
காயம்பட்ட என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ‘எஸ்.பி-க்கு என்ன ஆச்சு’ என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன். அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்... 1991 மே 21 இரவு. உலகைக் குலுக்கிய ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் நடந்தேறியது. அதே இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினர் என்று 18 பேர் இறந்தனர். 40-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்தச் சம்பவத்தின்போது, ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், டாக்டர் பிரதீப் வி.பிலிப். அப்போது அவர் காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி. படுகாயப்பட்ட பிரதீப், மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு உயிர் பிழைத்தார். தற்கொலைப் படைத் தாக்குதலில் சிதறிய வெடிகுண்டுத் துகள்கள் நூற்றுக்கணக்கில் உடல் முழுக்கத் துளைக்க, கடந்த 30 வருடங்களாக அவற்றை உடலில் சுமந்தபடி வாழ்ந்துவருகிறார் பிரதீப்.
செப்டம்பர் 30-ம் தேதி அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ராஜீவ் படுகொலைச் சம்பவத்தின்போது பிரதீப் அணிந்திருந்த தொப்பி, சட்டையிலிருந்த அவரின் பெயர் பொறித்த பேட்ஜ் ஆகியவை ரத்தம்தோய்ந்த வழக்கு ஆவணங்களாக நீதிமன்றப் பொறுப்பில் இருந்தன. ஓய்வுபெறும் நாளில் அவற்றைத் தனக்கு வழங்கும்படி நீதிமன்றத்தில் கேட்டிருந்தார் பிரதீப். அவரின் சென்டிமென்ட் கோரிக்கையை ஏற்று, ‘ஒரு மாதம் வைத்திருக்கலாம்’ என்ற நிபந்தனையுடன் தொப்பி மற்றும் பேட்ஜை பிரதீப்பிடம் கொடுத்திருக்கிறார்கள். அவை வந்திருந்த தருணத்தில் பிரதீப் வி.பிலிப்பைச் சந்தித்தேன். கண்களை மூடியபடி சில நிமிடங்கள் யோசித்த பிரதீப், நம்மிடம் மனம் திறந்து பேசினார்...

‘`நான் தூத்துக்குடியில் பயிற்சியில் இருந்தபோது, கடலில் குளிக்கச் சென்றபோது மூழ்கிவிட்டேன். அப்போது மாவட்ட எஸ்.பி-யாக இருந்த அனூப் ஜெய்ஸ்வால் என்னைக் கரைக்குக் கொண்டுவந்து காப்பாற்றினார். அப்போது தண்ணீர். அடுத்து, நெருப்பு...
மே 21-ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் கிளம்பினேன். பத்து நாள் முன்புதான் என் மகள் நிமிஷா பிறந்திருந்தாள். எங்கள் மாவட்ட எஸ்.பி-யான முகமது இக்பாலுக்கு அன்று பிறந்த நாள். ‘அன்றைய தினத்தைத் தாண்டினால்தான் வாழ்க்கை’ என்று என்னிடம் சொன்னார். பிறகு, அனைவரும் ராஜீவ் காந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றோம். உயர் அதிகாரிகள் பலரும் ஸ்பாட்டில் இருந்தனர்.
இரவு ராஜீவ் காந்தி வந்தார். சிவப்புக் கம்பளத்தில் அவர் நடந்து வந்தபோது மிக அருகே எஸ்.பி இருந்தார். நானும் ராஜீவ் அருகில்தான் இருந்தேன். அப்போது எஸ்.பி என்னிடம், முன்னே சென்று கூட்டத்தை விலக்கச் சொன்னார். மூன்று அடி தூரம் போயிருப்பேன். சில நொடிகளில் பயங்கர வெடிச்சத்தம். திரும்பிப் பார்த்தபோது, நெருப்புப் பிழம்பை நெருக்கத்தில் கண்டு அதிர்ந்தேன். என் உடலில் பல இடங்களில் குண்டுக் காயங்கள்.

உடனே நினைவிழந்தேன். சில நிமிடங்களில் நினைவு வந்தது. யாரோ கையெறி குண்டை எறிந்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்தபடி போலீஸ் பயிற்சியில் கொடுத்த சில டெக்னிக்குகளைப் பயன்படுத்தி மெதுவாகத் தவழ்ந்து தவழ்ந்து ராஜீவ் காந்தி இருந்த இடம் நோக்கிச் சென்றேன். பதற்றத்துடன், ‘ராஜீவ் எங்கே? அவர் எப்படி இருக்கிறார்?’ என்று குரல் கொடுத்தபடி தேடினேன். ஒரே மரண ஓலங்கள்.
என்னை இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கினார். அவரிடம், ‘நான் நடந்து வரட்டுமா?’ என்றேன். ‘முடியாது சார்... உங்கள் உடம்பில் நிறைய காயங்கள். ரத்தம் கொட்டுகிறது’ என்றபடி என்னைத் தூக்கிச் சென்று போலீஸ் வாகனம் ஒன்றில் படுக்க வைத்தார். அந்த இன்ஸ்பெக்டரிடம் ராஜீவ் பற்றிக் கேட்டேன். ‘ராஜீவ் உயிருடன் இல்லை’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இன்ஸ்பெக்டர் அடுத்தவரைத் தூக்கிவரப் போய் விட்டார்.

