Published:Updated:

ரேஷன் கார்டு பெறுவது எப்படி? | Doubt of Common Man

Ration Card | ரேஷன் கார்டு
News
Ration Card | ரேஷன் கார்டு

ரேஷன் கார்டுக்கான இந்த நடைமுறை முடிய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர், விண்ணப்பித்த பதினைந்து நாள்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Published:Updated:

ரேஷன் கார்டு பெறுவது எப்படி? | Doubt of Common Man

ரேஷன் கார்டுக்கான இந்த நடைமுறை முடிய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர், விண்ணப்பித்த பதினைந்து நாள்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Ration Card | ரேஷன் கார்டு
News
Ration Card | ரேஷன் கார்டு
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் ராஜேந்திரன் என்ற வாசகர் ஒருவர், "ரேஷன் கார்டு பெறுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

இந்தியாவில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தேவையான ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்று ரேஷன் அட்டையாகும். அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களில் இருந்து, மானியம், அரசு நிதி என எவற்றை நாம் பெறுவதாக இருந்தாலும் அதற்கு தேவையான அடிப்படை ஆவணம் ரேஷன் கார்டுதான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக நமது வாசகர் ராஜேந்திரன் என்பவர் டவுட் ஆப் காமன் மேன் பக்கத்தில் "புதிதாகத் திருமணம் ஆனவன் நான். என் குடும்பத்தின் ரேஷன் கார்டில் இருந்து என் பெயரையும், என் மனைவியின் குடும்பத்து ரேஷன் கார்டில் இருந்து என் மனைவி பெயரையும் நீக்கி அந்தச் சான்றிதழோடு புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இரண்டு முறையும் ரிஜெக்ட் செய்துவிட்டார்கள். புது ரேஷன் கார்டு பெறுவதற்கு என்னதான் விதிமுறை? எத்தனை நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இதுகுறித்து வடசென்னையைச் சேர்ந்த சமூக சேவகரான எ.த. இளங்கோவனிடம் பேசினோம், "புதிதாக ரேஷன் கார்டு பெற இருப்பவர்கள், தனித்தனியாக தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து அவர்களின் பெயரை நீக்கவேண்டும். இதற்காக அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகலாம். கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாக வேறு ரேஷன் கார்டு பெறும் புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்குக் திருமணம் செய்ததற்கான சான்றிதழ்கள் அவசியம், அதன்பின் பெயர் நீக்குதல் சான்றிதழோடு மேற்கொண்டு அரசு கூறியிருக்கும் சான்றிதழ்களுடன், குறிப்பாக ஆதார் அட்டை, தாங்கள் குடியிருக்கும் வீட்டின் சான்றிதழ் சொந்த வீடாக இருந்தால் வீட்டுவரி ரசீது அல்லது வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து, கூடவே புகைப்படம், எரிவாயு இணைப்பு பெற்றிருப்பின் அதனின் விவரங்கள் மற்றும் மேற்கொண்டு கேட்கும் சில சான்றிதழ்களுடன் இ-சேவை மையங்களிலோ அல்லது நாமே கூட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (நாமே விண்ணப்பிப்பதாக இருந்தால் அரசின் இணையதளத்தில் கூறப்பட்டிருக்கும் விண்ணப்ப முறைகளை நன்றாகப் படித்துக் கொள்ளவும்). முக்கியமாகத் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், வேறு எந்த ரேஷன் கார்டிலும் அவர்களின் பெயர் இல்லாமலும் இருக்க வேண்டும்.

இவையனைத்தும் கொடுத்து ஆன்லைனில் பதிவு செய்தபின், முதலில் ஆவண சரிபார்ப்பு நடக்கும். இதில் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீட்டின் முகவரி தவறுதலாக இருந்தாலோ அல்லது ஆவணங்களில் ஏதேனும் தவறு இருந்தாலோ நம்முடைய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதற்கு நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி நம்முடைய அலைபேசி எண்ணிற்கு வந்துவிடும். அதன்பின் மறுபடியும் ஆவணங்களைச் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஆவணங்களில் பிரச்னை இல்லை என்றால், ஆவண சரிபார்ப்பு முடிந்ததும் நம் விண்ணப்பம் ஏற்கப்பட்டது என்றும், அதற்கான குறிப்பாக ஒரு எண்ணும் நம்முடைய அலைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக வரும்.

எ.த.இளங்கோ
எ.த.இளங்கோ

இவற்றை நாம் கவனமாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நம்முடைய விண்ணப்பம் துறைவாரியான சரிபார்ப்பிற்கு அனுப்பப்படும். அங்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் தாலுகாவில் உள்ள வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என அனைத்து அதிகாரிகளின் ஒப்புதல்களும் பெற்று பின் ரேஷன் கார்டு நமக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை முடிய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். ஆனால் சமீபத்தில் சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர், விண்ணப்பித்த பதினைந்து நாள்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், நாள்கள் மட்டுமே குறைத்துள்ளனவே தவிர மேற்கூறிய செய்முறைகள் தான் தற்போதும் நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man