முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் தொழில்முறை... பெண் கல்வெட்டு ஆய்வாளர்... முனைவர் மார்க்சிய காந்தி

படம்: லெய்னா
நாம் அமர்ந்திருக்கும் வரவேற்பறை முழுக்க அங்கிங்கெனாதபடி நிறைந்திருக் கின்றன நூல்கள். சிறு மேஜை ஒன்றில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் நூல் சிரிக்கிறது. “வீடு இப்படித்தான் இருக்கிறது. புத்தகங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. சிறு இடைவெளி கிடைத்தாலும் புத்தகத்தைக் கையில் எடுத்துவிடுவேன்” என்று சிரித்தபடி எதிரில் அமர்கிறார் மார்க்சிய காந்தி. `இதுவரை முதல் பெண்கள் கட்டுரைகள் வரலாறாகிவிட்ட பெண்களைப் பற்றியே பேசின' என்றும் `முதன்முதலில் பேட்டி கண்டு எழுதப்போகும் முதல் பெண் நீங்கள்தான்' என்று நாம் சொன்னதும், “ஐயையோ… அப்படியென்றால்…” என்று சொற்றொடரை முடிக்காமலேயே மீண்டும் சிரிக்கிறார்.
1949 டிசம்பர் 8 அன்று, பாரதி பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் ல.நாராயணன் - ஆழ்வாரம்மாள் தம்பதியின் கடைசி மகளாகப் பிறந்தார் மார்க்சிய காந்தி. நாராயணன் விடுதலைப் போராட்ட வீரர். தூத்துக்குடி நகரில் வசித்தவர்; திரு.வி.க-வின் உற்ற நண்பர். 14 வயது முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நாராயணன் அந்நியத்துணி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால் இரண்டு ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு முறை சிறை சென்ற நாராயணனைப் பற்றி திரு.வி.க தன் சுயசரிதையில் `முற்போக்குச் சிந்தனையாளர், செயல் வீரர்' என்று பாராட்டி எழுதியுள்ளார். தொழிற்சங்கவாதியான திரு.வி.க பரிந்துரைத்த மார்க்ஸ் மற்றும் காந்தி யின் பெயர்களையே தன் மகளுக்கு `மார்க்சிய காந்தி' எனச் சூட்டி மகிழ்ந்தார் நாராயணன்.
செவிலியர் படிப்பு மற்றும் பயிற்சிக்காக மனைவி ஆழ்வாரம்மாளை சென்னைக்கு அனுப் பினார் நாராயணன். கணவரின் ஆசைப்படி படித்த ஆழ்வாரம்மாள் வெவ்வேறு இடங்களில் அரசு மாவட்ட வாரிய மருத்துவமனைகளில் பணியாற்றியதால் குடும்பம் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருந்தது. முதல் ஃபார்ம் வரை கயத்தாறு பாத்திமா கான்வென்ட் பள்ளியில் படித்த மார்க்சிய காந்தி, சிவகிரியில் கல்வியைத் தொடர்ந்தார். பியுசி மற்றும் இளங்கலை தமிழ்ப் படிப்பை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் படித்தவர், முதுகலை தமிழ்ப் படிப்பை மதுரை பாத்திமா கல்லூரியில் முடித்தார்.

“பள்ளி இறுதியாண்டு முதலே நான் பள்ளி, கல்லூரி விடுதிகளில்தான் தங்கிப்படித்தேன். சுதந்திரமாக, யாரையும் எதிர்பாராமல் இருக்கும் தன்னம்பிக்கையை என்னுள் விதைத்தது இந்த விடுதி வாழ்க்கைதான்” என்று சொல்கிறார்.
கல்லூரிப்படிப்பை முடித்த சில மாதங் களில் தினமணி நாளிதழில் ‘கல்வெட்டியல் தொல்லியல் முதுகலைப் பட்டயப் படிப்பு’க்கான விளம்பரத்தைக் கண்டார். தமிழகத் தொல்லியல் துறை நடத்தும் அந்தப் படிப்புக்கு, தமிழ், பண்டைய வரலாறு, இந்திய பண்பாடு, சம்ஸ்கிருதம், தொல்லியல் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற தான் ஏன் விண்ணப்பிக்கக் கூடாது என்று தோன்ற, ஓர் அஞ்சல் அட்டையிலேயே விண்ணப்பத்தை எழுதி அனுப்பினார் மார்க்சிய காந்தி.
