Published:Updated:

மத்திய அரசின் தார்மீகப் பொறுப்பு..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

மத்திய அரசின் தார்மீகப் பொறுப்பு..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

உலகத்தின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் ஒரு நாளில் மூன்று லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை குறைவதற்குப் பதில், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் 5 லட்சத்தைத் தொட்டுவிடும் என்கிற அச்சம் மக்களிடையே கடும் கவலை யையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தியுள்ளது. எனவேதான், தற்போதுள்ள நிலையை ‘தேசிய நெருக்கடிக்கு ஒப்பான’தாகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில், நாட்டு மக்களைக் காக்க வேண்டியதில் தனக்கிருக்கும் தார்மீகப் பொறுப்பை மத்திய அரசாங்கம் தட்டிக் கழித்துவிடக் கூடாது. நாடு முழுக்க தினமும் பல லட்சம் பேர் பாதிப்படைந்து வரும் நிலையில், ‘எல்லாம் உங்கள் பாடு’ என்று மாநில அரசுகளிடம் சொல்லி, சும்மா இருந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு மாநில அரசும் இந்தக் கொடிய நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியைத் தீவிரமாகச் செய்துவரும் வேளையில், ஏழை மக்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் தாராளமாகத் தர வேண்டியது மத்திய அரசின் கடமை. முக்கியமாக, கொரோனா பாதிப்புக்கேற்ப ஒவ்வொரு மாநில அரசுக்கும் தேவையான நிதி உதவியை மத்திய அரசு இந்த நேரத்தில் செய்தாக வேண்டும். ‘தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்’ என்று முன்பு அறிவித்துவிட்டு, இப்போது ஒருமுறை மருந்தை மாநில அரசுகள் ரூ.400 தந்து வாங்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? தவிர, தயாராகும் மருந்தில் 50% மத்திய அரசுக்கு, 50% மாநில அரசுகளுக்கு என்பது என்ன கணக்கு? 50% மருந்தை வைத்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ஏற்கெனவே செய்ததுபோல, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மீண்டும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தப்போகிறதா? இப்போதுள்ள நிலையில், கட்சி, அரசியல், மொழி, பிராந்தியம் என எந்தப் பாகுபாடும் இன்றி, மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்வதுதான் சரியாக இருக்கும்.

மாநில அரசுகளும் மத்திய அரசுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு, மக்களுக்குத் தேவையானவற்றை மத்திய அரசிடமிருந்து வாங்கித் தர வேண்டும். கொரோனாவைக் காட்டி, கடந்த ஆண்டில் எல்லா மாநில அரசுகளும் ‘ஒரு கைப்பிடி நாட்டு மக்களுக்கு, ஒரு கைப்பிடி தன் வீட்டு மக்களுக்கு’ என்று கொள்ளை அடித்ததைக் கைவிட்டுவிட்டு, மக்களைக் காக்கும் பணியில் நேர்மையாகவும் முழுமூச்சுடனும் செயல்பட வேண்டும்.

இப்போதுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளையே நம்பி இருக்காமல், இந்த நோயில் சிக்காமல் தப்பிக்கும் வழிகளை மக்களும் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா இரண்டாம் அலையிலிருந்து பழுதில்லாமல் எழுந்து வர முடியும். அரசும் மக்களும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism