
எதிர்நீச்சலில் பிறந்த பத்திரிகை இது. மிசா காலகட்டத்தில் தணிக்கை அலுவலர் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துக் கையெழுத்திட்ட பிறகுதான் அச்சுக்கே செல்லும்.
`பகுத்தறிவு நாளேடு’ என்ற அடையாளமும் பெருமையும் ’விடுதலை’ பத்திரிகைக்கு உண்டு. பெரியார் மறைந்தாலும் சமூகநீதி, முற்போக்குக் கருத்துகளால் தினந்தோறும் ‘விடுதலை’ மூலம் மக்களிடம் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார். ‘விடுதலை'க்குத் தற்போது வயது 88. பெரியார் கொள்கைகளின் ஆவண சாட்சியாய் விளங்கும் `விடுதலை’யின் ஆசிரியராக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. வாழ்த்துகளுடன் பெரியார் திடலில் அவரைச் சந்தித்தோம்.
``தொலைத்தொடர்பு வசதியால், இப்போது பத்திரிகையை எங்கிருந்தாலும் நடத்தலாம். நான் அடையாறிலிருந்து, திடல் வரும் பயணத்திலேயே கட்டுரைகளை அனுப்பிவிடுவேன். கொரோனாச் சூழலிலும்கூட, `விடுதலை’ பத்திரிகையின் 8 பக்கங்களை 4 பக்கங்களாகக் குறைத்தோமே தவிர, நிறுத்தவில்லை. அப்போதும், மக்கள் பங்களிப்புடனும் அறிவியல் உதவியாலும் இந்தப் பத்திரிகை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது; இதேபோல் எப்போதும் வரும்” என்று உறுதியுடன் பேச ஆரம்பிக்கிறார் கி.வீரமணி.
“ ‘விடுதலை' உங்களுக்குத் தந்த பொறுப்பைச் சொல்லுங்கள்?”
“இந்தப் பொறுப்பை அய்யா (பெரியார்) என்னை வற்புறுத்திதான் ஏற்கவைத்தார். ‘வழக்கறிஞர் பயிற்சி செய்துகொண்டே அலுவலகத்தையும் பார்த்துக் கொள்கிறேன்’ என்றேன். ‘ரெண்டையும் பார்த்தா சரியா வராது. ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கணும்’னு அய்யா சொல்லிட்டார். அப்போது, தொடங்கியது என் ஆசிரியர் பணி. என்னை அழைத்துவந்து, ஆசிரியர் நாற்காலியில் அவர் அமரவைத்த அந்தத் தருணம் பெரும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே என்ற பதற்றமும் இருந்தது.
அய்யா தானாக எனக்கு எந்த ஆலோசனையும் சொன்னதில்லை. நானேதான் அய்யாவிடம் சென்று, ‘நான் எழுத்துத் துறையில் பழகினவன் இல்ல. சில கட்டுரைகள் மட்டும்தான் எழுதியிருக்கேன். எப்படி எழுதுறது? என்ன முறைகளைக் கையாள்வது?’ என்றெல்லாம் கேட்டேன். ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியும். எம்.ஏ படிச்சிருக்கீங்க. ஆங்கிலத்தில் ‘தி இந்து’ மாதிரியான பத்திரிகைகளைப் படியுங்கள். நம் இயக்கக் கொள்கைகள் பற்றி அவர்கள் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள். அதற்கு நேரெதிராக எழுதுங்கள். எல்லாம் சரியா இருக்கும். யோசிக்காதீங்க’ என்றார்.
இந்த 60 ஆண்டுகள், தோழர்களின் ஒத்துழைப்பு, வரவேற்பு எல்லாவற்றையும்விட எனக்குக் காட்டப்படும் எதிர்ப்புதான் என்னை இப்போதும் உற்சாகமாக ‘விடுதலை’ ஆசிரியராக இயங்க வைக்கிறது.''

“பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்று எதைச் சொல்வீர்கள்?”
“விடுதலையின் பழைய ஆசிரியர் குத்தூசி அருமையாக கனல் தெறிக்க எழுதுவார். திறமைசாலி. நானே அவருக்குப் பெரிய ரசிகன். சில நேரங்களில் அவர் தலையங்கம் எழுதின பிறகு அய்யாவிடமிருந்து ‘தலையங்கத்தில் வந்தது எனது கருத்து அல்ல’ என்று குறிப்புகள் வரும். நம் ஆசிரியர் வாழ்க்கையில் அய்யாவிடமிருந்து இதுமாதிரி குறிப்புகள் வரவே கூடாது. என்னுடைய கருத்து இல்லை என்று அவர் சொல்லிவிட்டால் ஆசிரியர் பணிக்கு நாம் முழுமையாகத் தகுதி ஆகவில்லை என்று அர்த்தம். அதனால், குறிப்புகள் வருகிற மாதிரி நாம் எழுதக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதிவரையில், மாறுபட்ட கருத்துகளோ, குறிப்புகளோ எதுவுமே வரவில்லை. இதுதான், விடுதலை ஆசிரியராக அய்யாவிடம் இருந்து எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.”
“எமர்ஜென்சி காலத்தில் ‘விடுதலை’ பத்திரிகை கடும் தணிக்கையைச் சந்தித்தது. அந்த நேரத்தில் நீங்களும் கைது செய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தீர்கள். அப்போது வந்த செய்திகளை எல்லாம் நீங்கள் கவனிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததா?”
