வங்கிகள் மூலம் மக்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ, மக்களை வைத்து வங்கிகள் நன்றாக சம்பாதிக்கின்றன. அதிலும் ரிசர்வ் வங்கியின் வருமானம் சக்கைப்போடு போடுகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?
ரிசர்வ் வங்கியின் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.87,416 கோடியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக அளிக்க ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் தந்ததில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதை தாராளமாகச் சொல்லலாம்!

ரிசர்வ் வங்கியானது ஆண்டுதோறும் தனக்குக் கிடைக்கும் லாபத்தை மத்திய அரசுக்கு டிவிடெண்டாகத் தருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியானது ரூ.87,416 கோடியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாகத் தர ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.48,000 கோடி அளவுக்கு மட்டுமே டிவிடெண்ட் கிடைக்கும் என்றுதான் மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், ரிசர்வ் வங்கியோ ஏறக்குறைய இருமடங்கு தொகையை மத்திய அரசாங்கத்துக்கு அளித்திருக்கிறது.
``உலக அளவில் நிலவும் பூகோள, அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக’’ ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்திருக்கிறது. இப்போது ஒப்புதல் வழங்கப் பட்டுள்ள டிவிடெண்ட் இந்த ஆண்டில் மத்திய அரசுக்குத் தரப்படும் என்றும் ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது.

கடந்த 2012-13-ல் ரிசர்வ் வங்கியானது ரூ.33,000 மட்டுமே டிவிடெண்டாகத் தந்தது. ஆனால், 2019-ல் ரிசர்வ் வங்கியானது ரூ.1,76,000 கோடியை டிவிடெண்டாகத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. அதன் பிறகு, நிதி ஆண்டு 2021-ல் ரூ.1,00,000 கோடிக்குப் பக்கத்தில் டிவிடெண்ட் தந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியானது டிவிடெண்டை அதிகமாகத் தந்திருக்கிற அதே சமயத்தில், எதிர்காலத்தில் ஏற்படும் அவசரகாலச் செலவுகளை சமாளிக்கத் தேவையான நிதியின் அளவையும் சற்று உயர்த்தி இருக்கிறது. இந்த அளவு முன்பு 5.50 சதவிகிதமாக இருந்தது; தற்போது இதை 6 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது.
இவ்வளவு வருமானம் எப்படி வந்தது..?
ரிசர்வ் வங்கியானது மத்திய அரசுக்கு இவ்வளவு டிவிடெண்ட் வருமானம் தருகிறதே, அதற்கு எப்படி இவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்று கேட்கிறீர்களா?
நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு வருமானம் கிடைப்பது ஒரு வகை. இன்னொரு முக்கியமான வகையில் கிடைக்கும் வருமானம், டாலர்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதன் மூலம் கிடைக்கிறது. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் டாலர் மதிப்பானது இந்திய ரூபாய்க்கு எதிராக 82-ஆக இருக்கிறது. அதாவது, 82 ரூபாயை நீங்கள் தந்தால்தான் ஒரு அமெரிக்க டாலர் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால், ரிசர்வ் வங்கியின் வசம் இருக்கும் ஒரு அமெரிக்க டாலரின் சராசரி மதிப்பு 62 - 65 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அதாவது, ரிசர்வ் வங்கி ஒரு டாலரை விற்றால், ரூ.17 முதல் ரூ.20 வரை அதற்கு லாபமாகக் கிடைக்கும்! இந்த டாலரை அடிக்கடி வாங்கி, விற்கும்போது ரிசர்வ் வங்கிக்குக் கொஞ்சம் லாபமும் கிடைக்கும். டாலர் மதிப்பு மிக அதிகமாகக் குறையாமலும், உயராமலும் கட்டுப்படுத்தவும் முடியும்!
நமது நாட்டின் பணவீக்கத்தை ஒருபக்கம் சரியாகக் கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும் வேலையை செய்யும் அதே சமயத்தில், கரன்சிகளை வாங்கி, விற்கும் வேலையையும் சரியாகச் செய்து பெரும் லாபம் சம்பாதித்து மத்திய அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகந்த தாஸுக்கும், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவுக்கும் ஒரு சபாஷ் சொல்லலாம்!