தியத் தர நிர்ணயக் கழகம் வகுத்திருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி, வாங்கும் தங்கத்தின் தூய்மை மற்றும் அளவுக்கேற்ற சரியான விலையினைச் செலுத்துவதற்கு உறுதியளிக்கிறது.
இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards - BIS) உரிமம் பெற்ற ஹால் மார்க்கிங் மையங்கள் (Assaying and hallmarking centers - AHC) இந்தியத் தர நிர்ணய அமைப்பு வகுத்திருக்கும் விதிமுறைகளைக் கொண்டு, தங்கத்தின் தூய்மை அளவுக்கேற்றபடி ஹால் மார்க்கிங்கை வழங்குகின்றன. இந்தியத் தர நிர்ணய அமைப்பிடமிருந்து தங்கத்தை மதிப்பிடுவதற்கான உரிமங்களை 680 ஹால் மார்க்கிங் மையங்கள் பெற்றிருக்கின்றன. இதே போன்று, ஹால் மார்க் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனைக்கான சான்றிதழ்களை இந்தியத் தர நிர்ணய அமைப்பிடமிருந்து சுமார் 28,000 தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன் விற்பனையாளர்கள் பெற்றிருக்கின்றனர்.
இந்தியத் தர நிர்ணய அமைப்பு 2000-ம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் தங்கக் கலப்பு உலோகங்களுக்கான தர நிர்ணயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆபரணத் தங்கம் மற்றும் கலப்பு உலோகங்களின் நிலை (IS 1417), தூய்மைத் தங்கம், ஆபரணத் தங்கம் மற்றும் தங்கக் கலப்பு உலோகங்களின் மதிப்பீடு (IS 1418), 23, 22, 21, 18, 14 மற்றும் 9 காரட் தங்கக் கலப்புலோகங்களின் வழிநெறி (IS 2790), ஆபரணத் தங்க உற்பத்தியில் பயன்படும் தங்கப்பற்றுகள் (IS 3095) உள்ளிட்ட வழிகாட்டுதலின்படி தங்கத்திற்கான ஹால் மார்க்கிங் வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் வெள்ளிக்கும்; ஆபரண வெள்ளி மற்றும் வெள்ளிக் கலப்பு உலோகங்களின் தகுதி நிலை (IS 2112) வழிகாட்டுதலின்படி ஹால் மார்க்கிங் வழங்கப்படுகிறது.

ஹால் மார்க் செய்யப்பட்ட தங்க அணிகலன்களில் நான்கு குறியீடுகள் இடம் பெறுகின்றன. அதாவது, தங்க அணிகலன்களில் முதலாவதாக, இந்தியத் தர நிர்ணய அமைப்பின் இலச்சினை (Bureau of Indian Standards Logo) இடம் பெற்றிருக்கும். இரண்டாவதாக, தங்கத்தின் காரட் தூய்மை மற்றும் நேர்த்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, ஹால் மார்க்கிங் உரிமம் பெற்ற ஹால் மார்க்கிங் மையத்தின் குறியீடு இடம் பெறுகிறது. நான்காவதாக, அணிகலன் வணிகம் செய்யும் கடையின் குறியீடு இடம் பெற்றிருக்கும். இந்த அடையாளங்களைக் கொண்டு ஹால் மார்க்கிங் செய்யப்பட்ட தங்கத்தினை நம்பிக்கையுடன் வாங்கலாம்.
ஹால் மார்க்கிங் செய்யப்பட்ட தங்க அணிகலன் வாங்கியதில் ஏதாவது குறைகள் தென்பட்டால், தங்க அணிகலன் வாங்கிய வணிக நிறுவனத்தில் தகுந்த விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதே அளவிலான வேறு அணிகலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் மறுக்கும் நிலையில்,
DDG (Hallmarking), Room No. 555, Manakalaya, Bureau of Indian Standards, 9, Bahadur Shah Zafar Marg, New Delhi – 110002
எனும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது hallmarking@bis.org.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் புகார்களை அனுப்பித் தகுந்தத் தீர்வினைப் பெறலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
