அரசியல்
சமூகம்
Published:Updated:

நாலு பக்கமும் போலீஸ்... நடுவில் கச்சநத்தம்!

கச்சநத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
கச்சநத்தம்

#DoubtOfCommonMan

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், மணிக்குமார் என்ற வாசகர் எழுப்பிய ‘கச்சநத்தம் படுகொலையில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன, அந்தக் கிராமம் இப்போது எப்படி உள்ளது?’ என்கிற கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. உங்களுக்கும் ஆக்கப்பூர்வமான கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால் http://bit.ly/DoubtOfCommonMan என்ற இணையப் பக்கத்தில் பதிவுசெய்யலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் உரிய பதில்கள் பிரசுரமாகும்.

நாலு பக்கமும் போலீஸ்... நடுவில் கச்சநத்தம்!

கடந்த 2018-ம் ஆண்டு இதே ஜூலை மாதம்... சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டார்கள். ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்தப் படுகொலைகள் தமிழகத்தையே உலுக்கின. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தற்போது சிறையில் உள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நாலு பக்கமும் போலீஸ்... நடுவில் கச்சநத்தம்!

கச்சநத்தம் கிராமத்துக்குப் பயணித்தோம். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சிறிய சாலையில் ஒன்பது கிலோ மீட்டர் பயணித்தால் கச்சநத்தம் வருகிறது. சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் அங்கு வசிக்கும் மக்களின் முகங்களில் பதற்றம் அப்படியேதான் இருக்கிறது. கிராமத்துக்கு நுழையும் பிரதான சாலையில், இரும்புத் தடுப்பு போட்டு வைத்திருக்கிறார்கள். அதன் அருகில் அமர்ந்திருக்கும் போலீஸார், ஊருக்குள் நுழைபவர்களிடம் விசாரித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களைப் பதிவுசெய்த பிறகே உள்ளே விடுகிறார்கள். நாம் உள்ளே நுழைந்தபோதும் அப்படியே!

பின்பு நம்மை அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘‘மேற்கொண்டு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதால், காவல்துறையின் முழு கண்காணிப்பில் இந்த ஊர் உள்ளது. மக்களின் நலனுக்காகத்தான் ஊருக்குள் வருகிறவர்களை விசாரித்து அனுப்புகிறோம். மக்களிடம் நீங்கள் பேச வேண்டும் என்றால், டி.எஸ்.பி-யிடம் அனுமதி வாங்கவேண்டும்’’ என்றார் அங்கிருந்த எஸ்.ஐ-யான ஜஹாங்கீர். மானாமதுரை

டி.எஸ்.பி-யிடம் பேசி அனுமதி வாங்கினோம்.

வாருங்கள்... ஊருக்குள் செல்வோம். கச்சநத்தம் சிறிய கிராமம். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களைப் பாதுகாக்க இருபது போலீஸார் ஊரைச் சுற்றி காவல் இருக்கிறார்கள். இங்கு நடந்த படுகொலைகளைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் அப்போது மதுரையில் தொடர் போராட்டங்களை நடத்தின. இயக்குநர் பா.இரஞ்சித்தும் போராட்டத்தில் பங்கேற்றார்.

‘பட்டியல் சமூக மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் இந்தப் பகுதியை ‘தீண்டாமை வன்கொடுமை நிறைந்த பகுதி’ என்று அறிவித்து, தமிழக அரசு நேரடியாகக் கண்காணிக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கும் காயம்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு, அரசு வேலை வழங்கவேண்டும்’ என்றெல்லாம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அரசு சொன்ன பிறகுதான் கொலையானவர்களின் உடல்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்டார்கள்.

