அலசல்
Published:Updated:

பணவீக்கம், வேலையின்மை, விலைவாசி உயர்வு... திவாலாகும் பாகிஸ்தான்... திண்டாட்டத்தில் மக்கள்!

பாகிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
பாகிஸ்தான்

கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

இலங்கையைப்போலவே பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அசுர வேகத்தில் குறைந்துகொண்டிருக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, வெள்ளப் பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் நாடே திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

எகிறிய பணவீக்கம், சரிந்த அந்நியச் செலாவணி!

பாகிஸ்தானின் கடன் சுமை 12,690 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 580 கோடி டாலராகச் சரிந்துவருகிறது. இந்தத் தொகை இன்னும் ஒரு மாதகால இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்கிறார்கள் பாகிஸ்தான் பொருளாதார நிபுணர்கள். கடந்த 2021-ம் ஆண்டைவிட அந்நிய முதலீடும் 51% சரிந்திருக்கிறது. பாகிஸ்தானின் பணவீக்கம், 1975-க்குப் பிறகு அதாவது, 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 27.3%-ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பும் ரூ.227-ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

ஷெபாஸ்
ஷெபாஸ்

அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள், மின்சாரம், காஸ் சிலிண்டர் வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, எரிவாயு நிறுவனங்கள் காஸ் விநியோகத்தை நிறுத்தியதால், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாண மக்கள், பிளாஸ்டிக் கவர்களிலும், பலூன்களிலும் சமையல் எரிவாயுவை நிரப்பி ஆபத்தான முறையில் வீட்டுக்குக் கொண்டுசெல்லும் வீடியோ உலக அளவில் வைரலாகி அதிரச்செய்தது. தீவிபத்து நேர்ந்து பொதுமக்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அவலமும் நடந்தேறியது.

விலைவாசி உயர்வும்... வேலைவாய்ப்பின்மையும்!

பாகிஸ்தானில் பொருள்களின் விலைவாசி 23% அதிகரித்திருக்கிறது. ரேஷன் கடைகளில் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக்கூட 25% முதல் 62% வரை உயர்த்தியிருக்கிறது அரசு. விநியோகிக்கப்படும் பொருள்களின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் 32% இளைஞர்கள் வேலையில்லாமல் பரிதவிக்கிறார்கள். சமீபத்தில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் காவல்துறை பணிக்கு நடந்த தேர்வுக்கு குவிந்த கூட்டம் அவர்களின் பரிதாபநிலைக்கு ஓர் உதாரணம். பத்தாம் வகுப்பைத் தகுதியாகக்கொண்ட, வெறும் 1,167 காலியிடங்களுக்கு, பட்டம் படித்த சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் படையெடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாகிஸ்தானின் வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை உலகுக்கு அம்பலப்படுத்தின. ஏற்கெனவே, ஒரேயொரு பியூன் வேலைக்காக 15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போட்டி அரசு நடத்தும் தீவிரவாதக் குழுக்கள்!

இன்னொரு பக்கம் இருக்கிற ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசு. அந்நாட்டு ரயில்வேயில் மட்டும், கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குப் பணிக்கொடையாக வழங்கவேண்டிய ரூ. 2,500 கோடியைக் கொடுக்க முடியாமல் திண்டாடிவருகிறது அரசு.

இது போதாது என்று சில தீவிரவாத குழுக்கள் போட்டி அரசாங்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி, அரசின் மீதான மக்களின் அதிருப்தி உள்ளிட்டவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்விதமாக அந்நாட்டின் தீவிரவாதக் குழுக்கள் இணைந்து இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. குறிப்பாக, `தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)’ எனும் தீவிரவாத அமைப்பு, ஆளும் ஷெபாஸ் ஷெரீஃப் அரசுக்குச் சவால்விடும் வகையில், பாதுகாப்புத்துறை, நீதி, பொருளாதாரம், கல்வி, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், அரசியல் விவகாரங்கள் எனப் பல துறை அமைச்சகங்களையும் போட்டியாக உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அரசின் விநோத கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்!

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தானை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு விநோதமான சட்டதிட்டங்களை அறிவித்திருக்கிறது பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு.

பணவீக்கம், வேலையின்மை, விலைவாசி உயர்வு... திவாலாகும் பாகிஸ்தான்... திண்டாட்டத்தில் மக்கள்!

குறிப்பாக, தறிகெட்டுப்போயிருக்கும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த புதிய மின்சார சேமிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதன்படி, `பாகிஸ்தானிலுள்ள அனைத்து வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் கடைகளை இரவு 8:30 மணிக்குள்ளாகவும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளாகவும் மூடிவிட வேண்டும்’ என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, அதிக மின்சாரச் செலவு பிடிக்கும் பல்புகள், ஃபேன்களின் உற்பத்தியையும் நிறுத்த உத்தரவிட்டிருக்கிறது அரசு. அரசுத்துறை நிறுவனங்கள், அலுவலகங்களிலும் உடனடியாக 30% மின்சாரப் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் ஷெபாஸ். இதையடுத்து, பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டம்கூட மின்விளக்குகள் இல்லாமல், ஜன்னல் வெளிச்சத்தில்தான் நடந்துவருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடும் தாண்டவமாடி வருவதால், பயணிகள், சரக்கு ரயில்கள் என அனைத்து ரயில் போக்குவரத்துக்கும் பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் பகுதிகளிலிருந்து இயக்கப்படும் சரக்கு ரயில்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டன.

அரசு அலுவலகங்கள் விற்பனை!

கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. உள்நாட்டில் விற்றது போதாதென்று அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் தூதரகக் கட்டடத்தைப் பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

உலக அளவில் கழுதைகள் அதிகமிருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாமிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் புதிய கழுதைக்குட்டிகள் பிறக்கின்றன. அதேசமயம், மருத்துவம் மற்றும் இறைச்சிக்காக, கழுதைக்கு சீனாவில் பெரும் கிராக்கி நிலவுகிறது. சீனாவிடம் அதிகம் கடன்பட்டிருக்கும் பாகிஸ்தான், அந்த நாட்டுக்குக் கழுதைகளை ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஏதாவது சமாளிக்க முடியுமா என்று முயல்கிறது.

இது போன்ற பல்வேறு முயற்சிகளுக்கிடையே, சர்வதேச நிதியத்திடமும் (IMF) மேம்பாட்டு நிதியாக 650 கோடி டாலரைக் கடனாகக் கேட்டிருக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் முயற்சிகள் பலனளிக்குமா அல்லது அதன் பொருளாதாரச் சூழல் மேலும் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!