அப்போதுதான் தமிழகத் தொல்லியல் துறை தோற்றுவிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியிருந்தது. 1972-ம் ஆண்டு பழம்பொருள்கள் பதியும் திட்டம் அமலுக்கு வர, தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி வந்த ஐந்து ஊழியர்களும் பதிவு அதிகாரிகளாகப் பணி உயர்வு பெற்றனர். அதன் அப்போதைய இயக்குநரான ஆர்.நாகசாமி மட்டுமே ஒட்டுமொத்த துறைப் பணியைச் சுமக்க நேரிட்டது. பட்டயப் படிப்புக்கு எட்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த ஒரே பெண்மணி மார்க்சிய காந்தி மட்டுமே.
என்ன படிக்கப்போகிறோம், நம்மால் முடியுமா என்று ஐயத்தில் இருந்தவருக்கு வகுப்பெடுக்க வந்தவர் தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமியேதான். முதல் நாள் வகுப்பு மூன்று மணி நேரம் நடந்தது. அந்த மூன்று மணி நேரம்தான் மார்க்சிய காந்தியின் வாழ்க்கையின் போக்கைத் தீர்மானித்தது; தொல்லியலின் மேல் தீராக் காதலை விதைத்தது. “நாகசாமியும் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் அருங்காட்சியகத்திலிருந்து தொல்லியல் துறைக்கு வந்திருந்தார். தமிழகத்தில் அந்தத் துறை புதிது என்பதால் அவரே சிறுகச் சிறுகதான் கற்றுக்கொண்டார். அவரது சிறப்பே பேரார்வமும் தொடர் தேடலும்தான். சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியைக் கொண்டிருந்தார். அந்த மன உறுதியை எங்களிடம் ஒரே வகுப்பில் கடத்திவிட்டார், மிகச்சிறந்த ஆசிரியரான நாகசாமி” என்று சொல்கிறார் மார்க்சிய காந்தி.
தங்குவதற்கு விடுதி வசதி வேண்டும் என்று காந்தி கேட்க, `இப்போதைக்கு தற்காலிகமாக எங்காவது தங்கிக்கொள், இரண்டே மாதத்தில் தங்க ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று அவரிடம் வாக்கு தந்தார் இயக்குநர்.
25 நாள்களில் அரசாணை பெற்று பிரெசிடென்சி விடுதியில் மார்க்சிய காந்திக்கு இடமும் வாங்கிக் கொடுத்தார்.
தொல்லியல் பயிற்சியில் தமிழின் ஐந்து எழுத்து வடிவங்களை வாசித்துப் பொருள்கொள்வது, கோயில் கட்டடக்கலை, அகழ்வாய்வுகள், படிமவியல் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. இறுதித் தேர்வெழுதிய அன்றே விடைத்தாள்கள் திருத்தி, முடிவுகளை அறிவித்து, சான்றிதழும் வழங்கப்பட்டது. அடுத்த நாளே சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். சில நாள்களிலேயே தொல்லியல் துறை, வேலை வாய்ப்பு அலுவலகத்திடம் தொல்லியல் பட்டம் பெற்றவர்கள், பட்டயப் படிப்பு முடித்தவர் களின் பட்டியலைக் கேட்டுப்பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்தது. நேர்முகத் தேர்வு முடிந்து ஒரு வாரத்துக்குள் பணி நியமன ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1973 ஆகஸ்ட் 7 அன்று, `நாட்டின் முதல் பெண் தொழில்துறை கல்வெட்டு ஆய்வாள'ராகப் பணியில் சேர்ந்தார் மார்க்சிய காந்தி.
“ `மேற்கண்ட தகுதியுள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்’ என்ற சொற்றொடர் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தமிழகத் தொல்லியல் துறைகள் தொல்லியல் பணிகளுக்கு வெளியிடும் விளம்பரங்களில் கட்டாயம் இடம்பெறும். இதன் காரணமாகவே ஏ.எஸ்.ஐ மற்றும் தமிழக தொல்லியல் துறையில் எந்தப் பெண்மணியும் பணிக்குச் சேரவில்லை. எனக்குப் பணி நியமனம் முதன்முதலில் கிடைத்ததால், நாட்டின் முதல் தொழில்முறை கல்வெட்டு ஆய்வாளரானேன்” என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் மார்க்சிய காந்தி.
10ஏ நியமனம் என்கிற தற்காலிக நியமனம்தான் அது. அதன்பின் சர்வீஸ் கமிஷன் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டு அதிலும் தேர்வாகி, பணி நிரந்தரமானது. ஏற்கெனவே பயிற்சிபெற்ற காரணத்தால் தனியே படி எடுத்த கல்வெட்டுகளை இரண்டாவது வாசிப்பு செய்யும் வேலை பணிக்கப்பட்டது. அப்போதைய தர்மபுரி, கிருஷ்ணகிரி, வடஆற்காடு மாவட்டங்களிலுள்ள 400 முதல் 500 கல்வெட்டுகளைச் சரிபார்த்து ‘செகண்டு ரீடிங்’ என்ற இரண்டாம் வாசிப்பு செய்யும் பணியைச் செய்தார் காந்தி.
