Published:Updated:

டிரோன் தாக்குதல்: எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் நவீன முகம்! இதை ஏன் தடுக்க முடிவதில்லை?

டிரோன்
News
டிரோன் ( Pixabay )

நவீன தொழில்நுட்பம் இன்றைய தீவிரவாதிகளின் பெரும் படை. இணையம் அந்தப் படைகளின் கையிலிருக்கும் ஆயுதம்.

Published:Updated:

டிரோன் தாக்குதல்: எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் நவீன முகம்! இதை ஏன் தடுக்க முடிவதில்லை?

நவீன தொழில்நுட்பம் இன்றைய தீவிரவாதிகளின் பெரும் படை. இணையம் அந்தப் படைகளின் கையிலிருக்கும் ஆயுதம்.

டிரோன்
News
டிரோன் ( Pixabay )
கொரோனாவுக்கு முன் கடைசியாக நீங்கள் சென்ற திருமண நிகழ்வு நினைவிருக்கிறதா? உங்கள் தலைக்கு மேல் டிரோன் சுற்றி படம் பிடித்ததா? திருமணங்கள் மட்டுமில்லை, இந்த டிரோன் வந்த பின் தமிழ் சினிமாவும் மாறிவிட்டது. இப்போது வெளியாகும் பல டிரெயிலர்களின் முதல் ஷாட் டிரோன் எடுத்ததுதான்.

கொரோனா வந்த பின்னும்கூட டிரோனைப் பார்த்தோம். ஊரடங்கை மதிக்காமல் கேரம் ஆடியவர்களை, வீதிகளில் கிரிக்கெட் விளையாடியவர்களை டிரோன் கேமரா வைத்து அடையாளம் கண்டது போலீஸ். இஸ்ரேலில் விவசாயிகள் கூட டிரோன் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம்தான் உரம் தூவுகிறார்கள். நீங்கள் அமேசானில் ஆர்டர் செய்யும் ஒரு செல்போன், எதிர்காலத்தில் டிரோன் மூலம் உங்கள் அட்ரஸுக்கு டெலிவரி செய்யப்படலாம். இப்படி தூணிலும் துரும்பிலும், இஸ்ரேலிலும் ஈரோட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் டிரோன் நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தப்படும் போது சரி. தீவிரவாதிகள் கையில் கிடைத்தால்?

தீவிரவாதம்
தீவிரவாதம்

ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப் படைத் தளத்தில் இரண்டு தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இரண்டுமே Unmanned aerial vehicle எனும் மனிதர்கள் இல்லாமல் தானாகவே பறக்கும் கருவிகளால், அதாவது டிரோன் போன்றதொரு கருவியால் நிகழ்த்தப்பட்டன. இரு ராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள், ஒரு கட்டடத்தின் மேற்கூரை சிதலமடைந்திருக்கிறது. இந்தியாவில் இந்த வகையில் நிகழ்த்தப்படும் முதல் தாக்குதல் இது. இந்தியாவின் பாதுகாப்புக்கே சவால்விடும் தாக்குதல்.

எல்லை தாண்டி பாகிஸ்தானிலிருந்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் முகமும் ஏற்கெனவே மாறியிருக்கின்றது. காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் சப்ளை செய்கிறது பாகிஸ்தான். எல்லை தாண்டி பறந்துவந்து குறிப்பிட்ட இடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வீசிச் செல்கின்றன டிரோன்கள்.

நேரில் செல்ல வேண்டாம், ஆயுதங்களைக் கைகளில் ஏந்த வேண்டாம், உயிரை மாய்க்கும் தற்கொலைத் தாக்குதல் தேவையில்லை, பணபலம், படைபலம், அரசியல் ஒற்றர்கள் எதுவும் வேண்டாம். எவற்றையெல்லாம் வைத்து உலகில் தீவிரவாதம் இயங்குகிறது என நம்பியிருந்தோமோ, அவையெல்லாம் வேண்டாம். ஒரு தேசத்துக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்ட ஒரு தனிநபர் கூட தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியும் என்பதே நவீன உலகின் நிலை. நவீன தொழில்நுட்பம் இன்றைய தீவிரவாதிகளுக்கு பெரும் வரம்; தேசம் காக்கும் பணியிலிருக்கும் ராணுவங்களுக்கு அதுவே சாபம்.