“எதிர்நீச்சலில் பிறந்த பத்திரிகை இது. மிசா காலகட்டத்தில் தணிக்கை அலுவலர் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்துக் கையெழுத்திட்ட பிறகுதான் அச்சுக்கே செல்லும். நான், சிறையில் ஒரு வருடம் இருந்தேன். நான்கு மாதம் கழித்துதான் சென்னைச் சிறைச்சாலைக்குப் பத்திரிகை வந்தது. எந்தப் பத்திரிகை வந்தாலும் முக்கியமான செய்திகள் தெரியக்கூடாது என்பதற்காக நிறைய கறுப்பு மை அடித்து வைத்திருப்பார்கள். தந்தை பெரியார் என்று எழுதக்கூடாதென ‘தந்தை’யை அழித்தார்கள். அதை மணியம்மையார் கடுமையாக எதிர்த்தார். நிறைய எதிர்நீச்சல் போட்டுதான் ‘விடுதலை’ வந்தது. ‘விடுதலை’யால் ஏற்பட்ட விளைவுகள் ஏராளம்.”
“தற்போது தமிழகத்தில் பா.ஜ.க நிறைய கூட்டங்களை நடத்தி கட்சியை வளர்த்து வருகிறது. பெரியாரியத்தின் தேவை அதிகமாக உள்ளபோது, திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் தீவிரமாக இல்லையே?”
“இப்படி விமர்சிப்பது தவறானது. பா.ஜ.க ஓர் அரசியல் கட்சி. அவர்களிடம் அம்பானிகளும் அதானிகளும் இருக்கிறார்கள். எங்களுக்கு குருதட்சணை என்ற பெயரில் பா.ஜ.க போல் பெரிய பணக்காரர்களின் ஆதரவு கிடையாது. தோழர்களின் ஆதரவு மட்டும்தான் உள்ளது. அதனால், இதுபோன்ற விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை. இது ஒரு சமூக இயக்கம். எங்கள் நிலைக்கு இந்த அளவுக்கான செயல்பாடுகளைச் செய்கிறோம். பா.ஜ.க-வுடன் நாங்கள் ஏன் போட்டியிடவேண்டும்? இப்படி இருப்பதுதான் எங்களுக்குத் தனித்தன்மையும் பெருமையும்கூட.”
“பெரும்பாலும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது தி.மு.க ஆதரவு நிலைப்பாடாக உள்ளதே, ஏன்?”
“எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் ஒரே நிலைப்பாடாக இருப்பதால்தான் ஆதரிக்கிறோம். தி.மு.க தேர்தலில் நிற்கும். நாங்கள் நிற்கமாட்டோம். இதுமட்டும்தான் வேறுபாடே தவிர, இருவருக்குமே சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி ஆகியவைதான் முக்கியமான குறிக்கோள்கள். அரசியல் ரீதியாக தி.மு.க செயல்படுவதால் அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால், எங்கள் கொள்கையிலிருந்து தி.மு.க மாறுபட்டுச் செல்லும்போதெல்லாம் கண்டிக்கவும் விலகி நிற்கவும் தயாராக இருந்திருக்கிறோம்.
தி.மு.க-வைக் கண்டிக்க உறவு மட்டுமல்ல, கொள்கை அடிப்படையில் எங்களுக்கு உரிமையும் உள்ளது. எந்த உள்நோக்கத்தோடும் கண்டிப்பதில்லை. உள்நோக்கத்தோடு செய்யும்போதுதான் சங்கடம் வரும். அதனால், தி.மு.க-வினர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு மனிதனைப் பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அண்ணா, கலைஞர் இருவரின் ஆட்சிகளையும் பெரியார் சுட்டிக்காட்டியுள்ளார். நானும் செய்துள்ளேன். ஆனால், எங்கள் உறவு ஒருபோதும் பாதிக்காது. நீர் அடித்து நீர் விலகாது.”

“சமீபத்தில் நீங்கள் கோயில் துலாபாரம் போல, எடைக்கு எடை பணம் என தராசுத் தட்டில் அமர்ந்து சந்தா வாங்கியது சர்ச்சை ஆனதே?”
“அந்த நோட்டுக்கட்டுகள் எல்லாம் சந்தாக்கள். ஒரு பிரசார உத்தியில் தோழர்கள் விருப்பப்பட்டு எடைக்கு எடை பணம் கொடுத்திருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களைவிட நாங்கள் கூடுதலாகக் கொடுக்கிறோம் என்பதை உணர்த்த இப்படிச் செய்தார்கள். விழுப்புரத்தில் திடீரென பறை அடித்துக்கொண்டு வந்து சந்தா கொடுத்தார்கள். இது அவர்களுக்குத் தோன்றிய உத்தி. பிடித்த முறையில் கொடுப்பதைப் பிரசார உத்தியாகத்தான் பார்க்கவேண்டும். தவறாக நினைக்கக்கூடாது. பெரியார் இருக்கும்போது வெங்காயம் கொடுத்தார்கள். இப்போது, எனக்கு பல்வேறு முறைகளில் கொடுக்கிறார்கள்.”
“திராவிடர் கழகத்திலும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு உள்ளதே?”
“யார் என்னென்ன பொறுப்புகளில் இருக்கவேண்டும் என்பது திராவிடர் கழகம் முடிவு செய்கிற விஷயம். நான் தலையிடவில்லை. திராவிடர் கழகமே ஒரு குடும்பம்தான். அதனால், இங்கு அரசியலே கிடையாது. இதுபோன்ற விமர்சனங்கள் குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. இதற்குப் பெரிய விளக்கங்கள் சொல்லி நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை.”
“மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?”
“அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கு கிடைக்கப்போகிறது? அப்படிக் கிடைத்தால் ஒன்றே ஒன்றுதான் கேட்பேன். `ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என எல்லாவற்றையும் ஒன்னா கொண்டுவரப் பாக்குறீங்களே? அதேமாதிரி ஒரே சாதிதான்னு கொண்டுவரலாமே’ என்பதைத்தான் கேட்பேன்.”