கள்ளநோட்டு, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 -ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக தகவல்கள் பரவின. அத்துடன் 2000 ரூபாய் நோட்டு சார்ந்த பல வதந்திகளும் வந்தன.

அதனால் மக்கள் மத்தியில், 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், "வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது - இந்தியன் வங்கி அறிவிப்பு" - என்ற இந்த தகவல் கடந்த 5 நாட்களாக வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
என்ன இனிமேல் 2000 ரூபாய் நோட்டு செல்லாதா? நம்மிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டை என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை இதனால் தான் 2000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை குறைத்தார்களா? என்று ஏகப்பட்ட கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மேலே குறிப்பிட்டுள்ளப்படி எந்தவொரு தகவலும் இந்தியன் வங்கி அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.

இதுகுறித்து வங்கியாளர் மணியன் கலியமூர்த்தி நம்மிடம் கூறியதாவது, "கடந்த இரண்டு-மூன்று நாட்களாக பல்வேறு வங்கிகள் தங்களது சாப்ட்வேர்களின் சில பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதுபோல இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் நோட்டை ஏடிஎம்மில் வைப்பதில் சிக்கல் எழுந்திருக்கலாம். ஆனால் இந்தியன் வங்கி இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று பேசினார்.