இடையில் எனக்கு தாகம் எடுத்தது. ‘தண்ணீர்... தண்ணீர்...’ என்று குரல் கொடுத்தேன். அங்கிருந்த சிறுவன் ஒருவன் ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வந்து, அவர் மடியில் என் தலையைத் தூக்கி வைத்து சிறுசிறு துளியாகக் கொடுத்தான். கொஞ்சம் நினைவு வந்தது. ‘உன் பெயர் என்னப்பா?’ என்றேன். ‘புருஷோத்தமன்’ என்றான். அவன் செய்த அந்த உதவியில் இருந்து எனக்கு உதித்ததுதான் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ திட்டம். பிற்காலத்தில் அது இந்தியா முழுக்க நடைமுறைக்கு வந்தது.
காயம்பட்ட என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ‘எஸ்.பி-க்கு என்ன ஆச்சு’ என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன். அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயக்கமாகிவிட்டேன். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் ஐ.சி.யு-வில் 28 நாள்கள் இருந்தேன். என் சகோதரர் ஒரு மருத்துவர். அவர் பெங்களூரில் இருந்ததால், என்னை அங்கு கூட்டிச் சென்று சிகிச்சை அளித்தார். படிப்படியாக குணமடைந்தேன்’’ என்று அந்தத் திகில் நிமிடங்களை விவரிக்கிறார் பிரதீப்.
‘`அந்தச் சம்பவத்தின்போது நான் அணிந்திருந்த தொப்பி, என் பெயர் பொறித்த பேட்ஜ் ஆகியவை வழக்கின் சாட்சியங்களாக ஆகிவிட்டன. அதனால் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்தன. இப்போது முறைப்படி கேட்டதும், ஒரு பையில் போட்டு என்னிடம் கொடுத்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றைத் தொட்டபோது, ரொம்பவும் எமோஷனலாகிவிட்டேன். என் மனைவி, பிள்ளைகள் அவற்றைப் பார்த்துக் கண்கலங்கினார்கள். இந்த வழக்கில் நானும் அரசுத் தரப்பில் ஒரு சாட்சி. உணர்ச்சியின் வெளிப்பாடாக, இப்போது நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் படுகொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது நான் பணியில் இருந்தவரை கோபமாக இருந்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். ஆயுசு முழுவதும் அந்தக் கோபத்தை மனத்தில் வைத்திருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் என் மனசாட்சிப்படி நான் அவர்களை மன்னிக்கிறேன். உணர்வுபூர்வமாக மனத்தின் பாரம் நீங்குவதாக நினைக்கிறேன்’’ என்கிறார் பிரதீப்.

பிரதீப் போலீஸ் பணியில் இருந்தபோது, நிறைய சாதனைகளைச் செய்திருக்கிறார். தமிழக போலீஸில் தற்போது பிரபலமாகப் பேசப்படும் ‘நோ யுவர் கிரிமினல்’ என்கிற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர் பிரதீப். ஆசியாவில் முதல்முறையாக அதற்கான செயலியை உருவாக்கியவர். சி.பி.சி.ஐ.டி பிரிவின் தலைமைப் பதவியில் இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்தவர். பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவில் அதிக வருடங்கள் பணியில் இருந்தவர். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்தபோது, வெளிநாடுகளிலிருந்து முக்கியமான சிலைகளைத் தமிழகத்துக்கு மீட்டு வந்தவர்.
‘`என்னை ஸ்டீல் ரீ இன்ஃபோர்ஸ்டு மேன் என்று கிண்டலாக அழைப்பார்கள். கான்க்ரீட்டில் ஸ்டீல் சேர்ந்தால் எப்படிக் கட்டடம் வலிமையாக மாறுமோ, அப்படி இந்த வெடிகுண்டுத் துகள்கள் மூலம் என் உடல் மாறிவிட்டது. இவற்றுடன் என் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, நான் இளைஞனாக இருந்தபோது உணர்ந்ததைவிட தற்போது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக உணர்கிறேன். இறை நம்பிக்கை, எதையும் சந்திக்கும் தைரியம் கொடுத்துள்ளது’’ என்கிறார் பிரதீப்.