Published:Updated:

ஜெ. கொண்டுவந்த சைக்கிள் ரோந்து... கைவிட்ட எடப்பாடி ஆட்சி?

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

20 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாரால் கைவிடப்பட்ட சைக்கிள் ரோந்து முறையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கொண்டுவந்தார். அதை எடப்பாடி ஆட்சியும் கைவிட்டுவிட்டது.

Bicycle Patrol
Bicycle Patrol ( Vikatan )

லத்தி, டார்ச் லைட்டுன் விசில் ஊதியபடியே சைக்கிளில் போலீஸ் ரோந்துபோகும் காட்சிகளைக் கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். அந்தக் காலத்தில் சந்துபொந்துகளில் சைக்கிளிலில் போலீஸார் ரோந்து சென்றுகொண்டிருந்தார்கள். காலங்கள் மாற... மோட்டார் பைக், ஜீப், கார் என நவீனத்துக்கு மாறியது போலீஸின் ரோந்துப் பணி. இந்தப் பரிணாமத்தில் சைக்கிள் ரோந்து காணாமல்போனது. ஒரு தலைமுறையினரே பார்க்காமல்போன இந்த சைக்கிள் ரோந்து முறையை மீண்டும் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

Jayalalithaa Inaugurates Bicycle Patrol Scheme
Jayalalithaa Inaugurates Bicycle Patrol Scheme

டூ வீலர் நுழைய முடியாத சிறிய தெருக்கள், சந்துகளில் போய் ரோந்து பணியை போலீஸார் மேற்கொள்ள மைக் வசதிகளுடன் கூடிய 250 ரோந்து சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை 2016 ஜூலை 30-ம் தேதி தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. அதே நாளில்தான் 100 டூ வீலர்களையும் வழங்கினார். இதற்காக 1.12 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த சைக்கிள் ரோந்து திட்டத்தை ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஓர் இடத்தில்கூட சைக்கிள் ரோந்து காட்சியைப் பார்த்தவர்கள் யாருமில்லை.

இந்தத் திட்டத்தில் ஒலி எழுப்பான்கள், எல்.இ.டி விளக்குகள் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டன. ரோந்து செல்லும்போது, பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில், மைக் உள்ளிட்ட அம்சங்கள் சைக்கிளில் இடம்பெற்றிருந்தன. அதோடு இந்த ரோந்துப் பணியில் ஈடுபடும் ரோந்துக் காவலர்களுக்கு, தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மேல்சட்டைகள் அளிக்கப்பட்டன.

Amma Patrol Vehicle
Amma Patrol Vehicle
விகடன்

காவல்துறைக்கு ஆதரவாகச் சட்டசபையில் பேசியது, அவர்களின் குறைகளை ஒருமாத காலம் கேட்டது எனக் காவலர் மீது ஜெயலலிதாவுக்குத் தனிப் பாசம் உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த சைக்கிள் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இந்தத் திட்டம் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ''உடற்பயிற்சி செய்யாததால் பல போலீஸாருக்குத் தொப்பை விழுந்துவிட்டது. இதனால் அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது'' என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ''சைக்கிள் ரோந்து திட்டம் வந்தால் காவலர்களுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்'' எனச் சொன்னார் ஜெயலலிதா. அதனால்தான் இந்தத் திட்டத்தை, கேலி விமர்சனங்களுக்கு நடுவே கொண்டுவந்தார் ஜெயலலிதா.

சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மூன்று சைக்கிள்கள் வீதம் வழங்கப்பட்டன. ஜெயலலிதா தொடங்கி வைத்த புதிதில் ஒருவார காலத்துக்கு இந்த சைக்கிள்களை ரோட்டில் பார்க்க முடிந்தது. அதன்பிறகு, ஸ்டேஷனில் உள்ள பெண் காவலர்களிடம் அந்த சைக்கிள்களைக் கொடுத்து சில காலம் ஓட்டி வந்தார்கள். அதற்குள் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார். இப்போது பல ஸ்டேஷன்களில் இந்த சைக்கிள்கள் ஓரமாகத் துருப்பிடித்து நின்றுகொண்டிருக்கின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸாரால் கைவிடப்பட்ட சைக்கிள் ரோந்து முறையை ஜெயலலிதா மீண்டும் கொண்டுவந்தார். அதை எடப்பாடி ஆட்சியும் கைவிட்டுவிட்டது.

இந்த நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘அம்மா ரோந்து வாகனம்’ (AMMA PATROL) திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். 'அம்மா வழியில் நடக்கும் அரசு' என அடிக்கடி உச்சரிக்கும் எடப்பாடி, அந்த அம்மா கொண்டுவந்த சைக்கிள் ரோந்து திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார் எனக் காக்கிச்சட்டை வட்டாரத்தில் புகைச்சல் கேட்கிறது. ''அம்மா ரோந்து வாகனம் வந்திருக்கு... அம்மா கொண்டு வந்த சைக்கிள் ரோந்து வாகனம் எங்கே?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் போலீஸ் அதிகாரிகள் சிலர்.