சந்திரசேகர், சண்முகநாதன்,  ஆறுமுகம்
சந்திரசேகர், சண்முகநாதன், ஆறுமுகம்

அந்தத் தாக்குதலில் படுகாயமுற்று உயிர் பிழைத்த சுகுமாறனைச் சந்தித்தோம். ‘‘நடந்த சம்பவத்திலிருந்து இன்னும் மீள முடியல. அன்னைக்கு எல்லாரும் வீட்டுலதான் இருந்தோம். திடீர்ன்னு ஒரு கும்பல் ஆயுதங்களோட வந்து தாக்கினாங்க. எனக்குப் பல இடத்துல வெட்டு. என்ன நடக்குது, எதுக்கு வெட்டுறாங்கன்னே தெரியல. ஊர் முழுக்க ஒரே அலறல் சத்தம். கொஞ்ச நேரத்துல எல்லா வீடுகளையும் நாசப்படுத்திட்டு, பல பேரை காயப்படுத்திட்டுப் போயிட்டாங்க. மதுரை ஆஸ்பத்திரியில ரெண்டு மாசம் இருந்தேன். ஆனாலும், முன்ன மாதிரி இயல்பா செயல்பட முடியல.

எங்க ஊர்ல எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்க ரொம்ப குறைவாக இருந்தாலும், எல்லோரும் நல்லா படிச்சு நல்ல வேலைகள்ல இருக்காங்க. யார் கிட்டேயும் எந்த வம்புதும்புக்கும் போறது கிடையாது. இங்கேயிருக்கிற விவசாய நிலங்களெல்லாம் எங்களோடது தான். நாங்க கல்வி, பொருளாதாரத்துல வளர்ந்து வர்றது சிலருக்குப் பிடிக்கல. எங்க பகுதியில வேற சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இருக்கு. சுத்தியுள்ள ஊர் முழுக்க அவங்க சாதிக்காரங்கதான். அந்த ஒரு குடும்பத்து ஆளுங்கதான் எல்லாத்துக்கும் காரணம்.

அவங்க ஆளுங்க அடிக்கடி ஊருக் குள்ள வந்து வம்பிழுப்பாங்க. அதைப் பெருசு பண்ணாம போயிடுவோம். பல வருஷங்களா இப்படித்தான் வாழ்ந்துக்கிட்டிருந்தோம். ஒருமுறை, அவங்க பண்ணின தகராறைப் பொறுக்க முடியாம போலீஸ்ல புகார் கொடுத்தோம். அதுக்காகதான் மூணு உசுரைத் துள்ளத்துடிக்க வெட்டிப் போட்டுட்டுப் போயிட்டாங்க’’ என்று கண்கலங்கினார்் சுகுமாறன்.

சுகுமாறன் எம்.ஏ முடித்திருக்கிறார். அரசுப் பணிக்காகத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தவர், தற்போது வீட்டுக்குள்ளேயே முடக்கிக் கிடக்கிறார். சுகுமாறனின் தந்தை தனசேகரனுக்கு உடம்பு முழுவதும் வெட்டுக்காயத் தழும்புகள். பதற்றத்தோடு நம்மிடம் பேசினார்.

‘‘கொலையான சண்முகநாதன் எங்க உறவுக்காரர். தனியார் நிறுவனத்துல நல்ல வேலையில இருந்தார். வீட்டுல டி.வி பார்த்துட்டு இருக்கும்போது கொன்னு போட்டுட்டுப் போயிட் டாங்க. எதுக்கு வெட்டுறாங்கன்னுகூட அவருக்குத் தெரியாது. செத்துப்போன மற்ற ரெண்டு குடும்பத்துக்கு அரசு வேலை கொடுத்தாங்க, ஆனா, சண்முகநாதன் குடும்பத்துக்கு இன்னும் கொடுக்கல’’ என்றார் வருத்தத்துடன்.

எங்க ஊரைச் சுத்தி, போலீஸ் காவலுக்கு இருக்குறது நல்லதுதான். ஆனா, இது எத்தனை நாளைக்குன்னு தெரியல. நிரந்தரமா எங்க பாதுகாப்புக்கு ஒரு வழி பண்ணணும்!

