இந்திய ரிசர்வ் வங்கி கார்பன் உமிழ்வைக் குறைக்க ரூ.16,000 கோடி மதிப்புள்ள பசுமை பத்திரங்களை இரண்டு தவணையில் வெளியிட உள்ளதாக கடந்த வெள்ளிகிழமையன்று அறிவித்தது.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பசுமை பத்திரம் என்றால் என்ன? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஒரு வங்கி அல்லது நிறுவனம் சுற்றுச்சுழல் மற்றும் காலநிலைக்கு நன்மை விளைவிக்கும் திட்டங்களுக்காக கடன் பத்திரம் வழங்குவது பசுமைப் பத்திரம் எனப்படும். இந்தப் பத்திரம் குறிப்பிட்ட கால அளவிற்கு வழங்கப்படும்.
இந்தக் கடன் பத்திரங்களை ஏலத்தில் எடுக்கும் முதலீட்டாளர்களிடம் பெறும் தொகையைப் பசுமை திட்டங்களுக்காக முதலீடு அல்லது செலவு செய்வார்கள். அதாவது, இந்தக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களைக் கடன் வழங்குபவர்களாகவும் கருதிக்கொள்ளலாம். பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கட்டதிற்குப்பிறகு, முதலீட்டாளர்களுக்குப் பத்திரத்தின் அன்றைய மதிப்பு தொகை வழங்கப்படும்.

தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 25-ம் தேதி மற்றும் பிப்ரவரி 9-ம் தேதி என இரண்டு தவணையில் பசுமை பத்திரங்களை ஏலம்விட உள்ளது.
ஒவ்வொரு முறையும் ரூ.4000 கோடி மதிப்புள்ள 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு பத்திரம் என இரண்டு வகையான பத்திரம் ஏலம் விடப்படும். இது சீரான விலை ஏலமுறையில் (Uniform Price Auction) ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் விடப்படும் பத்திரங்கள் கார்பன் பயன்பாடு குறைப்பிற்காக செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022-2023 மத்திய பட்ஜெட்டில், பசுமைப் பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பசுமைப் பத்திரங்கள் தற்போது முதல் முறையாக வெளியிடப்படுவதால், இதில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்கிற ஆர்வம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது!