Published:Updated:

உலக முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு... கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி!

கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார்
கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் ( என்.ஜி.மணிகண்டன் )

இனி தமிழக கிராமப்புறங்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்...

அமெரிக்காவின் சிலிக்கன்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்மைப்பான TIE மாநாட்டில் (TIECON-2020) தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் உரையாற்றினார்கள்.

கோவிட்-19 நெருக்கடியால் இந்தமுறை இம்மாநாடு இணைய காணொளி மூலம் நடந்தது. 61 நாடுகள் இடம்பெற்றுள்ள இவ்வமைப்பின் 27-வது மாநாட்டில் 4,500 முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழக முதலமைச்சர் சென்னையிலிருந்தும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும் மதுரையில் இருந்தபடி கலந்துகொண்டார்கள்.

TIECON
TIECON

அமெரிக்க நேரப்படி இந்த உலகளாவிய மாநாடு நடந்ததால் இந்தியாவில் உள்ளவர்கள் இரவில்தான் இதில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. இரவு 12.45 மணிக்குதான் முதலமைச்சர் எடப்பாடி பேசினார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கத்திலிருந்து கலந்துகொண்டு நள்ளிரவு 1 மணிக்கு பேசினார்.

''தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழர்களின் உலகளாவிய பங்களிப்பு, அவர்களின் திறமை, வரும் காலத்தில் கிராமத்திலிருந்து தமிழக இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கும் வகையில் கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. உலக நிறுவனங்கள் தமிழகத்தில் அதிலும் தென் தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் உள்ளது" என்று பேசினார்.

இம்மாநாடு பற்றி நம்மிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ''தகவல் தொழில்நுட்பத் துறையில் கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அவர்கள் வசிக்கும் ஊரில் இருந்தபடியே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கடந்த ஆண்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள நம் நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர் நிறுவனங்களில் புறிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தோம். அந்த ஒப்பந்தங்கள் பற்றியும், புதிய திட்டங்கள் பற்றியும் இதில் விவாதிக்கப்பட்டது. மேலும், உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தங்கள் தொழிலை விரிவுபடுத்த தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்பதையும், திறன் வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதையும், கொரோனா அபாயத்தால் வரும் காலங்களில் கிராமப்புறங்களில் இருந்தே இளைஞர்கள் உலகாளவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பங்களிப்பார்கள். அதற்கான கட்டமைப்பு உதவிகளைத் தமிழக அரசு செய்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

மேலும், பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராமங்கள் அதிவேக பைபர் ஆப்டிகல் மூலம் இணைக்கப்பட்டு இணைய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சாட்டிலைட் கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன. ஏற்கெனவே, தமிழக அரசு சார்பில் 54 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களை புதிய தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாலாம். தமிழகத்தில் கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் இன்னும் பல முதலீடுகளைப் பெறவும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகாளவிய பெரும் தொழில் முதலீட்டாளர்களின் மாநாட்டில் முதன்முதலாக மதுரையும் பங்கெடுத்துள்ளது மகிழ்ச்சியானது'' என்றார்.

தமிழகத்தில் தொழில்துறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நிகழ்ச்சியின் மூலம் நன்றாகவே தெரிகிறது!

அடுத்த கட்டுரைக்கு