அரசியல்
அலசல்
Published:Updated:

வைகையின் அடிமடியில் கைவைக்கும் ஈகோ டூரிசம்! - உயிர்வாழப் போராடும் வன உயிரினங்கள்

மேகமலை
பிரீமியம் ஸ்டோரி
News
மேகமலை

இங்கு தங்க அனுமதிக்கப்படும் பயணிகள், அரசு விதித்திருக்கும் எந்த உத்தரவையும் மதிப்பதில்லை

ஐந்து மாவட்ட குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இருக்கும் வைகை ஆறு வறண்டுபோனதற்குக் காரணம், மேகமலை ஆக்கிரமிப்புக்குள்ளானதுதான். அங்குள்ள மூல வைகை ஆக்கிரமிப்பால் அழிந்துபோக ஆறும் வற்றிப்போனது. கடந்த ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டபோது, ‘மூல வைகை உயிர்பெற்றுவிடும்’ என்று மகிழ்ந்தார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது, ‘ஈகோ டூரிசம்’. மேகமலையில் எஸ்டேட்டுகள் வைத்திருக்கும் சில பண முதலைகள், `ஈகோ டூரிசம்’ என்ற பெயரில் இயற்கையைச் சிதைத்துவருவதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

வைகையின் அடிமடியில் கைவைக்கும் ஈகோ டூரிசம்! - உயிர்வாழப் போராடும் வன உயிரினங்கள்
வைகையின் அடிமடியில் கைவைக்கும் ஈகோ டூரிசம்! - உயிர்வாழப் போராடும் வன உயிரினங்கள்

தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலை, புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, சிங்கவால் குரங்கு போன்ற அரிய வகை விலங்குகள் வாழும் பல்லுயிர்ச்சூழல்கொண்ட மலைப் பிரதேசம். ஒரு காலத்தில், தோதகத்தி, கருங்காலி, மஞ்சக்கடம்பு, சந்தனமரம், தேக்கு எனப் பல வகை மரங்கள் நிறைந்திருந்த மேகமலையின் வனப்பகுதி, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு இப்போது தேயிலைத் தோட்டங்களாக உருமாறியுள்ளது. இந்த வகையில், தேயிலை விவசாயம்தான் இங்கு பிரதானம்.

மேகமலையில் வனம் அழிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘மேகமலை - வருசநாடு வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்றவே வனத்துறை திணறிவரும் நிலையில், புதிதாக உருவெடுத்துள்ளது ஈகோ டூரிசம்.

அன்வர்  பாலசிங்கம், பாண்டி, சொர்ணப்பன்
அன்வர் பாலசிங்கம், பாண்டி, சொர்ணப்பன்

மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள் வைத்திருக்கும் எஸ்டேட் முதலாளிகள் 12 தங்கும் விடுதிகளையும் வைத்திருக்கின்றனர். இங்கு தங்க அனுமதிக்கப்படும் பயணிகள், அரசு விதித்திருக்கும் எந்த உத்தரவையும் மதிப்பதில்லை. உதாரணமாக, மேகமலைக்கு மாலை 5 முதல் அதிகாலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. ஆனால், சுற்றுலாப்பயணிகள் இரவு உலா செல்வதால் விலங்குகள் விபத்தில் சிக்குகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வாகனம் மோதி சிறுத்தை ஒன்று பலியானது. வனத்துக்குள் டிரெக்கிங் செல்வது, ஃபயர் கேம்ப் போடுவது, குடித்து கும்மாளமிடுவது எனப் பல விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், வன உயிர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவருகிறது, மேகமலை!

இருக்கிற இம்சைகள் போதாதென்று, இப்போது புதிதாக மேகமலை தென்பழனி முருகன் கோயில் பின்பகுதியில் 120 ஏக்கர் கொண்ட ‘எஸ்.எம்.ஆர் எஸ்டேட்’டில் ஈகோ டூரிசத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. மலைப்பகுதியில், பட்டா நிலமாக இருந்தாலும் மரத்தையோ, பாறையையோ வெட்ட வனத்துறையின் அனுமதி வேண்டும். ஆனால், இப்பகுதியில் பாறைகளை வெட்டி 10 கிலோமீட்டர் தூரத்துக்குப் பாதை அமைத்துள்ளனர். யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வழித்தடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு மூன்று கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.

இது குறித்துப் பேசிய சூழலியல் ஆர்வலர் அன்வர் பாலசிங்கம், “மேகமலையில் வன உயிரினக் கோட்டக் காப்பாளராகப் பணியாற்றிய சொர்ணப்பன், ஓய்வுக்குப் பிறகு மேகமலையில் நிலம் வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்துவருகிறார். பணிக் காலத்திலேயே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு். தற்போது எஸ்.எம்.ஆர் எஸ்டேட் முதலாளி முத்துராமன் என்பவருடன் சேர்ந்து, ‘ஈகோ டூரிசம்’ நடத்த ஏற்பாடு செய்கிறார். அதற்காக வன வளம் சிதைக்கப்படுகிறது. மேகமலை சிதைக்கப்பட்டால், வைகை ஆற்றை நம்பியுள்ள 90 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள கடுமையான கண்காணிப்பைப் போன்று மேகமலையிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்” என்றார்.

எஸ்.எம்.ஆர் எஸ்டேட் மேலாளர் பாண்டியிடம் பேசினோம். “ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சொர்ணப்பன் ஆலோசனையின் பேரில், இங்கு ஈகோ டூரிசம் தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டோம். அதன் அடிப்படையில்தான் பாதை அமைப்பது, விஞ்ச் வசதி, கன்டெய்னர் குடியிருப்பு என அனைத்து வேலைகளையும் செய்துவருகிறோம்” என்றார்.

வைகையின் அடிமடியில் கைவைக்கும் ஈகோ டூரிசம்! - உயிர்வாழப் போராடும் வன உயிரினங்கள்

ஓய்வுபெற்ற வனஅதிகாரி சொர்ணப்பனிடம் பேசியபோது, “உரிய அனுமதி பெற்று ஈகோ டூரிசம் நடத்தலாம். நான் ஓய்வுபெற்ற வன அதிகாரி, தேனியில் பணியாற்றியவன் என்ற முறையில் எஸ்டேட் உரிமையாளர் என்னிடம் ஆலோசனை கேட்டார். அதனடிப்படையில் நானும் ஈகோ டூரிசம் குறித்து ஆலோசனை வழங்கினேன். மற்றபடி அந்தச் சொத்துகள் எனக்குச் சொந்தமானது இல்லை” என்றார்.

புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆனந்த் நம்மிடம், “வனச்சட்டத்தை மீறி ஈகோ டூரிசம் நடத்த ஏற்பாடு நடப்பதாக அறிந்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அதில், வனத்துக்குள் செல்லும் பாதைக்காகக் கற்கள், மரங்கள் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித அனுமதியும் வனத்துறையிடம் வாங்கவில்லை. தண்ணீர் தொட்டி, மண் வீடு கட்ட மட்டும் அனுமதி கோரியிருந்தனர். விரைவில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வனத்துறையினர் மனப்பூர்வமாக பணியாற்றினால் ஒழிய, வைகையையும் இயற்கையையும் பாதுகாக்க முடியாது!