1975-ம் ஆண்டு பத்மாவதி, வசந்தகல்யாணி என இன்னும் இரு பெண்கள் பணிக்கு வந்துசேர, மாதம் ஒருமுறை செல்லும் முகாம்கள் சற்றே எளிதாயின.
திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், தஞ்சைப் பகுதிகளில் இந்தப் பெண்களை இப்போது காணும் பெரியவர்கள்கூட ‘முப்பெரும் தேவியர்’ என்று நினைவு வைத்துச் சொல்கிறார்கள். மிதிவண்டியில் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் கள ஆய்வு செய்து வந்தனர் இந்தப் பெண்கள். அதுமட்டுமல்ல... கள ஆய்வு செய்வதிலும் புதுமையைப் புகுத்தினார்கள். யாரோ சொல்வதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல், கிராமம் கிராமமாக ஒவ்வொரு கோயிலையும் அடையாளம் கண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து பதிப்பித்தார்கள். ஆண்டு அறிக்கையில் இடம்பெற்ற / இடம்பெறாத கோயில்கள் என்று பிரித்து, தாலுகாவில் எத்தனை பஞ்சாயத்துகள் என்று முதலிலேயே அடையாளம் கண்டுகொண்டு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்துக்கு இவர்கள் வரும் நாளை முன்கூட்டியே கடிதம் மூலம் தெரியப்படுத்தி விடுவார்களாம்.
“பேருந்தில் சென்று இறங்கி அந்தச் சந்திப்பிலுள்ள சைக்கிள் கடையில் ஆளுக்கொரு சைக்கிள் வாடகைக்கு எடுத்துக் கொள்வோம். மண் சாலை, சில இடங்களில் அதுவும் இருக்காது. ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய மண் பாதைகளில் ஓட்டிச்செல்வோம். எங்களில் யாருக்கும் அதற்கு முன் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதுதான் வேடிக்கை. விழுந்து எழுந்துதான் கற்றுக்கொண்டோம். திருத்துறைப்பூண்டி பகுதியை நாங்கள் முதன்முதலாக இப்படி ஆய்வு செய்தோம். திருக்கொள்ளிக்காடு என்ற ஊரில் யாருமே அதுவரை கவனித்திராத சோழர் காலத்து கல்வெட்டுகள் நிரம்பிய கோயிலை நாங்கள் கண்டு படியெடுத்தோம். வெறும் 12 நாள்களில் அந்தத் தாலுகாவின் கோயில்கள் அத்தனையையும் ஆய்வு செய்து கல்வெட்டுகளைப் படியெடுத்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார் மார்க்சிய காந்தி.
பெரும்பாலும் இதுபோல கள ஆய்வு செய்து, படியெடுத்து, வாசித்துப் பொருள் கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் நூல்களாக வெளியிடப்படுகின்றன. ஆனால், அதில் இந்த ஆய்வுகள் செய்யும் கல்வெட்டு ஆய்வாளர்களின் பெயர்கள்கூட இடம்பெறுவதில்லை. இயக்குநரின் பெயர் மட்டுமே இருக்கும், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
“ `தொகுப்பாசிரியர்’ என்ற பெயரில் ஒருவழியாக ஆய்வாளர் பெயர் சேர்க்கப்பட்டு விடுகிறது. அதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்” என்கிறார் காந்தி. திருத்துறைப்பூண்டி தாலுகா கல்வெட்டுகள், கும்பகோணம் தாலுகா கல்வெட்டுகள், பாபநாசம் தாலுகா கல்வெட்டுகள் போன்ற நூல்கள் இவர்களின் முயற்சியால் வெளிவந்தவை. 1976-ம் ஆண்டு, முனைவர் சி.சிவராமமூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய ‘இந்தியன் எபிகிராஃபி அண்டு சவுத் இந்தியன் ஸ்கிரிப்ட்ஸ்’ என்ற நூலை தமிழில் மார்க்சிய காந்தி மொழியாக்கம் செய்ய, ‘இந்தியக் கல்வெட்டுகளும் தென்னிந்திய எழுத்துகளும்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு தொல்லியல் துறை.
பத்து ஆண்டுகளுக்குப்பின் 1986-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துறை சார்ந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் வடஇந்திய அதிகாரி ஒருவர் இம்மொழியாக்க நூலை இவர் எழுதியுள்ளார் என்று அடையாளம் கண்டு பாராட்டியதை மெய்சிலிர்க்கச் சொல்கிறார் மார்க்சிய காந்தி.