காயம்பட்ட மலைச்சாமியின் மனைவி பிச்சையம்மாள், ‘‘இப்ப நெனைச்சாலும் குலை நடுங்குது. அன்னைக்கு நடந்த தாக்குதல்ல என் வீட்டுக்காரருக்கு உடம்பு முழுக்க அருவா வெட்டு. கையில ஒரு விரல் போயிடுச்சு. காயம் ஆறின பிறகும், அவரால முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியல’’ என்றார் கண்ணீருடன்.

தனசேகரன்,  பிச்சையம்மாள், சுகுமாறன்
தனசேகரன், பிச்சையம்மாள், சுகுமாறன்

ஊர் பெரியவர் சதாசிவம், ‘‘கொலை செய்யப்பட்டவங்களோட குடும்பத் துக்கு இழப்பீடாக தலா 15 லட்ச ரூபாயை அரசாங்கம் கொடுத்தது. காயம் அடைஞ்சவங்களுக்கு நாலு லட்சம் அறிவிச்சாங்க. ஆனா, மூணு லட்சம்தான் கொடுத்திருக்காங்க. எங்க ஊரைச் சுத்தி, போலீஸ் காவலுக்கு இருக்குறது நல்லதுதான். ஆனா, இது எத்தனை நாளைக்குன்னு தெரியல. நிரந்தரமா எங்க பாதுகாப்புக்கு ஒரு வழி பண்ணணும்” என்றார்.

ஊருக்குள் பெரிய அளவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. நிறைய இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் சென்றுவிட்டார்கள். வயதானவர்கள், வெளியூர் செல்ல முடியாதவர்கள்தான் கிராமத்தில் பெரும்பாலும் இருக்கி றார்கள். இந்த ஊர்க்காரர்கள் வெளியூர் சென்றாலும் காவல் துறையில் தகவல் சொல்லிவிட்டுத்தான் செல்லவேண்டும். ஊருக்குள் நுழையும் மூன்று பாதை களிலும் போலீஸ் காவல் போடப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு வழக்கு நடந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம்சாட்டப்படும் ஒற்றை வீடு, இவர்களின் குடியிருப்புக்கு அருகில் தனித்துக் காணப்படுகிறது. நாம் சென்ற சமயத்தில் அங்கு யாரும் இல்லை. அந்த வீட்டுக்கு முன்பாகவும் போலீஸார் காவலுக்கு இருக்கிறார்கள்.

எதிர் தரப்பாகக் கூறப்படும் திருப்பாச்சேத்தி மக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இந்தப் பகுதியில சாதிப் பிரச்னையெல்லாம் இல்லைங்க. சில இளவட்டப் பசங்க தனிப்பட்ட முறையில பண்ற பிரச்னைகளால, மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாமப் போயிடுது. ரவுடித்தனம் பண்ற ஆளுங்களை நாங்க ஆதரிக்கறதில்லை, அவங்க மேல நடவடிக்கை எடுக்கற தையும் நாங்க எதிர்க்கறதில்லை. ஆனா, அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லா மக்களையும் சாதி ஆதிக்கம் பண்றாங்கன்னு சொல்றது உண்மை யில்லை. அந்தச் சம்பவம் நடந்த பிறகு சம்பந்தமில்லாத பலரையும் விசாரணைக்கு அழைச்சுட்டுப் போய் டார்ச்சர் பண்ணிட்டாங்க. இனி இது மாதிரி மோசமான சம்பவங்கள் நடக்கக் கூடாதுன்னுதான் நாங்க கடவுளை வேண்டுறோம்’’ என்கிறார்கள்.

காலம் காயங்களை ஆற்றும் மருந்து என்பார்கள். ஆனால், கச்சநத்தம் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பீதியும் பதற்றமுமாகத்தான் நகர்கிறது. அரசு சிறப்புக் கவனமெடுத்து அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை மீட்டுத்தர வேண்டும்.