பாரத் பயோடெக், கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைத் தயாரித்து விநியோகித்து வருகிறது. இந்த மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வலியில்லா முறையில், எளிதில் உபயோகிக்கும் வகையில் நாசி வழியே செலுத்தும் iNCOVACC (BBV154) என்ற தடுப்பு மருந்தை, செயின்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, பாரத் பயோடெக் தயாரித்திருந்தது.

சோதனை கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், மூக்கின் வழியாகச் செலுத்தப்படும் இத்தடுப்பு மருந்தை உபயோகிக்க, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இம்மருந்தை அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான கிருஷ்ணா எல்லா கூறுகையில்,``இந்தத் தடுப்பு மருந்தை, மூன்று கட்டமாக பெரியவர்களுக்குப் பயன்படுத்தியதில், வெற்றிகரமான முடிவுகள் கிடைத்தன.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவும் வகையில், மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த மருந்து உதவியாக இருக்கும். தற்போது கோவிட் தடுப்பூசிகளின் தேவை இல்லை. இருந்தபோதிலும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதோடு கோவிட் வேரியன்ட்களுக்கென தனித்துவமாகத் தடுப்பூசிகள் தயாரிக்கவும் தொடங்கியுள்ளோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.