Published:Updated:

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? | Doubt of Common Man

கரிம உமிழ்வு | Carbon Emission
News
கரிம உமிழ்வு | Carbon Emission

கரிம உமிழ்வுகளை உறிஞ்சி எடுத்து காற்றைச் சுத்தமாக்கிவிட்டால், ஒரு ஸ்விட்ச் போட்டதுபோல் காலநிலை மாற்றம் அழிந்து மீண்டும் பூமி பழைய நிலைக்குப் போய்விடும் என்றும் சொல்வதற்கில்லை.

Published:Updated:

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? | Doubt of Common Man

கரிம உமிழ்வுகளை உறிஞ்சி எடுத்து காற்றைச் சுத்தமாக்கிவிட்டால், ஒரு ஸ்விட்ச் போட்டதுபோல் காலநிலை மாற்றம் அழிந்து மீண்டும் பூமி பழைய நிலைக்குப் போய்விடும் என்றும் சொல்வதற்கில்லை.

கரிம உமிழ்வு | Carbon Emission
News
கரிம உமிழ்வு | Carbon Emission
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் மருதன் என்ற வாசகர், "காலநிலையை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? தற்போது உலகநாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கொண்டு காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

1880 முதல் 2012 வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.85 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருப்பதாகவும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இது 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை அதிகரித்தால் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகள் வரும் என்பதால், வெப்பநிலை அந்த அளவுக்கு அதிகமாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்ற இலக்கோடு மனித இனம் நின்றுகொண்டிருக்கிறது.

வெப்பநிலை அதிகரித்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகள், குறிப்பாக பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதை படிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் கரிம உமிழ்வுகளே காரணம் என்பதும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள் உறுதியாகத் தெரிந்துவிட்ட நிலையில், அதற்கான தீர்வுகள் இப்போது பரவலாக விவாதிக்கப்படுகின்றன.

கரிம வெளியீடு
கரிம வெளியீடு
காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்காக இரு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது, புதை படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து வளங்குன்றா ஆற்றலுக்காகச் சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்துவது. இரண்டாவது, காற்றில் கரிமம் சேராமல் உறிஞ்சும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது.

கரிம உமிழ்வுகளை உறிஞ்சி சேகரிக்கும் தொழில்நுட்பங்களிலும் (Carbon Capture Technologies) வகைமைகள் உண்டு. கரிம உமிழ்வு வெளியிடப்படும் இடத்திலேயே அதை வெளிவராமல் தடுப்பது. இது Point source capture என்று அழைக்கப்படுகிறது. இது எளிமையானது என்றாலும், இதன் செயல்திறன் 90 முதல் 98 சதவிகிதம் மட்டுமே. அதாவது, இந்தத் தொழில்நுட்பம் நடைமுறையில் இருந்தாலும் 2% முதல் 10% கரிமம் தப்பித்துக் காற்றில் கலந்துவிடுகிறது. இரண்டாவது காற்றில் கலந்துவிட்ட கரிமத்தைப் பிரித்தெடுப்பது. இது கொஞ்சம் சிக்கலானது, இதற்கான ஆராய்ச்சிகளுக்கும் இயந்திரங்களுக்கும் அதிகம் செலவாகும்.

கரிமத்தை உறிஞ்சும் தொழில்நுட்பங்களில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. உலக அளவில் உமிழப்படுகிற கரிமத்தைவிட உறிஞ்சப்படுகிற கரிமம் அதிகமாக இருந்தால் மட்டுமே இது பயனளிக்கும். அந்த அளவுக்குச் செயல்திறனுடன் இயங்கக்கூடிய தொழில்நுட்பங்கள் இன்னும் வரவில்லை. அவற்றை உருவாக்கவேண்டுமானால் அதீத பொருட்செலவில் ஆராய்ச்சிகள் செய்து பெரிய இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டியிருக்கும். இதற்கான நிதி எங்கிருந்து வரும்?

இவற்றைத் தவிர இன்னொரு அரசியல் கேள்வியும் இருக்கிறது. புதை படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும்போது கரிம உமிழ்வு குறைகிறது என்பது எளிமையான ஒரு சமன்பாடு. ஆனால் அதை விட்டுவிட்டு, "இப்போது இருக்கும் எந்த நடைமுறையையும் மாற்றிக்கொள்ள மாட்டோம், நாங்கள் வெளியிடுகிற கரிமத்தை மீண்டும் பிடித்து பாட்டிலுக்குள் அடைக்க நீங்கள் வழி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்" என்று நிறுவனங்கள் ஒதுங்கிக்கொள்வது எந்த வகையில் நியாயம்?

கரிம வெளியீடு
கரிம வெளியீடு

கரிம உமிழ்வுகளை உறிஞ்சி எடுத்து காற்றைச் சுத்தமாக்கிவிட்டால், ஒரு ஸ்விட்ச் போட்டதுபோல் காலநிலை மாற்றம் அழிந்து மீண்டும் பூமி பழைய நிலைக்குப் போய்விடும் என்றும் சொல்வதற்கில்லை. புவியின் சீர்குலைவுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் பங்களித்துவிட்டு, கொட்டிய குப்பையை மீட்டெடுப்பதால் உடனே எல்லாம் மாறிவிடாது. சரியாகச் சொல்லப்போனால் கரிம உமிழ்வுகள் முழுக்க உறிஞ்சப்பட்டாலும் சராசரி வெப்பநிலை இயல்புக்குத் திரும்ப சில ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். பனிப்பாறைகள் மீண்டும் உறைந்த நிலைக்குச் செல்ல சில தசாப்தங்கள் எடுக்கும். அமிலமயமான கடல் இயல்பாக மாற சில நூற்றாண்டுகள் ஆகும். உயர்ந்துவிட்ட கடல் மட்டம் மீண்டும் குறைவதற்கோ சில ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்! அதுவரை காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தொடரும்.

