2020-க்குப் பிறகு அதாவது, கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பின் இந்தியா முழுவதும் மாத ஊதியம் மற்றும் சுயதொழில் செய்தவர்களில் சுமார் 40% பேர் தினக்கூலிகளாக மாறியுள்ளதாக உலக வங்கி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

இதில் நகர்ப்புறங்களில் 35% பேர் தினக்கூலிகளாக மாறிவிட்ட நிலையில், அதிகபட்சமாக ஆண்கள் 39% பேரும், பெண்கள் 25% பேரும் தங்கள் மாதச் சம்பளத்தை விடுத்து தினக்கூலிகளாக மாறியுள்ளனர்.
அதே போல, 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலை இல்லாமல் இருந்த 10% ஆண்கள் அதே ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தினக்கூலிகளாக மாறியுள்ளனர். மேலும், பெண்களில் புதிதாக 25% பேர் மாத ஊதியம் பெறுபவர்களாகவும் 25% பேர் தினக்கூலிகளாகவும் மாறியுள்ளனர்.
2017-ம் ஆண்டு வரை வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 20 சதவிகிதத்தில் இருந்து 2022-ல் 28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதே போல, நகர்புறங்களில் 2017-ம் ஆண்டு 16% வேலை செய்யும் பெண்கள் இருந்த நிலையில், 2022-ம் ஆண்டு இது 19.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டிருக்கும் அந்த ஆய்வறிக்கையில், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலை என்ன?
2021-ம் ஆண்டின் நடுப்பகுதியில் கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்த பின், தினக்கூலிகளாக மாறியவர்கள் மீண்டும் மாதச் சம்பளம் பெறுபவர்களாக மாறினார்களா என்கிற விவரங்கள் உலக வங்கி அடுத்தடுத்து வெளியிடும் அறிக்கைகளில் தெரியவரும். 2021, 22-ம் ஆண்டுகளில் நம் நாட்டில் பொருளாதார நிலை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதைத் தொடர்ந்து, தினக்கூலிகளாக இருப்பவர்கள் மாதச் சம்பளம் நிலைக்கு உயர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், இது தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமான நிறுவனங்களிடம் இருந்து வந்த பிறகே உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்!