பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24, நிதி மசோதா (Finance Bill) ஆக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படும். இப்போது இந்த 2023-24 நிதி மசோதாவில் 64 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று, கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை இல்லை என்பதாகும்.

தற்போதைய நிலையில், (2023 மார்ச் 31-க்கு முன்) ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு, முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%), அதற்கு ஏற்ப வருமான வரி கட்ட வேண்டும். கடன் சந்தை ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுக்குள் விற்று லாபம் பார்த்தால் மூலதன ஆதாய வரியாக ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வருமான வரி கட்ட வேண்டும்.
இதுவே மூன்றாண்டுகள் கழித்து கடன் ஃபண்ட் யூனிட்களை விற்றால், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக பணவீக்க விகிதச் சரிக்கட்டலுக்கு (Indexation) பிறகு 20% வருமான வரி கட்டினால் போதும். அதாவது, பணவீக்க விகிதம் வருமானத்திலிருந்து கழிக்கப்பட்டு மீதியுள்ளதற்கு 20% என்கிற நிலையில் முதலீட்டாளர்கள் மிகவும் குறைவாகத்தான் வரி கட்ட வேண்டி வரும்.
கடன் ஃபண்டுகளுக்கும் எஃப்.டி போல் வரி..!
இந்த நிலையில் கடன் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு நிதி மசோதா 2023-24-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2023 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் 35 சதவிகிதத்துக்கும் குறைவாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் சலுகை கிடையாது. (செபி வரையரைபடி முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 65 சதவிகிதத்துக்கு மேல் கடன் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டால், அது கடன் ஃபண்ட் ஆகும்). இந்த மியூச்சுவல் ஃபண்டை நிதி மசோதாவில் Specified Mutual Fund (SMF) எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த ஃபண்டுகளை எப்போது விற்று லாபம் பார்த்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் கடன் ஃபண்டுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் குளோபல் ஃபண்டுகள், தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு ஃபண்டுகள் மற்றும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் சில கலப்பின ஃபண்டுகள் (Hybrid Mutual Funds) ஆகியவற்றுக்கு அவற்றின் முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வருமான வரி கட்ட வேண்டும்.
கடன் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஆண்டுதோறும் வட்டி வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்டுவிடும். உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.1 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருக்கிறார். அவர் இன்னொரு ரூ.1 லட்சத்தை கடன் ஃபண்டிலும் போட்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். இரண்டு முதலீட்டிலும் அவருக்கு ஆண்டுக்கு 10% வருமானம் வருவதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.10,000 வட்டியும், கடன் ஃபண்டில் ரூ.10,000 வருமானமும் கிடைத்திருக்கும். இந்த நிலையில் முதலீட்டாளர் 30 சதவிகித வருமான வரம்பில் வந்தால் அவர் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு 30% வரி அதாவது ரூ.3,000 கட்ட வேண்டும்.

அது போக அவர் கையில் ரூ.7,000 கிடைக்கும் அல்லது ரூ.7,000 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கிலேயே சேரும். கடன் ஃபண்ட் (குரோத் ஆப்ஷன்) முதலீட்டில் அவரின் லாபம் வெளியே எடுக்கப்படாமல் முதலீட்டுக் கணக்கில் சேர்ந்து அது அடுத்து வரும் ஆண்டுகளில் கூட்டு வளர்ச்சி என்கிற முறையில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வருமானம் ஈட்டி தரும்.
அந்த வகையில் எஃப்.டி மற்றும் கடன் ஃபண்ட்க்கு ஒரே வருமானம் கிடைத்தாலும் நீண்ட காலத்தில் எஃப்டி வருமானத்தைவிட, கடன் ஃபண்ட் மூலமான வருமானம் அதிகமாக இருக்கும். அடுத்து இன்னும் ஒரு வசதி, ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் ஃபண்டுகளில் சிறப்பாக இருக்கிறது. அதாவது, கடன் ஃபண்டுகளில் யூனிட்களை எப்போது வேண்டுமானலும் விற்று, விரைவாகப் பணமாக்கிக்கொள்ள முடியும். எஃப்.டி-களில் இடையில் உடைத்து எடுக்க அபராதம் இருக்கிறது; சில டெபாசிட்களில் இடையில் பணம் எடுக்க முடியாது.
வங்கிகள் திவாலாவதைத் தடுக்கும் நடவடிக்கையா?
கடன் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீட்டில் வரிக்கு பிந்தைய நிலையில் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் விவரம் தெரிந்த சிறு முதலீட்டாளர்கள். பெரு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் அதிக தொகையை கடன் ஃபண்டுகளில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், கடன் மற்றும் எஃப்.டி-களுக்கான வட்டி சுமார் 6-லிருந்து 9.5 சதவிகித அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில் ஏற்கெனவே போடப்பட்ட எஃப்.டி-களுக்கு குறைவான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதை ரத்து செய்துவிட்டு, வரிக் குறைவாக கட்டும் கடன் ஃபண்ட்களில் அதிகம் பேர் முதலீடு செய்யும்போது வங்கிகளுக்கு பாதிப்பு வரும். இப்போது அப்படியே பழைய டெபாசிட்களை ரத்து செய்தாலும் புதிதாக அதே வங்கியில் அதிக வட்டியிலான டெபாசிட்களுக்குதான் வரும். வங்கிகளின் செயல்பாடும் பாதிக்காது என மத்திய அரசு திட்டமிட்டிருக்கக் கூடும். கடன் ஃபண்டுகளுக்கு அதிக வரி விதிப்பது மூலம் கூடுதல் வரி வசூல் செய்வது மூலம் வங்கிகளையும் மத்திய அரசு காப்பாற்றி இருக்கிறது எனலாம்.