Published:Updated:

'லீடர்ஷிப் பில்ட் அப்' அரசியல்... எடப்பாடியின் 'தனி ஒருவன்' வியூகம்!

விகடன் டீம்

உளவியல்ரீதியாக மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றால்தான், தலைவனாகப் பரிணமிக்க முடியும்.

எடப்பாடி
எடப்பாடி

ஆளுமைமிக்க தலைவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள, பில்ட் அப் அரசியலைக் கையிலெடுத்துள்ளார் எடப்பாடி. ஆகஸ்ட் 28-ம் தேதி, அரசு முறைப் பயணமாக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சென்னை விமானநிலையம் வரையிலும் தொண்டர்களின் அணிவகுப்பு, பட்டையைக் கிளப்பியது. இப்போதெல்லாம் எடப்பாடி செல்லும் பாதையெங்கும், பத்து அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார். கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. "இவை எல்லாமே, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக எடப்பாடி செய்யும் 'பிராண்டிங்' எனப்படும் 'லீடர்ஷிப் பில்ட் அப்' அரசியல்தான்'' என்கின்றனர் கட்சியின் உள்விவரங்களை அறிந்தவர்கள். விரிவாக படிக்க... http://bit.ly/2lBeGdg

இதுகுறித்து அ.தி.மு.க சீனியர்களிடம் பேசினோம். ''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள், ஆளுமை அரசியல் மூலம்தான் தங்களை ஒரு தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டனர். என்னதான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அவரை கட்சிக்குள்ளேயே தலைவராகப் பார்க்கும் மனப்பான்மை இன்னும் உருவாகவில்லை. மக்களும் அவரை முதல்வராக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை.

எடப்பாடி
எடப்பாடி

இரண்டு மாதங்களுக்கு முன்னர், அரசியல் தலைவர்களை விளம்பரப்படுத்தும் பிராண்ட் ஆலோசனைக் குழு ஒன்று, முதல்வரின் நெருங்கிய உறவினரைச் சந்தித்தது. அவர்கள் கொடுத்த ஐடியாவின்படிதான், கட்சி நிர்வாகிகள் எடப்பாடியின் காலில் விழும் வைபவம் நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அப்துல் ரஹீம், அ.தி.மு.க அமைப்பு சாரா அணியின் கமலக்கண்ணன், மூத்த செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி என, பல சீனியர்களும் முதல்வரின் காலில் விழுந்தனர். இதன்மூலம் எடப்பாடியும் ஜெயலலிதாவைப் போன்ற தலைவர்தான் என வெளிக்காட்ட முயற்சி செய்கிறார். லண்டனில் கோட் சூட் அணிந்து எடப்பாடி வலம்வருவதும் இந்த டீம் கொடுத்த ஐடியாதான்'' என்றார்கள்.

முதல்வருக்கு நெருக்கமான தென்மாவட்ட மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ''உளவியல்ரீதியாக மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றால்தான், தலைவனாகப் பரிணமிக்க முடியும். எளிய விவசாயி என்பது, மக்களைக் கவரவும், ஜெயலலிதா பாணி படாடோபம் என்பது அதிகாரம்மிக்க ஆளுமையாக வெளிக்காட்டவும் என இரட்டைக் குதிரைகளை வண்டியில் பூட்டியுள்ளார் எடப்பாடி. இதன் மூலம் கட்சியின் ஒற்றைத் தலைமைக்கு, தானே தகுதியானவன் என்பதை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார். அதற்கு, 'பிராண்டிங்' எனப்படும் 'லீடர்ஷிப் பில்ட் அப்' அரசியல் எடப்பாடிக்குத் தேவைப்படுகிறது. வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி இந்தியா திரும்புவதற்குள், அவர் கோட் சூட்டில் வலம்வரும் படங்களை தமிழகத்தில் வைரலாக்கி, அவரை ஆளுமைமிக்க தலைவராக முன்னிறுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது" என்றார்.

எடப்பாடி
எடப்பாடி

- எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணத்தில் சில விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன. கிங்ஸ் மருத்துவமனையின் 'நெருக்கடி' பின்னணி முதல் சில அமைச்சர்களால் உருவெடுக்கும் சர்ச்சைகள் வரை அனைத்தையும் விரிவாகத் தரும் ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... கோட்டையைச் சுற்றும் கேள்விகள்!

https://www.vikatan.com/government-and-politics/politics/various-questions-regarding-edappadi-palanisamys-foreign-visit

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/