இன்னும் ஆராய்ச்சி அளவில் இருக்கிற கரிம உறிஞ்சு தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்து நமக்கு இருக்கிற காலக்கெடுவுக்குள் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். புதை படிவ எரிபொருள்களின் பயன்பாடுகளைக் குறைக்காமல் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒருவேளை கரிம உறிஞ்சு தொழில்நுட்பங்கள், புதை படிவ எரிபொருள்களைக் குறைப்பது ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்தால் இன்னும் விரைவாகவே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

காற்றாலை, சூரிய ஒளி போன்ற வளங்குன்றா ஆற்றல்களின் பயன்பாடு நிலக்கரி ஆற்றலை விட அதிகமாகவேண்டும். இது 2026ம் ஆண்டின் இலக்கு. வளங்குன்றா ஆற்றல்களின் பயன்பாடு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை விட அதிகமாக வேண்டும். இது 2030ம் ஆண்டுக்கான இலக்கு. சுருக்கமாகச் சொல்லப்போனால் 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கும், மொத்த மின்சாரத்தில் 90 சதவிகிதமும் வளங்குன்றா ஆற்றலில் இருந்து கிடைக்கவேண்டும். இது நடந்தால் மட்டுமே 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய முடியும்.

புதை படிவ எரிபொருள்கள் மீதான நம் பிடிமானத்தைக் குறைத்துக்கொள்வதற்கான பல வழிகளைச் சர்வதேச கூட்டமைப்புகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. அறிவியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் போன்ற பலதுறை நிபுணர்கள் இணைந்து இதில் செயல்படவேண்டியது அவசியம். ஐ.நா சபை சில முக்கியத் தீர்வுகளை முன்வைக்கிறது. அவை...

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
  1. உலக நாடுகளின் அரசுகள் வளங்குன்றா ஆற்றலுக்கான ஆராய்ச்சிகள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான நிதியை ஒதுக்கவேண்டும். எல்லா மக்களுக்கும் புதை படிவ எரிபொருள்களின் விலையிலேயே இது சென்று சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். கரிமம் இல்லாத தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்ய அரசுகள் முன்வரவேண்டும்.

  2. அடுத்தடுத்த வேலைவாய்ப்புத் திட்டங்களில் இதுபோன்ற பசுமைப்பணிகளுக்கான பணியிடங்கள் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படவேண்டும். புதை படிவ எரிபொருள் துறையில் பணியில் இருப்பவர்களுக்கான மாற்று வாழ்வாதாரமாக இது உயரும்.

  3. கரிமத்துக்கு அடுத்து பெரிய ஆபத்தாக விளங்கக்கூடிய மீத்தேனை உமிழும் செயல்பாடுகளைக் கண்டறிந்து, அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்படவேண்டும். அதற்கான ஆராய்ச்சிக்கு அரசுகள் நிதி ஒதுக்கவேண்டும்.

  4. பசுமைப் பொருளாதாரம் பற்றிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதிகமாகக் கரிமத்தை உமிழும் நிறுவனங்கள் மீது கடுமையான வரியும் அபராதமும் விதிக்கப்படவேண்டும். புதை படிவ எரிபொருள் துறைகளுக்குத் தரப்படும் மானியம் குறைக்கப்படவேண்டும், மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டால் இன்னும் நல்லது.

மேலோட்டமாகப் பார்த்தால் இவை எல்லாமே அதிகம் செலவு வைக்கக்கூடிய திட்டங்களாகத் தெரியலாம். ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகிற உயிரிழப்பு, பொருட்சேதம், பொருளாதார சீர்குலைவு, சமூக அமைப்பில் தடுமாற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள நாம் பலமடங்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனோடு ஒப்பிடும்போது இந்த நிதி ஒதுக்கீடு நிச்சயம் குறைவுதான். தவிர, வருமுன் காப்பதற்கு இத்தனை வழிகள் இருக்கும்போது ஏன் சுணக்கம் காட்டவேண்டும்?

"சர்வதேச அளவில் காலநிலை ஒப்பந்தங்களின்போது தாங்கள் கொடுத்த எல்லா உறுதிமொழிகளையும் நாடுகள் நேர்மையாக நிறைவேற்றினால் புதை படிவ எரிபொருள்களைக் குறைப்பதற்கான இலக்கை 2050க்குள் எட்டிவிடலாம்" என்று தெரிவிக்கிறது 2021ல் வந்த சர்வதேச ஆற்றல் துறையின் ஒரு அறிக்கை. கேட்பதற்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் அதில் ஒரு சின்ன நட்சத்திரக் குறியிட்டு 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்று குறிப்பிட்டிருப்பதாகவே இதைப் பார்க்கிறேன்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் | Renewable Resources
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் | Renewable Resources

சும்மா கண்துடைப்பாக இல்லாமல், காலநிலை ஒப்பந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா தீர்மானங்களையும் உலக நாடுகள் அனைத்தும் நேர்மையாக நிறைவேற்றினால் மட்டுமே இது சாத்தியப்படும். எண்ணெய் நிறுவனங்களின் லாபி ஆக்டோபஸ் கரங்களாக நிறைந்திருக்கும் ஆற்றல் உலகில் இதை அமல்படுத்துவது ஒரு பெரிய சவால்.

ஒரே கேள்வி, ஒரே பதிலாக, "காலநிலை மாற்றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? முடியாதா?" என்றால், நிச்சயம் முடியும். தீர்வுகளில் வேகத்தை அதிகப்படுத்த உலக நாடுகள் ஒத்துழைத்தால் அது சாத்தியம்தான். இன்னும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man