
- கண்ணீரில் கடவுளின் தேசம்
`கல்வியறிவு மிகுந்த மாநிலம்’ என்று கொண்டாடப்படும் கேரளாவில், வரதட்சணைக் கொடுமையால் வரிசையாகப் பெண்கள் மரணம் அடையும் சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதிலும், நூற்றுக்கணக்கான பவுன் தங்க நகைகள், நிலபுலன்கள், கார் என அதிக வரதட்சணையுடன் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களை மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இளம்பெண் விஸ்மயாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, ‘வரதட்சணை கொடுக்க மாட்டோம்’ என்று ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருவதால், இந்த விவகாரம் வைரலாகிவருகிறது!
கேரள காவல்துறை அளிக்கும் புள்ளிவிவரங்களில் அடிப்படையில், கடந்த ஐந்தாண்டுகளில் வரதட்சணைக் கொடுமையால் கொலை மற்றும் தற்கொலை என 66 பெண்கள் இறந்திருக்கிறார்கள். 2016 முதல் கடந்த 2021 ஏப்ரல் வரை 15,143 வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் நடந்த சில சம்பவங்களைப் பார்ப்போம்...

கொல்லம் மாவட்டம், நிலமேடு பகுதியைச் சேர்ந்த திரிவிக்கிரமன் நாயரின் மகள் விஸ்மயா.பந்தளம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே 2020, மே 31-ம் தேதி இவருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண்குமாருக்கும் திருமணம் நடந்தது. 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் இருபது சென்ட் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார்கள். திருமணமாகி, ஓராண்டுக்குள்ளாகவே வரதட்சணை பிரச்னை வெடித்திருக்கிறது. இதனால் ஜூன் 21-ம் தேதி பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் விஸ்மயா. அவரது கழுத்தில் காயமும், கையில் முறிவும் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று திரிவிக்கிரமன் நாயர் புகார் அளித்தார்.
விஸ்மயா தன் உறவினர்களுக்கு அனுப்பியிருந்த வாட்ஸ்அப் மெசேஜிலும், ‘வரதட்சணையாகக் கொடுத்த கார் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை என்று கூறி கணவர் என்னையும் என் தந்தையையும் திட்டிக்கொண்டே இருந்தார். அப்போது நான் அறையைவிட்டு வெளியேற முயன்றதால், என்னைக் கடுமையாகத் தாக்கினார். தரையில் தள்ளி முகத்தில் மிதித்தார்’ என்று தெரிவித்திருந்தார். இந்தத் தகவல்களைச் சேகரித்த போலீஸார், வரதட்சணைக் கொடுமையால் விஸ்மயா இறந்திருப்பதை உறுதிப்படுத்தினார்கள். கிரண்குமார் கைதுசெய்யப்பட்டதுடன், அரசுப் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் நாயர், 26 ஆண்டுகள் வளைகுடா நாட்டில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து சேர்த்த பணம் போதாமல், தன் மகளுக்கு வரதட்சணை கொடுக்க வங்கியிலும் லோன் எடுத்திருக்கிறார். ‘‘காரின் மதிப்பு குறைவு என்று கிரண்குமார் கூறியபோது, கையில் பணமில்லாததால் கொடுக்க முடியவில்லை. இதனால், கடற்படையில் பணிபுரியும் என் மகன் விஜித்திடம் அடிக்கடி தகராறு செய்தார் கிரண்குமார். பீரோவில் இருந்த ஸ்டெதஸ்கோப்பில் ‘டாக்டர் விஸ்மயா’ என எழுதிவைத்த என் மகளின் கனவு நிறைவேறாமலே போய்விட்டது’’ என வெடித்து அழுகிறார் திரிவிக்கிரமன் நாயர்.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் ‘வரதட்சணை கொடுக்க மாட்டோம்’ என்று தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுவருகிறார்கள். கோவையிலும் பெண்கள் பலர் இதே போன்று பதிவிட்டுவருகின்றனர். நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ், ‘விஸ்மயா... கேட்க முடியாத உன் குரலுக்காகவும், சாம்பலில் கரைக்கப்பட்ட உன் கனவுகளுக்காகவும் வருந்துகிறேன். படிப்பறிவில் முன்னேறிய சமூகமான நாம், வரதட்சணை விஷயத்தில் குற்ற உணர்வே இல்லாமல் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே கேரளத்தை உலுக்கிய வரதட்சணைக் கொலை, இதே கொல்லம் மாவட்டத்தில்தான் கடந்த ஆண்டு நடந்தது. கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்பவரை சூரஜ் 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்தின்போது 112 பவுன் நகை, கார் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார்கள். கூடுதல் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்த சூரஜ், ஒருகட்டத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதிக வரதட்சணையுடன் வேறு திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டார்.
இயற்கையாக மரணம் ஏற்பட்டது போன்று மனைவியைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, பாம்பாட்டி ஒருவரிடம் அணலி வகைப் பாம்பை விலைக்கு வாங்கி 2020, மார்ச் 2-ம் தேதி மனைவியைக் கடிக்கவிட்டுள்ளார். பாம்பு கடித்த வலியால் சத்தம் போட்டு ஊரைக் கூட்டியதால், உத்ராவை மருத்துவமனையில் அட்மிட் செய்தார் சூரஜ். உயிர் பிழைத்த உத்ரா, கொல்லத்திலுள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். அடுத்ததாக, 2020, மே 6-ம் தேதி மனைவி வீட்டுக்குச் சென்ற சூரஜ், அதிக விஷம் கொண்ட கருநாகப் பாம்பை டப்பாவில் அடைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த முறை மனைவிக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு, நள்ளிரவில் பாம்பைத் திறந்துவிட்டு கடிக்கவைத்ததில், உத்ரா மரணமடைந்தார். போலீஸ் விசாரணையில் 10,000 ரூபாய்க்குப் பாம்பை விலைக்கு வாங்கியதாகவும், மனைவியைக் கடிக்கவைப்பதற்கு முன்பு, எலியைக் கடிக்கவைத்து விஷத்தின் வீரியத்தைச் சோதித்ததாகவும் சூரஜ் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். இப்போது சூரஜ் சிறையில் இருக்கிறார்.
மேற்கண்ட சம்பவங்கள் மட்டுமல்ல, மலையாள நடிகர் ராஜன் பி.தேவின் மகனும், நடிகருமான உண்ணி தேவ், தன் மனைவி பிரியங்காவை வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். இதையடுத்து, கடந்த மே 12-ம் தேதி கணவன் வீட்டு பெட்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் பிரியங்கா. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நடிகர் உண்ணி தேவ், இப்போது சிறையில் இருக்கிறார்.
கடவுளின் தேசம் சாத்தான்களின் தேசமாகலாமா?