1978 ஏப்ரல் 12 அன்று கல்யாணசுந்தரத்துடன் மார்க்சிய காந்தியின் திருமணம் நடந்தது. செவ்வேள், அமுதன் என்ற இரண்டு மகன்கள் தம்பதிக்குப் பிறந்தனர். ஆறு மாதங்களில் இருவரையுமே குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது அம்மாவுக்கு வழக்கமாகிவிட்டது.
“உறவினர், நண்பர்கள், கணவர் என்று யாரோ ஒருவர் என் குழந்தைகளை கவனித்துக் கொண்டார்கள். பெண்ணுக்கு இங்கு எதுவுமே எளிதல்ல. அலுவலகத்தில் பெண் என்ற ஒரே காரணத்தால் தேவையற்ற பிணக்குகள் நிறைய வந்ததுண்டு. ஆனால், நான் எதையுமே சட்டை செய்வதில்லை. கொஞ்சம் கெடுபிடியாக நடந்து கொள்வேன். பெரும்பாலும் சரியான இடைவெளியை அமைத்துக்கொள்வேன்” என்கிறார்.
தேரிருவேலி, மாளிகைமேடு, கொடுமணல் அகழாய்வுகளில் களப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார் மார்க்சிய காந்தி. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். பல சர்வதேச தொல்லியல் கருத்தரங்கங்களைத் துறை சார்ந்து நடத்தியுள்ளார். திருஇந்தளூர், வேலஞ்சேரி, எசாலம் செப்புப் பட்டயங்களைப் படித்துப் பொருள் விளக்கி எழுதியிருக்கிறார்.
1989-ம் ஆண்டு முனைவர் ஆய்வுக்கு `தமிழக வரலாற்றில் அதியர் மரபு' என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து பட்டம் பெற்றார். இந்த ஆய்வுத் தொகுப்பு இப்போது நூல் வடிவில் கிடைக்கிறது.
1993-ம் ஆண்டு பதிவு அதிகாரியாகவும் ஆண்டு இறுதியில் துணைக் கண்காணிப்பாளராகவும் கல்வெட்டு ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற் றார். ‘செய்தித்தாள் படிப்பவர்போல கல்வெட்டு படிப்பவர்’ என்றே இவரை அறிந்த துறை சார்ந்தவர்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்.
உங்களுக்குப் பிடித்த கல்வெட்டுகள் பற்றி சொல்லுங்கள் என்றதும், படிக்கும் போதே மனதுக்குள் மகிழ்ச்சியை விதைக்கும் கல்வெட்டுகள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு ஏரிகாத்த ராமர் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் சீதையை தன் மகளாக பாவித்து அவளுக்குச் சீர் கொடுப்பது போல கோயிலுக்கு தானம் கொடுக்கும் வாசகங்கள் அடங்கியுள்ளதைப் பற்றி குறிப்பிடுகிறார்.
விழாக்களுக்கு தமிழர் தந்த முக்கியத்துவம் தன்னை ஆச்சர்யப்படுத்துவதாகச் சொல்கிறார். ஆணைப் பெண்ணாக உருவகித்துச் செய்யப்படும் கன்னி பூஜை பற்றிய குறிப்புகள், நூற்றுக்கும் மேலான பெயர்கள் கையொப்பமிடப்பட்ட கல்வெட்டு, கிருஷ்ணன் விளையாட, அன்ன தானம் கொடுப்பது போன்ற கல்வெட்டு, கொற்றவை வழிபாடு குறிக்கும் கல்வெட்டு என அடுக்கிச் செல்கிறார். இலக்கியத்துக்கும் கல்வெட்டுகளுக்குமான தொடர்பை உறுதி செய்வது அவசியம் என்றும் குறிப்பிடுகிறார். துணை மேற்பார்வை தொல்லியல் ஆய்வாளர் பதவி வகித்தவர், 2007-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும் கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கங்களில் உரைகள் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
“புத்தகங்கள் வாசிப்பது எனக்குப் பிடித்தமானது. குறிப்பாக சமூக வரலாறு என்றால் என்னையே மறந்துவிடுவேன்” என்று சொல்கிறார். “குடும்பத்தில் என்ன பிரச்னை வந்தாலும் திருமணம் என்ற கட்டமைப்பை தீர்க்கமாக நான் நம்புவதால் என்னால் எதையும் சமாளிக்க முடிகிறது. தொல்லியல் மீதுள்ள பற்றுதலே இன்று நான் தலைநிமிர்ந்து நிற்கக் காரணமாக இருக்கிறது” என்று சொல்லி முடிக்கிறார்.
நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷ மான மார்க்சிய காந்தியின் வீட்டிலிருந்து கையசைத்து வெளியேறுகிறோம். பன்னீர்ப் பூக்கள் அவர் வீட்டு வாசலெங்கும் சிதறி, வாசனை வீசி வரலாற்றின் இருப்பைச் சொல்கின்றன.