அமெரிக்கா டூரிஸ்ட் மற்றும் மாணவர்கள் விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது டூரிஸ்ட் மற்றும் மாணவர்கள் விசா கட்டணம் சுமார் ரூ.13,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருப்பதாவது,
``பிசினஸ் அல்லது டூரிஸ்ட் விசா (B1/B2), மாணவர் மற்றும் எக்சேஞ்ச் விசிட்டர் விசா ஆகிய விசாக்களின் கட்டணம் 160 டாலரில் இருந்து 185 டாலராக உயர்கிறது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.13,105-ல் இருந்து ரூ.15,153 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த வர்த்தகர், ஒப்பந்த முதலீட்டாளர், ஒப்பந்த விண்ணப்பதாரர்கள் போன்ற E வகையினரின் விசா கட்டணம் 205 டாலரில் இருந்து 315 டாலர் ஆக உயர்ந்துள்ளது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.16,790-ல் இருந்து ரூ.17,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வேலை செய்பவர்கள் (H), ஒரு நிறுவனத்திற்குள்ளே இடமாற்றம் செய்யப்படுபவர்கள் (Intra-company transferee-L), அறிவியல், கலை, கல்வி, பிசினஸ், விளையாட்டு போன்ற துறைகளில் அசாத்திய திறமை பெற்ற வெளிநாட்டவர்கள் (O), சர்வதேச கலை பரிமாற்ற பார்வையாளர்கள் (International cultural exchange visitor-Q), மதம் சம்பந்தமாகப் பணிபுரிபவர்கள் (R) போன்றோர்களின் விசா கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலர் ஆக உயர்கிறது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.15,560-ல் இருந்து ரூ.16,790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு வரும் மே 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி அல்லது அதற்கு பின்பும் நீங்கள் விசா நேர்காணலுக்கான கட்டணம் கட்டியிருந்தால், இன்வாய்ஸ் கொடுக்கப்பட்ட அன்றிலிருந்து 365 நாள் வரை அந்தக் கட்டணம் செல்லுபடியாகும். ஒருவேளை கடந்த அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்னர் விசா நேர்காணல் கட்டணம் கட்டியிருந்தால், வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அந்தக் கட்டணம் செல்லும். அதனால் நீங்கள் உங்களது விசா நேர்காணலுக்கான தேதியை குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் மாற்றியமைக்க வேண்டும் அல்லது நேர்காணலை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.