Published:Updated:

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது புத்திசாலித்தனமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது புத்திசாலித்தனமா?

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ, அது நடக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஏப்ரல் 10-ம் தேதி முதல் பலவிதமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி அதிர்ச்சியளித்திருக்கிறது தமிழக அரசாங்கம்!

நோய்த்தொற்று மீண்டும் வேகமெடுத்திருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது தவிர்க்க முடியாததே. ஆனால், உரியநேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கத் தவறியதற்கான விலையைத்தான் இப்போது கொடுக்க ஆரம்பித்துள்ளோம் என்பதுதான் வேதனையைக் கூட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெள்ள அதிகரிக்கத்தான் செய்தது. அப்போதே விழித்துக்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் சின்னச் சின்னதாகக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, நோய்த்தொற்றை கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம்.

ஆனால், நடந்தது வேறாயிற்றே! தேர்தலைக் காரணம்காட்டி, நோய்த்தொற்றுத் தடுப்புத் தொடர்பான அத்தனை விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. பிரசாரம் என்கிற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர், பிரதமர் வரை அத்தனை அரசியல் தலைவர்களுமே முகக்கவசம் இல்லாமலேதான் வலம் வந்தனர். மக்களை முட்டிமோத வைத்து சமூக இடைவெளி என்பதையே மறக்கடிக்கச் செய்தனர்.

அனைத்து அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும், கடந்த ஆண்டு கொரோனா நமக்குக் கொடுத்த மரண அடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதற்கான அறிகுறிகள் இல்லாமல்தான் இருந்தன. போதாக்குறைக்கு, ‘கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றியது எங்கள் அரசுதான்’ என்று பிரசார வசனங்களைவேறு வீசினார்கள் ஆளும்கட்சி அரசியல்வாதிகள். இப்படி, கிட்டத்தட்ட 50 நாள்களாக கொரோனா என்கிற நோயையே மறைத்துவிட்டு, இப்போது திடீரென்று ஞானோதயம் வந்ததுபோல கட்டுப்பாடுகளை நீட்டுவது தும்பை விட்டு, வாலைப் பிடிக்கும் கதைதானே!

காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் எனச் சிறுதொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளை விதிப்பதால், சாதாரண மக்கள்தாம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள் என்பதை ஆளும் அரசியல்வாதிகள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து, நல்வாழ்வுக்குப் பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள் நினைத்திருந்தால், டிஜிட்டல், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஆகியவற்றின் மூலமாக மட்டுமே தேர்தல் பிரசாரம் என்று முடிவெடுத்திருக்கலாம். இதைச் செய்திருந்தாலே... கட்டுப்பாடுகள் எனும் கசப்பு மருந்துக்கு வேலையே இல்லாமல் போயிருந்திருக்கும்.

சரி, இத்தோடு நின்றால் பரவாயில்லை. அடுத்தகட்டமாக ஊரடங்கு எனும் ஆயுதத்தையும் கையில் எடுக்க ஆரம்பித்தால்... அதோ கதிதான். அப்படியோர் இருண்ட காலத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லாத வகையில், இனியாவது விழித்துக்கொண்டு செயலாற்றுவார்கள் என்று நம்புவோம்!

- ஆசிரியர்