Published:Updated:

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு - இதன் பாதிப்புகள் என்னென்ன?

மக்கள் தொகை கணக்கெடுப்பு

”மக்கள் தொகை கணக்கெடுப்புதான் ஒரு நாட்டின் அடிப்படை தரவு. அதை வைத்துதான் அனைத்து நல திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்ய முடியும். அந்தத் தரவுகளே இப்படிக் காலாவதியாகி இருந்தால், எந்தவொரு வளர்ச்சியும் முழுமையாகாது!”- வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திவைப்பு - இதன் பாதிப்புகள் என்னென்ன?

”மக்கள் தொகை கணக்கெடுப்புதான் ஒரு நாட்டின் அடிப்படை தரவு. அதை வைத்துதான் அனைத்து நல திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்ய முடியும். அந்தத் தரவுகளே இப்படிக் காலாவதியாகி இருந்தால், எந்தவொரு வளர்ச்சியும் முழுமையாகாது!”- வெங்கடேஷ் ஆத்ரேயா

Published:Updated:
மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ல் இந்தியாவின் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இவ்வாறான கணக்கெடுப்புகளின் அடிப்படையில்தான், நிதி ஒதுக்குதல் முதல் இட ஒதுக்கீடு வரை பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

அடுத்து, 2021ல் நடைபெறுவதாக இருந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, அப்போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் கணக்கெடுப்பை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே சமயம், கொரோனா சமயத்தில் தேர்தல்களும் அதற்கான பிரசாரங்களும் எந்தத் தடையும் இல்லாமல் நடந்தது சர்ச்சையைக் கிளப்பியது. 

Census
Census
புதிய தகவல்கள் வைத்து மட்டுமே நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்கமுடியும். மக்கள் தொகையை கணக்கிட்டால்தான், அரசாங்கம் கிராமப்புறங்களில் கொண்டு வந்த வளர்ச்சி என்ன, கல்வியில் என்ன வளர்ச்சி கொண்டுவந்தனர் என்பதை எல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதல் கட்டமாக குடியிருப்புகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்தத் தகவல்கள் சேகரிக்கப்படும். அடுத்த கட்டமாக ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கே வசிப்பவர்களின் விவரம், வீட்டு விவரம், வருமானம், வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் போன்ற தகவல்கள் பெறப்படும்.

இது குறித்து முக்கிய தகவல்களைப் பொருளாதார வல்லுநர், எழுத்தாளருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, நம்முடன் பகிர்கிறார். ”1871ல் இருந்து தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. 2011ல் கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்து 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் அது நடக்காமல் போனது. அடுத்து கொரோனா பரவல் குறைந்தவுடனே மத்திய அரசு மீண்டும் இந்திய மக்களின் கணக்கெடுப்பை முதல் வேலையாகச் செய்யாமல், மறுபடியும் காலம் தாழ்த்தியிருப்பது மிகுந்த அதிர்த்தியளிக்கிறது. 

வெங்கடேஷ் ஆத்ரேயா
வெங்கடேஷ் ஆத்ரேயா

மக்கள் தொகை கணக்கெடுப்புதான் ஒரு நாட்டின் அடிப்படை தரவு. அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்ய முடியும். அந்தத் தரவுகளே இப்படி காலாவதி ஆகியிருந்தால், அடுத்து அரசு செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் முழுமையான பலனை நிச்சயம் அளிக்காது.

மேலும், அப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவருவதாகக் கூறி, என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்தப்போவதாக அறிவித்திருந்ததால், மக்கள் அந்த இரண்டையும் இணைத்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சிக்கலாக்கியது. 

அதேபோல சாதி வாரியான கணக்கெடுப்பும் இப்போது நாட்டிற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே ஆளும் பா.ஜ.க அரசு சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. சாதி ரீதியான கணக்கெடுப்பையும் மேற்கொண்டால்தான், வாய்ப்பில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும். 
Census
Census

2021ல் நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. முறையான பயிற்சியும், தேவையான தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

கொரோனா பாதித்த சமயத்தில் கூட, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பை தொழில்நுட்ப வசதியுடன் வெற்றிகரமாக செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது.