‘இன்னமும் இ.பி.எஸ் ஆதிக்கம்... தொடரும் பழிவாங்கும் படலம்...’ - சர்ச்சையில் நெடுஞ்சாலைத்துறை!

நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்ற முறையில்தான், ‘நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் ஊழல்கள்’ குறித்து என் மகன் ஜூ.வி-யில் கருத்து தெரிவித்தார்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது துறையில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ‘குற்றத்துக்காக’ தி.மு.க ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார் சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி. இதனால், ‘நெடுஞ்சாலைத்துறையில் இன்னமும் இ.பி.எஸ் ஆதிக்கமா?’ என்று சர்ச்சை எழுந்திருக்கிறது.
எடப்பாடி உதவியாளர்கள் மீது புகார்!
சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் உதவி கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பில் இருந்தார். அப்போது, “நெடுஞ்சாலைத்துறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பி.ஏ-க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். முதல்வரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இடமாறுதலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் லாப நோக்கத்தோடு நடக்கிறது” என்று ஜூனியர் விகடனில் கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்து இடம்பெற்ற கட்டுரை 5.7.2017 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘நெடுஞ்சாலைத்துறையில் ஆட்சி செய்கிறார்களா, முதல்வரின் பி.ஏ-க்கள்?’ என்ற தலைப்பில் வெளியானது.

இந்த நிலையில், துறையையும், உயரதிகாரிகளையும் விமர்சித்துக் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தற்போது அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. தமிழ்நாடு அரசு நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்துக்காக அவருடைய ஆறு மாத ஊதிய உயர்வை நிறுத்திவைக்கவும் அரசு முடிவுசெய்திருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம்!
அரசு எடுத்திருக்கும் இந்தத் துறைரீதியான நடவடிக்கைகளை, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார் உதவி கோட்டப் பொறியாளர் முருகேசனின் தந்தை இராமபோயன். அவர் நம்மிடம் பேசுகையில், “நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்ற முறையில்தான், ‘நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் ஊழல்கள்’ குறித்து என் மகன் ஜூ.வி-யில் கருத்து தெரிவித்தார். அதில், ‘முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு உதவியாளர் மணி, நேர்முக உதவியாளர் கிரிதரன், சேகர் ஆகிய மூன்று பேரின் கையில்தான் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பட்டு இருக்கிறது. இவர்களுக்குப் பணம் கொடுத்தால்தான் எந்த வேலையும் நகரும். இது தொடர்பாக எங்கள் உயரதிகாரிகளே புலம்பும் ஆடியோ என்னிடம் இருக்கிறது’ என்று கூறியிருந்தார். அதற்காக என் மகன் முருகேசனிடம் துறைரீதியான விளக்கம் கேட்டுள்ளனர். அதே கட்டுரையில், அப்போதைய சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கோட்டப் பொறியாளர் வெங்கடாசலம் என்பவரும் துறையில் நடந்த ஊழல்கள் குறித்துப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி மீதோ, அவரின் உதவியாளர்கள் மீதோ வெங்கடாசலம் நேரடியாக எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தாததாலோ என்னவோ, அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அமைச்சருக்கு எதிராக வேலை பார்ப்பதாகக் கூறி, என் மகன் முருகேசனை சேலத்திலிருந்து தூத்துக்குடிக்கு மாறுதல் செய்தார்கள் அமைச்சரின் உதவியாளர்கள். இந்தப் பணிமாறுதலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கு நானும், என் மகனும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். சில பல இடர்பாடுகளால் அந்த வழக்கை எங்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதன் பின்னரும் பழிவாங்கும் நடவடிக்கையாக முருகேசனை ஆண்டிபட்டிக்கும், வாணியம்பாடிக்கும், அரியலூருக்கும் அடுத்தடுத்து தூக்கியடித்தார்கள். அங்கெல்லாம் பணியாற்றிவிட்டு தற்போதுதான் மீண்டும் சேலத்துக்குப் பணிமாறுதல் பெற்று வந்திருக்கிறார் என் மகன்.
பழனிசாமி ஆதிக்கத்தில் துறை?
கடந்த ஆட்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக, அப்போது இருந்த அதிகாரிகளே உரிய விசாரணை நடத்தி, ‘மாநிலத் துணைத் தலைவர் என்ற அதிகாரத்தில்தான் அவர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை’ என்று கூறி விசாரணையை முடித்துவிட்டார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்கள் சிலர் அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் இந்த வழக்கை எடுத்து, என் மகனுக்கு மீண்டும் மன உளைச்சலை ஏற்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்சி மாறினாலும், இன்னமும் இந்தத் துறை எடப்பாடி பழனிசாமி ஆதிக்கத்தில் இருப்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது” என்றார் வருத்தத்துடன்.

ஆட்சி மாறியும், நெடுஞ்சாலைத்துறையில் எடப்பாடி பழனிசாமி ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தற்போதைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் விளக்கம் கேட்டோம். “அப்படியெல்லாம் எந்த ஆதிக்கமும் கிடையாது. இந்தத் துறை ஒரு பெருங்கடல். இதில் ஓர் அதிகாரியின் பெயரைச் சொல்லி, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திடீரெனக் கேட்டால், நான் என்ன பதில் சொல்வது... முழு விவரத்தையும் அனுப்பிவையுங்கள். துறை நிர்வாகத்தை கவனிக்கும் இயக்குநரிடம் சொல்லி, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.
அரசுத் துறையைப் பொறுத்தவரை ஊழல் செய்வதைவிட, அதை அம்பலப்படுத்துவதுதான் பெரிய குற்றம்போல!