டிரோன்கள் வந்தபிறகு உலகில் தீவிரவாதத்தின் முகம் மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபிய எண்ணெய்க் கிடங்கு ஒன்றை டிரோன் மூலம் தாக்கினர் தீவிரவாதிகள். பல மில்லியன்களில் இழப்பும், பொருளாதாரச் சரிவும் ஏற்படுத்திய இந்தத் தாக்குதல்தான் உலக நாடுகளை டிரோன் அச்சுறுத்தல் பற்றி சிந்திக்க வைத்தது.
 சவுதி அரேபியா -  எண்ணெய் கிடங்கு - டிரோன் தாக்குதல்
சவுதி அரேபியா - எண்ணெய் கிடங்கு - டிரோன் தாக்குதல்

எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்புக்காக ரேடார் கருவிகள் வைத்துள்ளன. மிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை மட்டுமே ரேடார்கள் கண்டுபிடிக்கும். ஏவுகணைகளைக் கண்டறிந்து தகர்க்கும் தொழில்நுட்பமும் பல நாடுகளில் உள்ளது. ஆனால், இவையுமே உயரத்தில் பறக்கும் ஏவுகணைகளையே கண்டுபிடித்து அழிக்கும். மிக தாழ்வான உயரத்தில் பறந்துவந்து தாக்கும் டிரோன்களை அழிக்கும் கருவிகள் எங்கும் இல்லை.

சவூதி தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுக்கவே டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்தியாவிலும் இந்த ஆராய்ச்சி நடக்கிறது. அமெரிக்க ராணுவம், டிரோன் தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பத்துக்காக 70 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

"டிரோன்கள் மூலம் தாக்கவும், தாக்குதல்களை முறியடிக்கவும் இந்தியா தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது" என்று ராணுவத் தளபதி நாரவனே அறிவித்துள்ளார். என்றாலும், இப்போதைய அவசர சூழல் கருதி, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் டிரோன் முறியடிப்புக் கருவிகளை வெளிநாடுகளிருந்து வாங்கிப் பயன்படுத்தவும் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.

அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பிடிபடாமல், எங்கோ தொலைவில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி தாக்குதலை நடத்த உதவும் டிரோன் தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ‘டிரோன் தீவிரவாதம்தான் வருங்காலத்தில் உலகம் சந்திக்க இருக்கும் பெரும் ஆபத்து’ என்பதே நிபுணர்களின் கருத்து. 

இப்போது உள்ள டிரோன்கள், கையெறிக் குண்டுகள் போன்ற சில குறைந்த எடையுள்ள பொருள்களை சுமந்து சென்று தாக்குதல் நிகழ்த்த வல்லவை. தொழில்நுட்பம் வளரும்போது, இதே டிரோன்கள் பேரழிவுத் தாக்குதல்களை நிகழ்த்த இயலும். அப்படி நிகழ்ந்தால் மக்கள் கூடும் இடங்கள், ராணுவத் தளங்கள், அணுசக்தி மையங்கள் என எப்படிப்பட்ட இடத்திலும் தாக்குதல் நடக்கலாம். டிரோன் தாக்குதலை வழிமறித்துத் தகர்க்கும் தொழில்நுட்பம் மட்டுமே இதற்குத் தீர்வு.

தற்போது அரபு நாடுகளில் டிரோன் தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாக மாறியிருக்கின்றன. ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க உளவு நிறுவனம் டிரோன் மூலம் தாக்கிக் கொன்றது. சிரியா நாட்டின் கிளர்ச்சிப் படைகள், அங்கே தங்கியிருக்கும் ரஷ்ய ராணுவத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தினர். வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை நோக்கி பறந்துவந்த ஒரு டிரோன் சற்று தொலைவிலேயே வெடித்ததால் நூலிழையில் உயிர்தப்பினார் அவர்.

தீவிரவாதம்
தீவிரவாதம்
Pixabay
இப்படி அரசாங்கங்கள், முதல் தனிநபர்கள் வரை எல்லோரிடமும் இந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது. எல்லோருக்கும் அச்சுறுத்தலும் இருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் மனித வாழ்வை மேம்படுத்தும் என்ற நினைப்பில்தான் புதிய கருவிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை அழிவுக்காகப் பயன்படுத்தும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் துயர வரலாறு டிரோன் வரை தொடர்கிறது.