
ஓவியம்: சுதிர்
‘ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும்’ என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியை குஷி மூடுக்கு மாற்றியிருக்கிறது. ‘அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் முடிந்த கையோடு, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஜரூராகும்’ என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள். இதற் கிடையே உறுப்பினர் சேர்க்கை, தி.மு.க எதிர்ப்பு, கட்சியில் களையெடுப்பு எனக் கட்சிக்குள் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஆறு அம்சத் திட்டத் தைக் கையிலெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனி சாமி. அவரின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் விவரித்தனர்...
“அமைப்புரீதியாக ஒவ்வொரு மாவட்டத் திலும், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்குப் பிடித்தவர்கள் - பிடிக்காதவர்கள் என ஆளுக்கொரு கோஷ்டி வளர்க்கிறார்கள். அவர்களைக் கண்காணிக்க அமைப்புச் செயலாளர்களைக் களத்தில் இறக்கியிருக்கிறார் எடப்பாடி. இந்தக் கண் காணிப்பு வளையம் ஒன்றியச் செயலாளர்கள் வரை விரிந்திருக்கிறது. நிர்வாகிகள்மீது புகார் வரும்பட்சத்தில், அதைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் விசாரித்து, தனக் குத் தகவல் கொடுக்கும்படிச் சொல்லிருக்கிறார் எடப்பாடி. தவறு உறுதிசெய்யப்பட்டால், எந்தச் சமரசமும் இல்லாமல் களையெடுப்பு நடக்கும். பொய்ப் புகார்களை முன்வைக்கும் நிர்வாகிகள்மீதும் நடவடிக்கை பாயவிருக்கிறது. எடப்பாடியின் முதல் ஆக்ஷன் பிளானே அதுதான். இரண்டாவதாக, கட்சியில் அமைப்பு ரீதியாக இருக்கும் 75 மாவட்டங்களைக் குறைக்கத் தீர்மானித்திருக்கிறார் அவர். அதிக எண்ணிக்கையில் மாவட்டக் கழகங்கள் இருப்பதால்தான், கோஷ்டிப் பிரச்னையும் பெரிதாக எழுகிறது. அதைக் களைவதற்காக மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட இருக்கின்றன.

திருத்தப்பட்ட கட்சி விதிகளின்படி, வரும் நவம்பருக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியாக வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவு நிர்வாகிகள் பலம் எடப்பாடியிடம் மட்டுமே உள்ளது. ‘ஜூலை 11 பொதுக்குழு செல்லும்’ என உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி செய்த நீக்கங்கள், நியமனங்கள் அனைத்தும் செல்லத் தக்கதாகிவிட்டன. இதன்படி, பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எனக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட யாருமே பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி யிட முடியாது. தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர் உரிமைச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியும் நடக்கிறது. அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் முடிந்தவுடன், மூன்றாவது திட்டமான இந்தத் தேர்தல் பணிகள் வேகம்பெற உள்ளன.
நான்காவதாக, வழக்கறிஞர் குழுவை வலுப்படுத்தவிருக்கிறார் எடப்பாடி. நவம்பரில் சட்டமன்றம் கூடவிருக்கிறது. அதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து பன்னீரை நீக்கியாக வேண்டும். பன்னீரின் மகனும், தேனி எம்.பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத்தை, அ.தி.மு.க எம்.பி-யாகக் கருத வேண்டாமென மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார் எடப்பாடி. பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் செய்திருக்கும் மேல்முறையீட்டு வழக்கு, விரைவில் விசாரணைக்கு வந்துவிடும். இந்தப் பிரச்னைகளிலெல்லாம், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருத்து முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. அப்போது எழும் சட்டச் சிக்கல்களைச் சரிக்கட்ட, முன்னாள் ஆளுநர் ஒருவர் தலைமையில், சி.வி.சண்முகம், இன்பதுரை உள்ளிட்டவர்களை இணைத்து டெல்லி வழக்கறிஞர்கள் அடங்கிய வலுவான குழு அமைக்கப்படவிருக்கிறது. அ.தி.மு.க-வைப்போலப் பிளவுண்ட கட்சிகள் விஷயத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த கடந்தகால முடிவுகள், நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை ஆராய்ந்துவருகிறது. இதன் மூலமாக, தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பு வாதங்களை வலுவாக முன்வைக்க முடியும்.
`அ.தி.மு.க கழகப் பேச்சாளர்கள், கலைப்பிரிவு நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை’ என்கிற அதிருப்தி இருந்தது. அதைக் களையும் விதமாக, செப்.15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில், அவர்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி, கொடிக்கம்பங்களைப் புதுப்பித்தல், உறுப்பினர் சேர்க்கை என ஒன்றிய, பகுதி அளவிலான பணிகளும் வேகமெடுக்கவுள்ளன. இந்த ஐந்தாவது திட்டப் பணிகளால், தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தன் வசப்படுத்தவிருக்கிறார் எடப்பாடி.
ஆறாவது திட்டம், தி.மு.க எதிர்ப்புதான். உட்கட்சிப் பிரச்னைகளால், கள அரசியலில் அந்த எதிர்ப்புணர்வைத் தக்கவைக்க அ.தி.மு.க தவறிவிட்டது. அதைச் சரிசெய்யும் விதமாக, தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் தொடர் போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல, ஒன்றிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
எடப்பாடியின் இந்த ஆறு அம்சத் திட்டங் களை முழுவீச்சில் செயல்படுத்தினால், மொத்தக் கட்சியும் எடப்பாடியின் முழு கன்ட்ரோலுக்கு வந்துவிடும். எடப்பாடி தலைமையின்கீழ் அ.தி.மு.க செயல்படுவதை டெல்லி பா.ஜ.க மேலிடம் நிச்சயம் ரசிக்காது. அவர்களால் முன்புபோல ‘பவர் பாலிடிக்ஸ்’ செய்ய முடியாது. அந்தச் சமயத்தில், ரெய்டு, கைது எனப் பிரச்னை வந்தால், அதைச் சமாளிக்கவும் வியூகம் வகுத்திருக்கிறார் எடப்பாடி. இதற்காக, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ அமைப்பு களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்றனர் விரிவாக.
‘சசிகலா, பன்னீருடன் எந்தச் சமரசமும் இல்லை. எங்கள் கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிட முடியாது’ என முக்கியமான இரு கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எடப்பாடி. இனி கட்சிக்குள்தான் தன் ஆளுமையை அவர் நிலைநாட்ட வேண்டும். அதற்கு இந்த ஆறு அம்சத் திட்டம் கைக்கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!